தன்னை நாட்டை விட்டு வெளியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது என கூறிய முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் எனி்னும் தற்போது இந்த விடயம் முடியாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வருட சிறைத்தண்டனையின் பின்னர் நேற்றைய தினம் விடுதலையான குமார் குணரட்னம் இன்று (03/12/2016) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
வீசா விதிமுறைகளை மீறி அரசியலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குமார் குணரத்னத்திற்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் ஒரு வருட சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுதலையான அவர், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
அரசாங்கம் தனது பிரஜாவுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பட்சத்திலேயே தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அங்கு உரையாற்றி புபுது ஜெயகொட, ஜனநாயகத்திற்க்கான போராட்டம் முடிவுக்கு வந்துவிடவில்லை. ஒரு வருடத்திற்கு முன்னர் அரசியல் கட்சிகள், அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள்; ஜனநாயக அடிப்படையிலான போராட்டத்தின் சில அடிப்படை சுலோகங்கள் கொண்டு இணைந்து போராட்டத்தினை ஆரம்பித்தோம். இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை மட்டுமே அடைந்துள்ளோம். இன்னமும் போக வேண்டிய தூரம் மிகப்பெரியது என இந்த கூட்டு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டணியின் தலைவர் டாக்டர் தேவசிறி, ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் லினஸ் ஜயதிலக்க, ஐக்கிய சோசலிசக் கட்சி தம்மிக்க டி சில்வா உட்பட ஜனநாயகத்திற்க்கான போராட்டக்காரர்கள் அமைப்பினை சேர்ந்த பலர் உரையாற்றினர்.