Language Selection

ஜெகதீசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குமார் குணரத்தினம சுகயீனமுற்றிருந்த அவரது தாயாரை வைத்தியரிடம் அழைத்து செல்வதற்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் 4ம் திகதி அவரது தாயாரது வீட்டிற்கு சென்றிருந்த வேளையில், அவரின் விசாக் காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த விடயத்தை முன்வைத்து அவரை கைது செய்திருந்தது இலங்கை அரசு. அவரை பல மாதங்களாக தடுப்புக்காவலில் வைத்திருந்து இறுதியில் குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறையில் அடைத்தனர். குமார் குணரத்தினம் தனது இலங்கை பிரஜாவுரிமையினை மீளப்பெற விண்ணப்பித்த பத்திரத்தை கிடப்பில் போட்டு விட்டு சிறைத் தண்டனை முடிந்ததும் அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு அரசியல் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், தனிநபர்கள் என பல்வேறு தரப்பினர் அவரின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அரசாங்கம் இது குறித்து மௌனப்போக்கை கடைப்பிடித்து வருகின்றது.

குமார் குணரத்தினம் கேகாலையில் பிறந்து, அங்கு கல்வி கற்று, பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வியை தொடர்ந்த இலங்கைப் பிரஜை. அவரது பாடசாலை நாட்களில் அரசியலில் ஆர்வம் கொண்டு தனது சகோதரனைப் போல இடதுசாரிய அமைப்பான மக்கள் முன்னணியில் இணைந்து செயற்பட்ட ஒருவர். பிறேமதாஸ ஆட்சிக்காலத்தில், 1989இல் மக்கள் விடுதலை முன்னணியின் மீதான அழித்தொழிப்பில் சகோதரனை இழந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பிய ஒருவர். அதனை தொடர்ந்து மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியை கட்டியெழுப்பியதில் முக்கிய பாத்திரம் வகித்தவர்களில் ஒருவர்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் உயிராபத்தை எதிர்நோக்கியமையால் கட்சி எடுத்த முடிவுக்கு அமைய நோயல் முதலிகே என்ற பெயரில் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் பெற்று அந்த நாட்டின் பிரஜையானர். அவர் நாட்டை விட்டு வெளியேறி இருந்த போதும் மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபாட்டில் இருந்து கொண்டு மீண்டும் நாடு திரும்பும் சந்தர்ப்பத்திற்க்காக காத்திருந்தவர்.

மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடு காரணமாக எழுந்த விவாதங்களில் நேரடியாக கலந்து கொள்ள 2011இல் இலங்கை வந்திருந்தார். அரசியல் முரண்பாடுகளை முறைப்படி தீர்க்க முடியாத சூழல் காரணங்களால், முன்னிலை சோசலிச கட்சியை உருவாக்கிய வேளையில் கோதப்பாய ராஜய பக்சாவின் வெள்ளை வான் படையால் கடத்தப்பட்டு பல தரப்பினரின் வேண்டுகோள்கள், நெருக்கடிகள் காரணமாக அதிஸ்டவசமாக விடுதலை செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். மீண்டும் நாடு திரும்பும் சந்தர்ப்பத்திற்க்காக காத்திருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் நாடு திரும்ப அவருக்கு கிடைக்கப்பெற்றது. நாடு திரும்பிய அவர் தனது இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்த வேளையில் அதற்கான பதிலை வழங்காது, அவரை கைது செய்து சிறையில் அடைத்து ஒரு வருடமாகின்றது இன்று.

இன்று ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் மைத்திரியும் ரணிலும்; மகிந்த ஆட்சியில் மறுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்து, இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கி இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

இவர்கள் ஜனதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் போது வழங்கிய முக்கிய வாக்குறுதிகள்.

1.  அரசியல் கைதிகள் உடன் விடுதலை

2. மகிந்த ஆட்சியல் அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி புலம்பெயர்ந்தவர்கள் மீள திரும்பி அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை தொடர உத்தரவாதம்

3.  மலையக தொழிலாளர்களிற்கு நாட்கூலியாக 1000 ரூபா. இப்படிப்பல வாக்குறுதிகள்…

இன்று அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என்கின்றனர். மலைய தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முதலாளிகளின் பக்கம் நின்று மலையக மக்களை ஏமாற்றுகின்றனர். அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி புலம்பெயர்ந்து இவர்களின் வாக்குறுதி காரணமாக நாடு திரும்பிய குமார் குணரத்தினத்தின் பிரஜாவுரிமையினை வழங்காது சட்டவாதங்களை முன்வைத்து குமாரின் குடியுரிமையை பறித்து அவரை நாடு கடத்த திட்டமிட்டுள்ளனர்.

குமார் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க அரசியல் ஆனது இன்றைய ஆட்சியாளர்களிற்கு சவாலான ஒரு விடயமாக இருக்கின்றது. எதிர்க்கட்சி அற்ற நிலையில் நவதாராளவாத பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க குமார் உறுப்பினராக இருக்கின்ற பாராளுமன்றத்தில் அங்கத்துவம் அற்ற, முன்னிலை சோசலிச கட்சி பெரும் சவாலாக இருந்து பல போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றது. இதற்கு பழிவாங்கும் செயற்பாடாகவே குமார் மீதான சிறைத்தண்டனையினை கருத முடியும்.

பாட்டாளி வர்க்க அரசியலுக்காகவே குமார் தனது முழு வாழ்நாளையும் செலவிட முடிவெடுத்திருக்கின்றார். அது அவருக்கு எதிர் நீச்சலடிப்பது போன்றது. அதற்காக அவர் பலவற்றை தியாகம் செய்து எதற்கும் தயாராகவுள்ளார். குமார் இந்த அரசியலை தேர்ந்தெடுக்காதிருந்திருந்தால் அவரது வாழ்க்கை இந்தளவு இன்னல் நிறைந்ததாக இருந்திருக்காது. அவரது அரசியல் காலத்தின் கட்டாயத் தேவையாக இருப்பது அதனால்தான்.