Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்பில் உயிரியல் தொழிநுட்ப பிாிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவனான மகேந்திரன் தார்த்திக்கரன் என்பவர் முதலாம் இடத்தைப் பெற்று உள்ளார். கூலித் தொழிலாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவன் கிளிநொச்சியில் உருததி்ரபுரம் எள்ளுக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் இடைத்தரக் கல்வி பெறுவதற்காக செல்லும் போது இவரது ஆரம்பப் பாடசாலை தலைமை ஆசிரியர் "நீ உருப்படவே மாட்டாய்" என்று திட்டித் தான் இவரை அனுப்பி வைத்தாராம்.

ஒரு பத்து வயதுச் சிறுவனிற்கு ஒரு பாடசாலை தலைமையின் ஆசிரியர் சொல்லக் கூடிய சொற்களா இவை? ஏன் இந்த வன்மம்? ஏனென்றால் ஏழைக் குடும்பம் என்ற இளக்காரம்; பின் தங்கிய ஊர்களில் இருந்து வருபவர்கள் படிக்க மாட்டார்கள் என்னும் மண்டை கழண்ட சிந்தனை; பெரும்பாலும் இங்கு சாதியும் ஒரு காரணியாக இருக்கக் கூடும்.

ஆனால் இது மண்டை கழண்ட ஒரு தனி மனிதனின் செயலா? இல்லை பெரும்பான்மைத் தமிழ்ச் சமுதாயம் முழுக்க இப்படித் தான் இருக்கிறது. பகுத்தறிவிற்கும், மனித நாகரிகத்திற்கும் கொஞ்சம் கூடப் பொருந்தாத சாதியை வைத்து மனிதரை உயர்வு, தாழ்வு பார்க்கும் சமுதாயமாகத் தான் இருக்கிறோம். யாழ்ப்பாணம் ஒரு பிரதேசம்; வன்னி ஒரு பிரதேசம்; மட்டக்களப்பு ஒரு பிரதேசம். ஆனால் யாழ்ப்பாணத்தவர்களைப் பொறுத்தவரை வன்னி மக்கள் மாடு மேய்க்கத் தான் லாயக்கு; மட்டக்களப்பார்கள் மந்த புத்தி கொண்டவர்கள். ஏழ்மையை வைத்து, சாதியை வைத்து, பிரதேசத்தை வைத்து மக்களைக் கணிப்பவர்களின் சமுதாயத்தில் இப்படியான ஆசிரியர்கள் தான் இருப்பார்கள்.

இந்த மாணவனின் நேர்காணல் வெளி வந்ததும் பலரும் அந்த ஆசிரியரை திட்டித் தீர்க்கிறார்கள். ஆனால் தமிழ்ச் சமுதாயத்தை உள்ளிருந்து அரிக்கும் சாதியைப் பற்றி, பிரதேச வாதத்தைப் பற்றி ஒரு சிலர் தான் பேசுகிறார்கள். ஒரு சிலர் தான் இவைகளிற்கு எதிராகப் போராடுகிறார்கள். பெரும்பான்மையானவர்கள் பேசாமல் மெளனமாக இருக்கிறார்கள். இன்னும் சில அறிவுக் கொழுந்துகளோ இலங்கைத் தமிழ் சமுதாயத்தில் இல்லாத சாதியை, பிரதேச வாதத்தை கதைத்து தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியக் கம்பு சுற்றுகிறார்கள்.

இலங்கை அரசுகள் இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வியை தனியாருக்கு விற்க கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. தொழினுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம் (South Asian Institute of Technology and Medicine) என்னும் தனியார் பல்கலைக்கழகம் மாலபே என்னும் இடத்தில் 2008 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது.

இந்த தனியார் பல்கலைக்கழகத்தையும், இது போன்று மேலும் பல தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்க இருக்கும் இலங்கை அரசின் முயற்சிகளை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தொடர்ச்சியாக எதிர்த்துப் போராடி வருகிறது. "கல்வி விற்பனைக்கு அல்ல"; "மாலபே திருட்டுக் கடையை மூடு" என்னும் முழக்கங்களை முன் வைத்து அவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும், தமிழ் மாணவர் சமுதாயமும் தமக்கென்ன வந்தது என்று வாய் மூடி இருக்கிறார்கள்.

தமிழ் ஊடகங்களோ இலங்கை அரசின் கல்வியை தனியார்மயமாக்கி ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தில் மண் அள்ளிப் போடும் இழி செயலை என்றும் எதிர்த்து எழுதுவதில்லை. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்களைப்  பற்றி எழுதுவதில்லை. மாறாக தனியார் பல்கலைக்கழகங்கள் வந்தால் கூடுதலான மாணவர்கள் பல்கலைக் கழகங்களிற்கு போவார்கள் என்று கிறுக்குத்தனமாக எழுதுகின்றன. தனியார் பல்கலைக்  கழகங்களிற்கு பணக்காரர்களின் பிள்ளைகளைத் தவிர மற்றவர்களால் பக்கத்திலே கூட போக முடியாது. ஊழலும், மோசடியும் நிறைந்திருக்கும் இலங்கை போன்ற நாடுகளில் பணத்தை வைத்திருப்பவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டத்தை விலை கொடுத்து வாங்க முடியும் என்பது தான் யதார்த்தம்.

ஏழைகளிற்கு கல்வி மறுக்கப்படுவதோடு; பணத்தை வைத்துக் கொண்டு மருத்துவர்களாக வெளி வருபவர்களால் ஏழைகளின் மருத்துவமும் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறது. கல்விக் கொள்ளையர்களும், மருத்துவக் கொள்ளையர்களும் இந்திய அரசுடன் சேர்ந்து இந்தியாவின் ஏழை மக்களையும், கல்வியின் தரத்தையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நாம் எதிர்க்கா விட்டால் இலங்கையிலும் இத்தகைய அவலங்கள் தான் அரங்கேற இருக்கின்றன.

இலங்கை அரசு கல்வியை தனியாருக்கு விற்றுக் கொள்ளை அடிக்கப் பார்க்கிறதென்றால் யாழ்ப்பாணத்துப் பிரபல அரச பாடசாலைகளில் மாணவர்களின் அனுமதிக்கு சட்டத்திற்குப் பிறம்பாக கட்டணம் வைத்து பணம் பறிக்கிறார்கள். மாணவர்களின் அனுமதி இலவசம்; ஒரு தவணைக்கு பத்து ரூபா மட்டுமே பாடசாலைகளின் வசதிகளிற்கான கட்டணம் என்று ஒரு காலம் இதே பாடசாலைகளில் இருந்தது. இந்த அநீதியையும் பெரும்பான்மைத் தமிழ்ச் சமுதாயமோ, தமிழ் அறிவுச் சமுகமோ, தமிழ் ஊடகங்களோ கண்டு கொள்வதில்லை. தமிழ் அரசியல்வாதிகள் என்னும் புல்லுருவிக் கூட்டத்தை இங்கு பேசிப் பயனில்லை. ஏனெனில் அவர்கள் எதைத் தான் செய்து கிழித்தார்கள் என்னும் போது கல்விக்கு மட்டும் புடுங்கி விடப் போகிறார்களா?

எமது தமிழ்ச் சமுதாயம் சாதி, சமயம், பிரதேசம் என்று உயர்வு தாழ்வு பார்த்து உழலும் போது "நீ உருப்பட மாட்டாய்" என்பது தான் ஏழை மாணவர்களிற்கான வாழ்த்துப்பா ஆக இருக்கப் போகிறது. இலங்கை அரசின் கல்விக் கொள்ளையை, பாடசாலைகளின் மாணவர்களின் அனுமதிக்கு பணம் வாங்கும் அநீதியை எதிர்க்கா விட்டால் "எல்லோருக்கும் இலவசக் கல்வி" என்ற இலங்கை மக்களின் அடிப்படை உரிமை பொய்யாய், பழங்கதையாய் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதற்குள் கண் திறந்து கல்வியைக் காப்போம்.