உலக வரலாற்றில் முதன் முதலாக அணுகுண்டு வீசி மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் அமெரிக்க அரச பயங்கரவாதிகள். ஜப்பான் நாட்டு மக்களின் மீது அணுகுண்டு வீசி இலட்சக்கணக்கான மக்களைக் அமெரிக்க கொலைகாரர்கள் கொன்றார்கள். முதலில் 06.08.1945 அன்று கிரோசிமா நகரின் மீதும் மூன்று நாட்களின் பின்பு நாகசாகி நகரின் மீதும் அணுகுண்டு வீசினார்கள்.
ஜப்பானை அச்சுறுத்தி இரண்டாம் உலகப் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்காக அணுகுண்டு வீசப்பட்டது என்று கொஞ்சமும் வெட்கமின்றி, மனிதாபிமானம் இன்றி அமெரிக்க அரசுப் பயங்கரவாதிகள் பொய் சொன்னார்கள். ஆனால் ஜப்பான் தோல்வியை ஒத்துக் கொண்டு சரணடையும் முடிவில் இருந்தது. அணுகுண்டு போட உத்தரவிட்ட ஜனாதிபதி ட்ரூமன் அரசின் கடற்படைத் தளபதியாக இரண்டாம் உலக போர்க்காலத்தில் கடமையாற்றிய அட்மிரல் வில்லியம் லீகி போன்றோரே பின்னர் தமது குறிப்புகளில் ஜப்பான் தோல்வியடையும் நிலையில் சரணடைய இருந்ததையும், வழக்கமான ஆயுதங்களைக் கொண்டே போரை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம் என்பதையும் அணுகுண்டு வீச வேண்டிய தேவை இருக்கவில்லை என்ற விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
அப்படியானால் அமெரிக்கா ஏன் ஜப்பான் மீது அணுகுண்டு வீசியது? அமெரிக்கா தனது அணுகுண்டை சோதனை செய்து பார்க்க விரும்பியது முதலாவது காரணம். 09.09.1945 அன்று அணுகுண்டு வீசப்பட்ட ஒரு மாதத்தின் பின்பு இன்னொரு அமெரிக்க கடற்படைத் தளபதியான அட்மிரல் வில்லியம்.எஃப்.கோல்சி பகிரங்கமாக அறிவித்தார் " விஞ்ஞானிகள் ஒரு விளையாட்டுப் பொருளை வைத்திருந்தனர். அதை சோதனை செய்து பார்க்க விரும்பினர்". அது விளைவிக்கும் பேரழிவு எவ்வளவு பேரைக் கொல்லும் என்பதை அறிய விரும்பினர். அதனால் தான் அணுகுண்டை மக்கள் வாழாத பிரதேசங்களில் போடவில்லை. இராணுவ முக்கியத்துவம் மிக்க இடங்களில் போடவில்லை.
மாறாக மக்கள் பெருக்கம் நிறைந்த கிரோசிமா நகரில் முதலில் வீசி 90,000 ஜப்பானிய மக்களைக் கொன்றார்கள். எந்தவொரு பரிசோதனைக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட தரவுகள் வேண்டும் என்பதற்காகவே இரண்டாம் தரம் அணுகுண்டை வீசினார்கள். மூன்று நாட்களின் பின்பு நாசகாகி மீது குண்டு வீசி 37,000 மக்களைக் கொன்றார்கள். உடனடியாகவும் பின்பு காயங்களினாலும், கதிர் வீச்சுக்களினாலும் இரண்டு நகரங்களிலும் சேர்ந்து 200,000 ஜப்பானிய மக்கள் அமெரிக்கப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். (Source : "The real reason America dropped the atomic bomb. It was not to end the war".)
இவ்வாறு தமது அணுகுண்டை சோதனை செய்து பார்ப்பதற்காக இரண்டு இலட்சம் அப்பாவி மக்களைக் கொன்ற அமெரிக்க அரசுப் பயங்கரவாதிகள் இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பாற்றுவார்களாம் என்று தமிழ் மக்களின் அழிவில் அரசியல் நடத்தும் கேவலமான பிறவிகள் சொல்கிறார்கள். அணு குண்டு போட்டு மக்களைக் கொன்ற இந்த அயோக்கியர்கள் தான் சதாம் குசைன் தடை செய்யப்பட்ட பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று பொய் சொல்லி இலட்சக் கணக்கான ஈராக்கிய மக்களைக் கொன்று ஈராக்கின் எண்ணெய் வயல்களை கொள்ளை அடிக்கிறார்கள். இந்தக் கள்ளர்கள் தான் இலங்கை அரசுக் கொலைகார்களை வழிக்கு கொண்டு வந்து தீர்வு பெற்றுத் தருவார்கள் என்று தமிழ்த் தேசியம் என்னும் பெயரில் பிழைப்பு நடத்தும் பெருச்சாளிகள் சொல்கிறார்கள்.
வெளிநாடுகளில் அமெரிக்கா அரச பயங்கரவாதிகள் செய்த அநியாயங்கள் ஒரு புறம் இருக்க இலங்கையில், இலங்கைத் தமிழ் மக்களிற்கு அமெரிக்கர்கள் செய்த அநியாயங்களை இந்த அயோக்கியர்கள் மறக்கச் சொல்கிறார்கள். மகிந்த ராஜபக்சவின் தமிழ் மக்களின் மீதான இனப் படுகொலையின் ஒவ்வொரு கட்டத்திலும் சேர்ந்து நின்று கொன்ற அமெரிக்கா இனி தமிழ் மக்களிற்கு தீர்வு பெற்றுத் தரும் என்று இந்த அயோக்கியர்கள் சொல்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, தேங்காய் சீனிவாசன் மன்னிக்கவும் தேங்காய் சிவாஜிலிங்கம், நாடு கடந்த தமிழீழம், மற்றும் பல புலம்பெயர் புண்ணாக்கு அமைப்புக்கள் கொஞ்சமும் கூச்சமின்றி, வெட்கமின்றி பொய் சொல்கிறார்கள்.
தமிழ் மக்களின் விடுதலைக்கான அமைப்புக்கள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் உலகின் மிகப் பெரும் பயங்கரவாதிகளான அமெரிக்க அரசை நம்பச் சொல்கிறார்கள். பராக் ஒபாமா ஜனாதிபதித் தேர்தலில் நின்ற போது "ஒபாமாவிற்கான தமிழர்கள்" என்றொரு வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தை கட்டினார்கள். இப்போது கிலாரி கிளிண்டனிற்காக "கிலாரிக்கான தமிழர்கள்" என்று மறுபடியும் கைப்பிள்ளைகள் கூடுகிறார்கள்.
இந்த நிமிடம் வரை சிரியாவில் மக்களைக் கொன்று கொண்டிருக்கும் அமெரிக்க அரசின் வெளிநாட்டு அமைச்சரான கிலாரி கிளிண்டனிற்காக சங்கம் அமைக்கும் இவர்கள் சிலர் சொல்வது போல கோமாளிகளா? ஒரு நிமிடத்தில் ஒன்பது பேரை ஏமாற்றி விடக் கூடிய இந்தக் குள்ள நரிகளிற்கு அமெரிக்கா என்ன செய்கிறது என்று தெரியாதா? கிலாரி கிளிண்டன் யார் என்று தெரியாதா? இந்த அயோக்கியர்களிற்கு எல்லாமே தெரியும்; அவர்கள் கோமாளிகள் அல்ல. மாறாக அவர்கள் மக்களை முட்டாள்கள், எல்லாவற்றையும் மறந்து விடுபவர்கள் என்று நினைக்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா என்று அவர்களின் எஜமானர்கள் போடும் எலும்புத் துண்டுகளிற்காக வாலை ஆட்டியபடி பயங்கரவாதிகளை மீட்பர்கள் என்று மக்களை நம்பச் சொல்கிறார்கள்.
ஆனால் மிகக் கசப்பான உண்மை என்னவென்றால் பெரும்பாலான மக்கள் இந்த அயோக்கியர்கள் நினைப்பது போல மறதி மிகுந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் பொய்களை நம்புபவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் தான் தமிழ் மக்களைக் கொன்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடனும், கொலைகாரன் மகிந்த ராஜபக்சவுடன் இணை பிரியாமல் இருந்த மைத்திரி சிறிசேனாவுடனும் கூட்டு வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் வெல்ல முடிகிறது. பிழைப்புவாதிகள் தமிழ்நாட்டுப் பேயை ஈழத்தாய் என்று சொல்லிக் கொண்டு ஈழ ஆதரவு நாடகம் ஆட முடிகிறது. தேங்காய் சிவாஜிலிங்கம் "ஈழ மாமி கிலாரி கிளிண்டன் வாழ்க" என்று கூவ முடிகிறது. என்றைக்கு விழித்துக் கொள்ளப் போகிறோம்?