தம் வாழ்வை உதறி எறிந்து விட்டு தமிழ் மக்களிற்காக போராட வந்த போராளிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கொடிய இலங்கை அரசின் இராணுவத்தில்; தாம் யாரிற்கு எதிராக போரிட்டார்களோ அந்த கொலைகாரர்களின் படைகளில் வயிற்றுப்பசி தாளாது இணைந்து கொள்கிறார்கள். தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களின் கொள்ளைகளிற்கு மனிதாபிமான முகமூடி போடும் தன்னார்வ உதவிக் குழுக்களுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள். அவர்களின் துயர நிலையைப் பயன்படுத்தும் மத அமைப்புக்களால் மதம் மாற்றப்படுகிறார்கள்; அல்லது அந்த மத அமைப்புக்களால் தமது திக்கற்ற நிலைக்கு கிடைக்கப்படும் ஆறுதலால் தாமாகவே மதம் மாறுகிறார்கள்.
அண்மையில் போராளிகள் கிறீஸ்தவ சமயத்திற்கும், முஸ்லீம் சமயத்திற்கும் மாறிய ஆவணப்படம் ஒன்று வெளியானது. ஒரு மதத்தில் இருப்பதோ அல்லது இன்னொரு மதத்திற்கு மாறுவதோ தனி மனிதர்களின் விருப்பம். அது அவர்களின் உரிமை. ஒரு மதத்திலே இருப்பதினாலோ அல்லது அதை விட்டு இன்னொரு மதத்திற்கு மாறுவதாலோ மனிதர்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு எந்தக் காலத்திலும் கிடைத்ததில்லை. இனி மேலும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. இந்தப் போராளிகள் சைவ சமயத்தை விட்டு ஏன் மதம் மாறினார்கள்?
எல்லாப் பெரு மதங்களும் அதிகார வர்க்கத்திற்கும், பணக்காரர்களிற்கும் சேவை செய்வதற்காக மட்டுமே இருக்கின்றன. ஆனால் கிறீஸ்தவ மதத்திலோ, புத்த மதத்திலோ, இஸ்லாமிய மதத்திலோ அம் மதங்களைச் சேர்ந்தவர்களிற்கு ஒரு பொய்யான ஆறுதல் அம் மதங்களைச் சேர்ந்த மத குருமார்களினாலும், சபையினரினாலும் கிடைக்கிறது. துயரப்பட்டு, நொந்து போயிருப்பவர்களை அவர்கள் தேடி வந்து அவர்களின் பிரச்சனைகளைக் கேட்கும் போது தற்காலிக மன ஆறுதல் கிடைக்கிறது. ஆனால் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் இந்து சமயத்தில் மற்றவர்களின் துயரத்தில் பங்கு கொள்வது என்பது அறவே இல்லாத விடயம்.
ஏனெனில் பெருந் தெய்வங்களை வழிபடும் இந்துக் கோவில்களில் கடவுளால் கொடுக்கப்பட்ட உரிமை, வேதங்களால் வழங்கப்பட்ட உரிமை என்று புராணப் புழுகுகளைச் சொல்லிக் கொண்டு பிராமணர்கள் மட்டுமே பூசை செய்கின்றனர். பிராமணர்கள் மற்றவர்களைத் தொட்டாலே தீட்டு; அதற்காக குளிக்க வேண்டும் என்னும் மண்டை கழண்ட சிந்தனைகளை கொண்டிருப்பவர்கள். இவர்கள் மற்ற மனிதர்களின் வீடுகளிற்கு சாதாரணமாக போக மாட்டார்கள். தப்பித் தவறிப் போனாலும் தண்ணி கூடக் குடிக்க மாட்டார்கள். (ஆனால் போத்தல்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களைக் குடிக்க அவர்களின் வேதங்கள் அவர்களிற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
ஒரு சைவக் கோவிலை வழிபடும் பிராமணர் அல்லாத ஒருவர் இறந்து விட்டால் அந்தக் கோவிலின் பிராமண மதகுருக்கள் மரண வீட்டிற்கு போக மாட்டார்கள். இறந்தவரின் குடும்பத்தினரின் துயரங்களில் பங்கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். (ஆனால் பின்பு முப்பத்தொராம் நாள் கிரியைகள் செய்யும் போது போய் மணியடித்து விட்டு வேட்டி, சேலை, அரிசி, மரக்கறிகள், பணம் என்பவற்றை பெற்று வருவார்கள்). இப்படியான மதம் போரினால் உறவினரை இழந்து, உடல் அவயங்களை இழந்து, உயிர் வாழ உணவின்றி வாடும் போராளிகளிற்கு எப்படி ஆறுதலைக் கொடுக்கும்?
ஆனால் மற்ற மதங்களிலோ மரண வீடுகளிலும், துக்க நிகழ்வுகளிலும் மதகுருமாரும், சபையாரும் கலந்து கொள்கிறார்கள். துயரங்களில் பங்கு கொள்கிறார்கள். மற்ற மதங்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்றோ, மனப்பூர்வமாகத் தான் துயரங்களில் பங்கு கொள்கிறார்கள் என்றோ இங்கு சொல்ல வரவில்லை. ஆனால் இந்து மதத்தில் ஆறுதல் சொல்வது என்பது அறவே இல்லை என்னும் போது பொய்யாகவேனும் தமக்கு கிடைக்கும் மன அமைதிக்காகத் தான் இந்தப் போராளிகள் மதம் மாறியிருக்கிறார்கள்.
இந்து மதம் இப்படி என்றால் பெரும்பான்மைச் தமிழ்ச் சமுதாயமோ போராளிகளின் துயரங்களைப் பற்றிய நினைப்பே இல்லாமல் இருக்கிறது. கோவில்களையும், தேவாலயங்களையும் எவ்வளவு பெரிதாகக் கட்ட முடியும் என்று போட்டி போடுகிறார்கள். இந்தச் சமுதாயத்திற்காக தம் வாழ்வை இழந்த போராளிகளின் வீடுகள் இடிந்து போயிருப்பதைப் பற்றி கவனம் கொள்வதில்லை. கேளிக்கைகளிற்கும், கொண்டாட்டங்களிற்கும் ஆயிரக் கணக்கில் கூடுகிறார்கள். ஆனால் காணாமல் போனவர்களிற்காக நியாயம் கேட்டும், சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நடத்தப்படும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.
புலம்பெயர் நாடுகளில் குதிரை வண்டியில் அழைத்து வருதல், ஹெலிகாப்டரில் பறந்து வருதல், கப்பல்களில் விருந்து என்று பகட்டு, பணத்திமிர் வாழ்க்கை நடத்தும் கூட்டம் ஒரு வேளை உணவின்றி தவிக்கும் போராளிகளையோ, பொது மக்களையோ நினைத்துப் பார்க்கவே விருப்பமின்றி போலி வாழ்க்கை நடத்துகிறது. அம்மக்களின் துயரத்தை வைத்து சங்கங்களும், அமைப்புக்களும் வைத்து பதவிகளும், பட்டங்களும் தேடிக் கொள்கிறார்கள்.
நாட்டிற்காகவும், மக்களிற்காகவும் தம் வாழ்வை இழந்த போராளிகள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். ஆனால் போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்; ஓடி ஒழித்தவர்கள் எல்லாம் இன்று தமிழ் மக்களின் தலைவர்கள் என்று வலம் வருகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகி பரிவட்டம் கட்டிக் கொண்டு திரிகின்றார்கள்.
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது
மனிதர்களால் நெருப்பினில் நித்திரை கொள்ள முடியலாம், ஆனால் வறுமை சூழ்ந்த வாழ்வில் கண் மூடித் தூங்கவே முடியாது என்கிறான் அய்யன் வள்ளுவன். நமக்காக தம் வாழ்வைத் தியாகம் செய்த போராளிகளை கை விடும் நம் சமூகம் மண் மூடிப் போகட்டும்.