விசா காலாவதியான நிலையில் நாட்டில் தங்கியிருந்தாக கைது செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் இன்று விடுதலை செய்யப்பட்டார். 2015 நவம்பர் 4ம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு கேகாலை நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. இன்று விடுதலையடைந்த தோழர் குமார்; குணரத்தினத்தை அழைத்து வருவதற்காக பெருந்தொகையான முன்னிலை சோஷலிஸக் கட்சித் தோழர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர்.
அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், “ஒரு வருடமும் நான்கு மாதங்களும் சிறையிலிருந்து விட்டு இன்று விடுதலையாகி வந்திருக்கிறேன். இன்றிலிருந்து நாட்டு மக்களோடு அரசியல் செய்ய முடியுமென நினைக்கின்றேன். எனது பிறப்புரிமையான குடியுரிமை சம்பந்தமான பிரச்சினை இன்னும் முடியவில்லை. இது சம்பந்தமாக அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. அரசாங்கம் எனக்கு மூன்று மாதங்களுக்கு விசா தந்துள்ளது. இந்த காலத்தின் போது தான் எனது பிறப்புரிமையான குடியுரிமை சம்பந்தமான பிரச்சினையை பேசப்பட வேண்டுமென நினைக்கின்றேன். நான் கைது செய்யப்பட்டதிலிருந்து எனது விடுதலைக்காக எனது கட்சியான முன்னிலை சோஷலிஸக் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள், ஜனநாயகத்தை விரும்புவோர், சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், இடதுசாரிய செயற்பாட்டாளர்கள் போன்றோர் தியாகத்தோடு செயற்பட்டார்கள்" எனக் கூறினார்.
இச்சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “எனது அரசியல் உரிமையை பெற்றுக் கொள்ளும் பிரச்சினையானது இந்நாட்டின் ஜனநாயகத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும், ஜனநாயகத்தை பாதுகாப்பது சம்பந்தமான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே எனது விடுதலையை நான் பார்க்கின்றேன். நான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து எனது விடுதலைக்காக கருத்தரங்குகள் நடத்தி, ஆர்ப்பாட்டங்கள் செய்து, போஸ்டர்கள் ஒட்டி, சத்தியாக்கிரகம் செய்து சமூகத்தில் ஒரு கருத்தை உருவாக்குவதற்கு ஜனநாயகத்தை விரும்பும் முற்போக்கு சக்திகள், நபர்கள். இடதுசாரிய அமைப்புகள் தியாகத்தோடு பாடுபட்டன.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப நான் சிறைத்தண்டனை அநுபவித்து விட்டு வந்துள்ளேன். எனது பிறப்புரிமையான குடியுரிமையை கேட்டு பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளோம். விண்ணப்பங்களையும் சமர்ப்பித்துள்ளோம். 2015 நவம்பர் 4ம் திகதி நான் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து விண்ணப்பித்த வண்ணமிருந்தோம், ஆனால், அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை இருக்கவில்லை. முறைப்படி விண்ணப்பிக்க வேண்டுமென்று அரசாங்கம் சொல்வது நகைப்பிற்குரிய விடயம். முறையான விண்ணப்பங்களை ஏற்கனவே நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களுக்காகவே நான் கைது செய்யப்பட்டேன். மீண்டும் விண்ணப்பிக்குமாறு கேட்கிறார்கள்.
பிரச்சினையில்லை, எங்களுக்கு எப்போதும் போராட்டத்தின் மீதும் கட்சியின் நெஞ்சுறுதி மீதும் நம்பிக்கை இருக்கின்றது. நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் முற்போக்குவாதிகளின் பங்களிப்பில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். வரலாறு பூராவும் நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். எனது குடியுரிமை சம்பந்தமாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது குறித்து உறுதியான நம்பிக்கை எங்களுக்கு இல்லை. முந்தைய அரசாங்கமும், இன்றைய அரசாங்கமும் அதன் தலைவர்களும். அவர்களது அதிகாரத்திற்காக, அவர்களது நிகழ்ச்சி நிரலின்படியே செயற்படுகிறார்கள். அதற்கேற்பவே தீர்மானமெடுக்கின்றார்கள். நாட்டின் இன்னொரு அரசியல் கட்சி செயற்பாட்டாளரின் அரசியல் உரிமையை பாதுகாக்கவோ, அது குறித்து தீர்மானமெடுக்கவோ மாட்டார்கள்.
அரசியல் செய்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. நான் இலங்கையில் இருக்கின்றேனா அல்லது வேறு நாட்டில் இருக்கின்றேனா என்பது எனது அரசியல் செயற்பாடுகளுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. சிறைச்சாலையும் அதற்கு பிரச்சினையாக இருக்கவில்லை என குமார் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார். சிறையிலிருப்பவர்களோடு அரசியல் செய்வதிலும் எனக்கு பிரச்சினையில்லை. சிறையிலிருப்பவர்களும் இந்நாட்டு மக்கள் தானே. சிறையிலோ, வெளியிலோ எனது அரசியல் பயணம் தொடரும்” என்றார்.