Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புத்தனின் உருவத்தை உடலில் பச்சை குத்தியதற்காக ஒரு வெளிநாட்டவரை புத்தமதத்தை அரசமதமாக கொண்ட இலங்கை அரசு நாட்டிற்குள் வர அனுமதி மறுத்து வெளியேற்றி இருக்கிறது. கெளதம சித்தார்த்தனின் அகிம்சை தத்துவத்தை காலில் போட்டு மிதிக்கும் இலங்கையின் கொலைகார அரசு பச்சை குத்தியதை பெரிய விடயமாக எடுத்தது உங்களிற்கு வியப்பை தரலாம். ஆனால் மதவாதிகள் எப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார்கள். மதத்தை வைத்து மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு தங்களின் கொள்ளைகள நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

கெளதம சித்தார்த்தனின் வரலாறு உண்மையோ,பொய்யோ என்று தெரியாது. ஆனால் அவனின் பெயரில் வழங்கப்படும் தத்துவங்கள், நடந்ததாக சொல்லப்படும் கதைகள் எந்த மத தத்துவங்களை விடவும் யதார்த்தமானவை. உண்மையில் சித்தார்த்தன் மதத்தை மறுத்தவன். பிராமணர்களின் நால்வருணம் என்னும் கொடியசிந்தனை முறைகளிற்கு எதிராக எழுந்த அஜீவகம், சமணம் போன்ற மதங்களையும் சார்வாகம் என்னும் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட ஆதிப் பகுத்தறிவாளர்களின் விவாத அறிவியல், பகுத்தறிவு போன்ற சிந்தனை மரபுகளையும் ஒட்டி அவனது தத்துவங்கள் இருக்கின்றன.

ஒரே மாதிரியான இரு கதைகள் கிறீஸ்தவ மதத்திலும், புத்த மதத்திலும் இருக்கின்றன. இரண்டு கதைகளுமே மரணம் தொடர்பான கதைகள். அருளப்பர் என்று அழைக்கப்படும் யோவானின் சுவிசேசத்தில் ஒரு கதை வருகிறது. பெத்தானியா என்ற ஊருக்கு வரும் யேசு கிறிஸ்து லாசரு என்ற அவரின் நண்பனின் வீட்டிற்கு போகிறார். "எவ்வளவு நாளும் எங்கே போயிருந்தீர் குருவே, லாசரு இறந்து விட்டான்" என்று அவனின் சகோதரிகள் மரியாவும், மார்த்தாவும் கண்ணீர் விடுகிறார்கள். "அவன் இறக்கவில்லை, அவனின் கல்லறைக்கு கூட்டிச் செல்லுங்கள்" என்கிறார் யேசு. கல்லறைக்கு முன்னால் நின்று "லாசரு எழுந்திரு" என்று சொல்ல லாசரு உயிர் பெற்று வருகிறான்.

தன் சிறுவயது மகனை இழந்த தாய் சித்தார்த்தனின் காலடியில் விழுந்து கதறுகிறாள். தனது வாழ்வின் ஒரே ஆதாரமான மகனை மறுபடி உயிர்ப்பித்து தருமாறு புத்தனிடம் கேட்கிறாள். சித்தார்த்தன் சொல்கிறான் "மரணம் வராத ஒரு வீட்டில் இருந்து கடுகு வாங்கி வா. நான் அவனை மறுபடி உயிர்பெறச் செய்கிறேன்". ஊர் முழுக்க கடுகு கேட்டுச் சென்ற தாய் திரும்பி வருகிறாள். மரணம் வராத வீடு என்று ஒரு வீடும் இல்லை என்ற வாழ்வின் அடிப்படையை விளங்கிக் கொண்டு வந்து கெளதம சித்தார்த்தனை வணங்கி நின்றாள். ஒரே கதை ஆனால் புத்தனின் தத்துவம் பகுத்தறிவை சொல்கிறது. வாழ்வின் உண்மையை, நிதர்சனத்தை சொல்கிறது. பிறப்பு என்ற தொடக்கம் இருக்குமாயின் இறப்பு என்ற முடிவு வந்தே தீரும் என்ற இயற்கையின் சுழற்சியைச் சொல்கிறது. ஆண்டவர்கள், அற்புதங்கள் என்று ஒன்றுமில்லை. எவராலுமே யதார்த்தத்தை மாற்ற முடியாது என்பதை உணர்த்துகின்ற சிந்தனை அது. 

"கடவுள் இருக்கிறாரா இல்லையா" என்று கெளதம சித்தார்த்தனிடம் கேட்டார்கள். "எனக்குத் தெரியாது, உங்களிற்கு நோய் வந்தால் மருந்தைக் குடியுங்கள். நோய் எப்படி வந்தது என்று யோசித்துக் கொண்டிருக்காதீர்கள்" என்று அவர் சொன்னார். இந்த கெளதம சித்தார்த்தனைத் தான் கடவுளாக்கி இலங்கையின் மரண வியாபாரிகள் பாமர சிங்கள மக்களை ஏமாற்றுகிறார்கள். மகாவம்சம் முதல் பொதுபலசேனா வரை கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள். இன்றைய நேபாளத்தின் கபிலவஸ்து அல்லது லும்பினி என்ற நகரங்களில் பிறந்து இன்றைய இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் குசிநாகரில் இறந்தவர் என்று புத்த கதைகள் சொல்லும் போது அவர் இலங்கைக்கு வந்தார் என்று இவர்கள் காவியம் பாடுகிறார்கள்.

இயக்கர்கள், நாகர்கள் என்ற மனிதர் பாதி, அரக்கர் பாதி சேர்ந்தவர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்று மகாவம்சம் போன்ற காவியங்கள் சொல்கின்றன. எந்தப் பகுத்தறிவு உள்ள மனிதனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாத இந்த அம்புலிமாமா கதைகள் உள்ள மகாவம்சத்தை வரலாறு என்று சொல்லிக் கொண்டு அநகாரிக தர்மபாலா முதல் பொதுபலசேனா வரையான அயோக்கியர்கள் பாமரச்சிங்கள மக்களின் மனதில் இனவாதம், மதவாதம் என்னும் நச்சுவிதைகளை விதைக்கிறார்கள். ஏழைச்சிங்கள மக்களின் மனதில் தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், மற்றவர்கள் அன்னியர்கள் என்னும் பிரிவினையை இந்த நச்சுவிதைகள் பெருமரமாக வளர்த்து விடுகின்றன. சிங்களமக்களினது வேலைகளை, நிலத்தை, பொருளாதாரத்தை இந்த அன்னியர்கள் தட்டிப்பறிக்கின்றார்கள் என்று இந்த மதவாதிகளும், அவர்களை வளர்த்து விடுபவர்களான இலங்கையின் அரசியல்வாதிகளும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

தமிழ் மொழியுடன் பெருமளவு ஒற்றுமைகளை கொண்டிருக்கும் சிங்களமொழியை ஆரியமொழி என்று பொய்யான இலக்கணம் கொடுக்கிறார்கள். அது இந்திய ஆரிய மொழி என்றால் சிங்களம் இந்தியாவின் எந்த பகுதியிலும் ஏன் பேசப்படுவதில்லை என்ற கேள்விக்கு விடை எவரிடமும் இல்லை. அல்லது இந்தியாவில் சிங்களம் பேசப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்களோ, இலக்கிய ஆதாரங்களோ இல்லையே என்ற கேள்விக்கும் எந்தக் காலத்திலும் மறுமொழி இல்லை. புத்த மதம் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்த மதம். அப்படி என்றால் புத்த மதம் வருவதற்கு முதல் சிங்கள மக்கள் பேசிய மொழி என்ன? அந்த மொழியின் மொழிக் குடும்பம் என்ன? ஆந்திராவில் இருந்து தென் கோடியான தமிழ்நாடு வரையிலும் திராவிடப் பிரிவைச் சேர்ந்த மொழிகளும், பழங்குடியினரின் மொழிகளுமே மட்டுமே பேசப்படுகின்றன. ஆந்திர எல்லையில் இருந்து ஆரியமொழி எங்குமே பேசப்படுவதில்லை என்னும் போது கடல் கடந்து இருக்கும் இலங்கையின் சிங்கள மொழி மட்டும் எப்படி ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்க முடியும்?  

இனமத வெறியர்களின் மூலதனமே பொய்களும், புளுகுப் புராணங்களும் தான். அதனால் தான் புத்தனின் உருவத்தை பச்சை குத்தியது புத்தமதத்திற்கு எதிரானது என்று மதவாதம் பேசி விட்டு, ஆசைகளே மனிதரின் துன்பங்களிற்கு காரணம் என்று சொன்ன புத்த தத்துவத்தை மண்ணிலே போட்டு மிதித்து விட்டு அவுஸ்ரேலிய சூதாடிக்கு  கேளிக்கை விடுதி கட்ட இடம் கொடுக்கிறார்கள். புத்தனின் புனிதபூமி என்று சொல்லிக் கொண்டு மக்களின் நிலங்களைப் பறிக்கிறார்கள். ஆனால் அன்னிய பெருமுதலாளிகள் இந்த இலங்கை மண்ணை நஞ்சாக்கும் இரசாயனங்களை அள்ளித் தெளிப்பதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். அதற்கெதிராக போராடுபவர்களை கொன்று குவிக்கிறார்கள். 

பிராமணர்கள் யாகங்கள் செய்யும் போது மிருகங்களை பலி கொடுக்கும் கொடுமையை, முட்டாள்தனத்தை எதிர்த்தவன் கெளதம சித்தார்த்தன். ஆனால் தமிழ்மொழி பேசுபவர்கள் என்னும் ஒரே காரணத்திற்காக தமிழர்களை கொல்கிறார்கள். தமது வறுமைக்கு வழி கேட்டதற்காக, சமத்துவம் வேண்டும் என்று போராடியதற்காக சிங்களமக்களையே கொன்றார்கள். வேறொரு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக முஸ்லீம்களை கொல்கிறார்கள்.அகிம்சையை தூக்கிப்பிடித்த சிந்தனையை குழி தோண்டிப் புதைத்து விட்டு இலட்சக்கணக்கான தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை கொல்லும் அநகாரிக தர்மபாலா, ஜெயவர்த்தனா, பிரேமதாசா, மகிந்த ராஜபக்சா, மைத்திரி, ரணில், பொதுபலசேனா, மட்டக்களப்பு விகாரையின் மண்டை கழண்ட பிக்கு போன்றவர்களால்  கெளதம சித்தார்த்தன் இலங்கையில் தினமும் கொலை செய்யப்படுகிறான் என்பது தான் உண்மையான வரலாறு.