Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கல்பனா என்று அழைக்கப்படும் மலையகத்தின் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த கற்பகவள்ளி சுப்பிரமணியம் பழனியாண்டி என்ற பெண் சவுதி அரேபியாவில் மரணமடைந்து உள்ளார். இவருக்கு கிரிசாந்தி (வயது 13), கரிசாந்தன் (வயது 12), மோகனப்பிரியா (வயது 8) என்ற மூன்று சிறு குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவில் ஒரு வருடமாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இவருக்கு இது வரை சம்பளமே கொடுக்கப்படவில்லை என்றும் அதனால் தான் இலங்கை திரும்பப் போவதாகவும் தனது சம்பளத்தை தருமாறும் கேட்ட போது சவுதி முதலாளி மறுத்து சண்டை பிடித்திருக்கிறார்.

பின்பு அந்த கொழுப்பு பிடித்த மிருகங்கள் கல்பனாவை சித்திரவதை செய்திருக்கிறார்கள். அடித்தும், கம்பியால் சுட்டும் அந்த ஏழைப் தாயை மிரட்டி இருக்கிறார்கள். அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடி ஒரு வீட்டில் அடைக்கலம் கேட்ட அந்த அப்பாவிப் பெண்ணை அவர்கள் பிடித்து சவுதி பொலிசாரிடம் கொடுத்திருக்கிறார்கள். சித்திரவதை செய்த காட்டுமிராண்டி சவுதி முதலாளியை அவர்கள் நாட்டு வழக்கமான நீதி வழுவா நெறிமுறையின் படி ஏனென்றும் கேட்கவில்லை. விசாரணை செய்யவில்லை.

மாறாக முதலாளியால் சம்பளமின்றி வேலை வாங்கப்பட்டு, அதைக் கேட்டதால் சித்திரவதை செய்யப்பட்ட ஏழைத் தொழிலாளியான கல்பனாவை சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அல்-ஒலேயா (Riyadh, Al-Olaya) என்ற பெண்கள் தடுப்பு முகாமில் சவுதிப் பொலிசார் அடைத்தனர். அங்கு வைத்தும் அவர் சித்திரவதை செய்யப்படுவதாகவும் தனக்கு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை என்று தனது தாயாருடன் தொலைபேசியில் பேசும் போது அவர் தனது அச்சத்தை தெரிவித்து இருந்திருக்கிறார். தனது தாயாருடன் பேசிய சில நாட்களில் கல்பனா என்ற பரிதாபத்திற்குரிய அந்த ஏழைத் தாய் மரணம் அடைந்து விட்டார்.

அவர் மரணம் அடைந்த செய்தி கூட அவரது குடும்பத்தினருக்கு சவுதி அரசினாலோ அல்லது அங்கு இருக்கும் இலங்கைத் தூதரகத்தினாலோ அறிவிக்கப்படவில்லை. கல்பனா மரணம் அடைந்து எட்டு நாட்களின் பின்பு அந்த முகாமில் இருக்கும் இலங்கைப்பெண்களில் ஒருவர் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவிற்கும், இன்னொரு இலங்கைப்பெண்  களனிப் பகுதியைச் சேர்ந்த தனது உறவினருக்கும் கல்பனா மரணம் அடைந்ததை சொன்னதன் பின்னரே கல்பனா இறந்த தகவல் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. அந்த உறவினர் மூலமே கல்பனாவின் குழந்தைகளிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் அவர்களின் தாய் இறந்த துயரச் செய்தி தெரிய வந்திருக்கிறது.

இன்று வரை கல்பனா ஏன் இறந்தார் என்று எந்த விதமான அறிக்கையும் சவுதி அரசினால் வெளியிடப்படவில்லை. மிகத் தாமதமாக கல்பனா இறந்த செய்தியை உறுதி செய்துள்ள சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகமும் அவரது மரணம் ஏன் நிகழ்ந்தது என்று தெரிவிக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே அல்-ஒலேயாவில் இருக்கும் பெண்களும், அவரது குடும்பத்தினரும் நம்புகிறார்கள். கல்பனா இறந்த செய்தியை சவுதி அரசு அறிவிக்காததும், அவரது மரண அறிக்கையை சமர்ப்பிக்காததும் அவர்களினது சந்தேகங்களை உறுதி செய்கின்றன. கல்பனா இயற்கை மரணம் அடைந்து விட்டார் என்றோ அல்லது தற்கொலை செய்து விட்டார் என்றோ சொல்ல முடியாமல் சவுதி அரசாங்கத்தை எது தடுக்கிறது?

இலங்கை அரசாங்கத்தின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளும், சகிக்க முடியா அளவிற்கு எல்லா மட்டங்களிலும் பல்கிப் பெருகி இருக்கும் ஊழல்களும் ஏற்கனவே வறுமையில் மூழ்கிப் போயிருக்கும் மக்களை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளுகின்றன. இத் தாங்கொணாக் கொடுமையினால் தமது ஊர்களை விட்டு, மாவட்டங்களை விட்டு வெளியே போகாதவர்கள் கூட தாம் கேள்விப்படாத நாடுகளிற்கு கூட வேலை தேடிப் போகிறார்கள்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் குடியேற்ற திணைக்களத்தினரால் கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுக்க முடியாத அளவிற்கு கல்வி மறுக்கப்பட்ட தமிழ், முஸ்லீம், சிங்களப் பெண்கள் பலர் தமது வேலை என்ன, தாம் போகும் நாடுகளின் சூழ்நிலை என்ன என்று எதுவும் தெரியாமல் தமது வறுமையினால் வேலைவாய்ப்பு முகவர்கள் என்னும் அயோக்கியர்களின் ஏமாற்றுகளிற்கு பலியாகி அரபு நாடுகளிற்கு போகிறார்கள். ஆணாதிக்கம், பணத்திமிர் கொண்ட அந்த நாட்டு முதலாளிகளினால் ஏழைப் பெண்கள் சித்திரவதைகளிற்கு உள்ளாகிறார்கள். உடல் தோய உழைத்தும் ஊதியத்தை கொடுக்காமல் அவர்களை வஞ்சிக்கிறார்கள்.

இலங்கை அரசுகள் என்னும் கயவர்கள் தாம் அடிக்கும் கொள்ளைகளினால் இலங்கையின் பொருளாதாரத்தில் எப்பொழுதும் வரவை விட செலவு கூடுதலாகவே இருக்கும். அதனால் இலங்கையின் வரவு-செலவுத் திட்டத்தில் எப்பொழுதுமே செலவு கூடி வரவில் துண்டு விழும். அப்படித் துண்டு விழும் தொகையின் பெரும் பகுதி இந்த அப்பாவி ஏழைத் தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தமது குருதியை பிழிந்து உழைத்து தமது குடும்பங்களிற்கு அனுப்பும் பணத்தில் இருந்து கிடைக்கப் பெறும் அந்நியச் செலாவணியில் இருந்து தான் மீளப் பெறப்படுகிறது.

இந்த ஏழைத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் கொழுத்துப் போயிருக்கும் ஊழல் பன்றிகள் அதனால் தான் அரபு நாடுகள் ஏழைத் தொழிலாளிகளிற்கு எந்த விதமான தொழிலாளர் உரிமைகளும் வழங்கப்படாமல் இருப்பதை பற்றிக் கவலைப்படுவதில்லை. அரபு முதலாளிகள் இருண்ட காலங்களில் இருந்து கொண்டு தொழிலாளர்களை சவுக்குகளால் அடித்து அடிமைகள் போல நடத்துவதை என்றுமே எதிர்ப்பதில்லை. இலங்கையில் இருந்து இந்த ஏழை மக்களை ஏமாற்றி அனுப்பும் வேலைவாய்ப்பு முகவர்கள் என்னும் இரத்தம் குடிக்கும் அட்டைகளை கண்காணிப்பதில்லை.

ரிசானா, கல்பனா என்று எமது ஏழைப் பெண்கள் தமது இன்னுயிரை அரபு நாடுகளின் காட்டுமிராண்டிச் சட்டங்களினாலும், அந்த முதலாளிகளின் கொடுமைகளினாலும் இழப்பதை எவ்வளவு காலம் தான் நாம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? விளக்கைச் சுற்றி வரும் விட்டில் பூச்சிகள் விடிவதற்குள் இறப்பது போல ஏழை மக்கள் வறுமையினால் கொல்லப்படுவதை எவ்வளவு காலம் தான் நாம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? தாயை இழந்து கண்ணீர் வடிக்கும் கல்பனாவின் சிறு குழந்தைகள் நியாயம் கேட்கிறார்கள் உமது காதில் விழவில்லயா? இந்த அவலங்களிற்கு மூல காரணமான  இலங்கை அரசுகள் என்னும் முதலாளித்துவக் கொள்ளையர்களை, ஊழல் பெருச்சாளிகளை என்றைக்கு அடித்து துரத்தப் போகிறோம்?