Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆயிரம் ஆயிரம் மக்கள் எரிநெருப்பில் கருகி மண்ணிற்குள் புதைந்தார்கள். பாலுக்கு பாலகன் வேண்டி அழ பாற்கடல் ஈந்த பிரான்கள் பல்லாயிரம் பாலகர்கள் பாலுக்கல்ல, தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டி அழுத போதும் இரங்கி வரவில்லை. இலங்கை இராணுவத்தினால் சிதைக்கப்பட்ட எம்பெண்கள் "என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கை விட்டீர்" என்று கதறி அழுத போது "நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன்" என்று சொன்ன எந்த கர்த்தரும்  எம்பெண்களுடன் இருக்கவில்லை. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் படைத்து கும்பிட்ட கடவுள்கள் கண்ணீரும், செந்நீரும் கலத்து ஓட கதறிய போதும் வரவில்லை.

ஆனால் சிங்களப் பேரினவாதிகளின் ஆயுதங்கள் சிறிய இடைவேளை எடுக்கும் இடைவெளியில் தமிழ் மண் எங்கும் மீண்டும் கோயில்கள், கோபுரங்கள் புதிது, புதிதாக எழுகின்றன. ஆசாமிகள், ஆன்மீக மாபியாக்கள் ஆச்சிரமங்கள் கட்டுகிறார்கள். மகிந்த ராஜபக்சவிற்கும், மைத்திரி சிரிசேனாவிற்கும் ஆசீர்வாதம் கொடுக்கும் அந்த ஆசாமிகள், கொலைகாரர்களை அண்டிப் பிழைக்கும் ஆன்மீக கிரிமினல்கள் தமிழ் மக்களிற்கு ஆறுதல் சொல்ல, அருள்வாக்கு சொல்ல ஆச்சிரமங்கள் திறக்கிறார்களாம். சிவன் திரிசூலம் ஏந்தியபடி முயலகனை காலிலே போட்டு மிதித்தபடி நிற்கும் போது "அன்பே சிவம்" என்று கதையளந்தபடி இந்த இந்திய முதலாளிகள், உளவுநிறுவனங்களின் அல்லக்கைகள், காவி உடுத்த கயவர்கள் வருகிறார்கள்.

உலகில் எத்தனை கிறீஸ்தவ சபைகள், பிரிவினர்கள் உள்ளனரோ அத்தனை கிறீஸ்தவ சபைகளும் தமிழ் மண்ணில் கிளைகள் திறக்கிறார்கள். அய்ரோப்பிய நாடுபிடிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்தபோது கூட வந்து மக்களின் பசியையும், அறியாமையையும், சாதிக்கொடுமையும் பயன்படுத்தி கிறீஸ்தவத்தை புகுத்தினர். ஆயுதங்களுடன் வந்து நாட்டை கொள்ளையடிக்கும் ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து நின்று கொண்டு "ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு", "திருப்பி அடிக்காதே" என்று மக்களிற்கு போதித்தனர். காலனியக் கொள்ளையர்கள் நாட்டைக் கொள்ளையடிக்கும் போது, மக்களைக் கொல்லும் போது அமைதியாயிரு என்பதே இந்த திருவாசகங்களின் விஞ்ஞான விளக்கம். இன்று நவதாராளமய பொருளாதார வல்லரசுக் கொள்ளையர்களை நியாயப்படுத்த அவர்கள் மறுபடி வருகிறார்கள்.

இஸ்லாமிய மதவாதிகள் மதம் மட்டுமே முஸ்லீம் மக்களின் வாழ்க்கைக்கு வழி காட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ரிசானா போன்ற ஏழைச் சிறுமிகள் வறுமையின் கொடுமையினால் பள்ளிப்படிப்பை பாதியில் விடுகிறார்கள். தாய், தந்தையரை, உடன் பிறந்தோரை விட்டு பாலைவனங்களில் உடல் கருக உழைக்கிறார்கள். 

அரபுக்காரர்களின் சித்திரவதைகளிற்கு, பாலியல் தொல்லைகளிற்கு பயந்து பயந்து உயிர்வாழ்கிறார்கள். அம்மாவின் மடியில் தலை வைத்து உறங்க வேண்டிய ரிசானா என்னும் சின்னஞ்சிறு குஞ்சின் தலை பாலைவனத்து மதப்பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டு மண்ணில் வீசப்பட்டது.

பொதுபல சேனா சிங்கள மக்களின் வறுமைக்கு காரணம் தமிழர்கள், முஸ்லீம்கள், கிறீஸ்தவர்கள் என்று சிங்கள மக்களிற்கும், இலங்கையின் மற்ற இன மக்களிற்கும் இடையில் முரண்பாட்டை ஊதி வளர்க்கிறது. பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அநகாரிக தர்மபாலா சொன்ன அதே பொய்களைத் தான் இன்று இவர்கள் சொல்கிறார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சிங்கள மக்களிற்கு சேவை செய்யவே பிறந்தோம், உயிரைக் கொடுத்தும் இலங்கையையும், புத்த தருமத்தையும் காப்பாற்றுவோம் என்று வீரவசனம் பேசும் தலைவர்களே இலங்கையை ஆண்டு வருகிறார்கள். தமிழ் மக்களோ, முஸ்லீம்களோ, கிறீஸ்தவர்களோ என்றைக்கும் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில்லை. பின்பு எப்படி இலங்கையின் வறுமைக்கு இலங்கையின் மற்ற இன மக்கள் பொறுப்பாக முடியும். ஆனால் போதுபல சேனா போன்ற பேரினவாதிகள் தமது எஜமானர்களான இலங்கையின் ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்காக, அவர்களின் மக்கள் விரோத கொடுங்கோன்மையை, ஊழல்களை மூடி மறைப்பதற்காக இனவாதத்தை தூண்டுகிறார்கள்.

இவ்வளவு துயரங்களிற்குப் பின்னும், வரலாறு காணாத இழப்புகளிற்குப் பின்னும் தமிழ்மக்கள் ஏன் இன்னும் பகுத்தறிவு கொண்டு பார்ப்பதில்லை. எம் குழந்தைகள் ஏங்கித் தவித்திருக்கும் போது கல்லிற்கு தேனும், பாலும் கரைத்து ஊற்றி கண்ட பலன் என்ன என்று ஏன் யோசிப்பதில்லை. இடிந்து போன கோயில்களைக் கட்டும் போது மழை போல் பெய்த குண்டுகளினால் மண் மூடிப்போன  பாடசாலைகளை மறுபடி கட்ட வேண்டும் என்று ஏன் நினைத்துப் பார்ப்பதில்லை. மலை பிளந்து மண் சரிந்து மரணப்பலி எடுத்த மலையகத்து மண்ணை ஏன் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

உலகம் தட்டை என்று சொன்ன வில்லேஜ் விஞ்ஞானிகள், தலையில் எழுதியதை தலைகீழாக நின்றாலும் மாற்ற முடியாது என்று மற்றொரு தத்துவத்தை சொல்லி மக்களை பசியையும்,பட்டினியையும் சகித்துக் கொண்டு வாழச் சொல்கிறார்கள். ஆனால் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் "மாறும் என்ற சொல்லைத் தவிர மற்றதெல்லாம் மாறும்" என்று விண்ணதிர முழங்குகிறது. ஆம், மக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும். உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து போராடும் போது தான்  பசியும், பட்டினியும்; உயர்வும்,தாழ்வும் இல்லாத உலகு ஒன்று எழும்