தமிழகத்தில் ஜெயலலிதா என்ற கொள்ளைக்காரியின் மரணத்தை அடுத்து சசிகலா என்ற மன்னார்குடி மாபியாக்காரி பின்பக்கம் மண்ணில் தொடக் கூடிய அளவிற்கு குனிந்து கும்பிடும் அடிமைகளின் கட்சியில் பொதுச் செயலாளராக வந்திருக்கிறார். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பதவிகளிற்கு வந்த பிறகு கொள்ளை அடித்தார்கள். மன்னார்குடி மாபியாக்காரியும், அவரது புருசன், அண்ணன்கள், அக்காக்கள், மக்கள், மருமக்கள் மற்றுமுள்ள ஊரை அடித்து உலையில் போடும் உறவினர் கும்பல்கள் எந்தப் பதவியில் இல்லாத போதே தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மொட்டை அடிக்கிறார்கள். எனவே தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களிற்கு வேண்டிய சகல தகுதிகளும் சசிகலாவிற்கு இருக்கிறது. அதனால் நாளை ஒரு நன்னாளில் சசிகலா என்ற மாபியாக்காரி தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகக்கூடும்.
இதை இலங்கைத் தமிழர்கள் பலர் இணைய வெளிகளிலும், முகப்புத்தகங்களிலும் கிண்டல் அடிக்கிறார்கள். ஜெயலலிதா என்ற "ஊத்திக் கொடுத்த ஊழல்காரிக்கு" உதவியாக இருந்த ஒரே காரணத்திற்காக சசிகலா கட்சி ஒன்றின் பொதுச் செயலாளர் ஆகும் அளவிற்கு தமிழ்நாட்டு அரசியல் கேவலமாக இருக்கிறது என்று நக்கல் அடிக்கிறார்கள். இது கேவலம் என்றால் இலங்கைத் தமிழர்களின் அரசியலை என்னவென்று சொல்வது?
தமிழ் மக்களை அரசுப் பொறுப்பில் இருந்து மகிந்த ராஜபக்சா கொன்றான் என்றால் அவனது இராணுவத் தளபதியாக இருந்து தமிழ் மக்களின் மீதான போரை நடத்திக் கொன்றவன் சரத் பொன்சேகா. 2009 வைகாசி மாதத்தில் சேர்ந்து தமிழ் மக்களைக் கொன்றவர்கள் அதிகாரப் போட்டியாலும், கொள்ளைகளில் பங்கு போடுவதில் தங்களிற்குள் ஏற்பட்ட சண்டைகளாலும் எதிரிகள் ஆகிறார்கள். 2010 தை மாதத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த இரு கொலைகாரர்களும் போட்டியிட்டார்கள். தமிழ் மக்களின் கட்சி என்று சொல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கொன்ற கொலைகாரர்களில் ஒருவனான சரத் பொன்சேகாவை எந்த விதத் தயக்கங்களும் இன்றி ஆதரித்தது. கொலைகாரன் சரத் பொன்சேகாவிற்கு வாக்குப் போடுமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டது.
இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த பாதுகாப்பு படைகளை ஆணயிட்டு நடத்திய துணைப் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மைத்திரி சிறிசேனா திடீரென மகிந்த ராஜபக்சவின் அராஜகங்களையும், ஊழல்களையும் எதிர்த்து சவுண்டு விட்டார். 2015 தை மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மனம் திருந்திய மந்திரியான மைத்திரி சிறிசேனாவை மகிந்தவிற்கு எதிரான கூட்டு என்று சொல்லிக் கொண்டு அய்யா சம்பந்தனும் அவர் தம் அடிப்பொடிகளும் எந்த விதமான கூச்சங்களும் இன்றி ஆதரித்தனர்.
பின்பு 2015 ஆவணியில் நடந்த பொதுத் தேர்தலில் மைத்திரி சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்கா என்னும் இரு மக்கள் விரோதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டுச் சேர்ந்து "நாட்டு மக்களிற்கு ஒரு நற்செய்தி, ஒரு மொள்ளமாரிக் கட்சியுனும், ஒரு முடிச்சவிக்கி கட்சியுடனும் சேர்ந்து நல்லாட்சி தரவிருக்கிறோம்; வாக்கு மட்டும் போட்டால் போதும்; மாதம் மும்மாரி பெய்ய வைப்போம்" என்று அறிவித்தது.
இப்படி இலங்கை மக்களைக் கொலை செய்பவர்கள், கொள்ளை அடிப்பவர்களுடன் கூட்டுச் சேர்வதும், தமிழ் மக்களை தம்மை ஒடுக்குபவர்களேயே நம்புங்கள் என்று ஏமாற்றுவதும் தான் தமிழ் மக்களின் கட்சிகள், அவற்றின் தலைவர்கள் என்பவர்களின் வழக்கமாக இருக்கிறது. இவர்களிற்கும், இவர்கள் சொல்லும் தமிழ் மக்களின் எதிரிகளிற்கும் வாக்குப் போடுவது தான் பெரும்பான்மையான தமிழ் மக்களின் வழக்கமாக இருக்கிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து வலதுசாரிப் பிற்போக்குத் தமிழ்த் தலைமைகளின் அரசியல் இதுவாகத் தான் இருக்கிறது. இவர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு இது வரை எந்த விதமான தீர்வையும் பெற்றுத் தந்ததில்லை. அதற்காக போராடியதுமில்லை. எமது அரசியலும், எமது தலைமைகளும் இவ்வாறு இருக்கும் போது தமிழ் நாட்டு மக்களின் அரசியலை விமர்சனம் செய்வதை என்னவென்று சொல்வது!!.