கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்தினம் நாளை(02) அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் ஒருபோதும் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார் என்று என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
குமார் குணரத்தினம் ஸ்ரீலங்கா பிரஜாவுரிமையைப் பெற வேண்டுமாயின் அவுஸ்திரேலியக் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்த உள்விவகார அமைச்சர் எஸ்.பி நாவின்ன, அவர் அதற்கான விண்ணப்பத்தை சமர்பித்தால் பரிசீலிக்க முடியும் என்றும் கூறினார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நடைபெற்றது.
விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 23இன் கீழ் 2 என்றதற்கு அமைய ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, குமார் குணரத்தினம் தொடர்பான கேள்வியை அமைச்சரிடம் தொடுத்தார்.
“முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் கடந்த 2015 ஜனவரி 15ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு வந்தார். அதன் பின்னர் ஜனவரி மாதம் 28ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்டார். எனவே இவர் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன” - என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. நாவின்ன “பிரஜாவுரிமைக்கு தகுந்த விண்ணப்ப முறைகளை பின்பற்றி விண்ணப்பம் செய்தால் அதுபற்றி பரிசீலனை செய்வதற்கு தயார். அவர் சார்பில் இன்றைய தினம் எனக்கு குறித்த விண்ணப்பத்தை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். குமார் குணரத்தினத்தை ஒருபோதும் நாட்டிலிருந்து வெளியேற்ற மாட்டோம். ஏனென்றால் அவரது பெற்றோர் ஸ்ரீலங்காவிலேயே இருக்கின்றனர். அத்துடன் இரட்டை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் தகுதி அவருக்கு உள்ளது. அதை விடுத்து ஸ்ரீலங்கா பிரஜாவுரிமையை நேரடியாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அவுஸ்திரேலியக் குடியுரிமையை அவர் இரத்து செய்ய வேண்டும்” - என்று குறிப்பிட்டார்.
இதனை அடுத்து முன்னிலை சோசலிசகட்சியின் பிரச்சாரா செயலாளர் புபுது ஜெயகொட மற்றும் அஜித் குமார, ரவீந்திர முதலிகே கொண்ட குழுவினர் குடியேற்ற அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். இங்கு இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பிரகாரம் நாளை விடுதலையாகும் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் மீண்டும் ஒரு முறை (மூன்றாவது தடவை) தனது இலங்கை குடியுரிமையினை மீளக்கோரி விண்ணப்பத்தினை சமர்பிக்கவுள்ளார். அவரது விண்ணப்பத்திற்க்கான பதிலை குடிவரவு அதிகாரிகள் அளிக்கும் காலம் வரை இலங்கையில் குமார் குணரத்தினம் தங்கி இருக்க தற்காலிக விசாவை வழங்கி உள்ளனர்.