Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மைத்திரி "எளிமையானவராக, நேர்மையானவராக, அதிகார வெறி அற்றவராக" முன்னிறுத்தி முன்னெடுத்த மோசடியான போலி அரசியல் விம்பங்களுடன், இனியும் ஜனாதிபதியால் நடிக்க முடியாது. மக்கள் மேல் அதிகாரத்தை செலுத்த விரும்பிய ஒருவராக மைத்திரி இருந்ததாலேயே அமெரிக்கா சார்பு நவதாராளவாதத்தை முன்னெடுத்த வர்க்கமே தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கின் பொருளாதாரத் தேவைக்காக நடந்ததே ஆட்சி மாற்றம். இது மக்கள் முன் முகமாற்ற ஆட்சி மாற்றமாக நடந்தேறியது.

முகமாற்றம் மூலம் அமெரிக்க-இந்திய சார்பான நவதாராளவாத பொருளாதாரக் கைக்கூலியை உருவாக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து, யூ.என்.பியின் ஆதரவுடன் ஆட்சியேற்றியவர்கள் அமெரிக்கா சார்பு நவதாராள பொருளாதார வர்க்கமே.

ஜனாதிபதி வீட்டு உணவு உண்ணுவது தொடங்கி ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கின்ற, "ஏழை எளிய" மக்களின் தலைவராக ஜனாதிபதியை முன்னிறுத்தியதன் மூலம் அமெரிக்க தலைமையிலான நவதாராள பொருளாதார அமைப்பின் கைக்கூலியாக இருப்பதை மூடி மறைத்து வந்தனர். மக்களுக்கு எதிரான நவதாராள பொருளாதார எடுபிடியால் தொடர்ந்து, தான் போலியாக நடித்து உருவாக்கிய விம்பத்தை தக்கவைக்க முடியாது தன் சுய ரூபத்துடன் வெளிவருவதையே அண்மைக்காலத்தில் காண முடியும்.

லஞ்ச ஊழல் மோசடிக்கு எதிராக, கண்துடைப்பாக நடந்து வந்த விசாரணைகளை முடக்கிப் போடுமாறு, ஜனாதிபதி மைத்திரி தனது அதிகாரத்தைக் கொண்டு பகிரங்கமாகவே தலையிட்டுள்ளார். இதனால் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசங்க தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது போன்று கடந்தகாலத்தில் காணாமல் போன அரசு சொத்துக்களை தேடும் பொலிஸ் விசாரணைகள் மீதும், தன் அதிகாரத்தைக் கொண்டு தடுக்கும் வண்ணம் பகிரங்கமாக சீறி எழுந்துள்ளார்.

இது எதை எடுத்துக் காட்டுகின்றது? நவதாராளவாத பாராளுமன்ற அரசியலுக்கு வருகின்றவர்கள், பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடப்பதற்காக வருவதில்லை. கிடைக்கும் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு நவதாராள பொருளாதார அமைப்புக்கு சேவை செய்வதன் மூலம், சொகுசாக வாழ்வதற்காகவும், உழைக்காது செல்வத்தைக் குவிக்கவுமே நவதாராளவாத அரசியலைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதற்காக மக்களை முன்னின்று ஒழுக்குவதும், இதையே ஜனநாயகமாக முன்னிறுத்துவதன் மூலம் பாராளுமன்றத்தில் நீடிக்க முடிகின்றது. பாராளுமன்ற முறை மூலம் சம்பாதிப்பது என்பது, தமக்கு தாமே சம்பளங்களையும், சலுகைகளையும் ஏற்படுத்திக் கொண்டு பெறுவதுடன் மட்டும் நின்று விடுவதில்லை, மாறாக லஞ்சம், ஊழல்கள் மூலம் கொழுப்பது தான், அரசியல் என்று கருதுமளவுக்கு பாராளுமன்ற நவதாராளவாத அரசியல் புளுத்துக் கிடக்கின்றது.

தேசிய வளங்களையும், மனித உழைப்பையும் கொள்ளையிடும் நவதாராளவாத பொருளாதாரத்தை உருவாக்குகின்ற கட்டமைப்பிற்கான சட்டங்கள் முதல் வன்முறை வரை, அனைத்தும் லஞ்ச ஊழல் கட்டமைப்;பினாலானது. இந்தப் பொருளாதார கட்டமைப்பையும், அதற்காக செயற்படும் நவதாராள பாரளுமன்ற உறுப்பையும், சட்டரீதியாக விசாரணை செய்ய முடியாது. அதாவது லஞ்ச ஊழல் என்பது நவதாராள அமைப்பின் மீதான விசாரணையாக, பாராளுமன்ற அமைப்பின் மீதான பொது விசாரணையாகிவிடும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசு மூலம் தங்கள் அரசியல் எதிரிகள் மீது கண்துடைப்பாக நடத்துவதே ஊழல், லஞ்சம் மீதான விசாரணையாகும். அதாவது தங்கள் அரசியல் எதிரிகளை தங்கள் அதிகார வழிக்கு கொண்டு வருவதற்கானதே விசாரணை என்றும் நாடகங்கள். இதைத் தாண்டி நவதாராள பொருளாதார முறைமையுடன் புரையோடிக் கிடக்கும் ஊழலையும், லஞ்சத்தைவும், சமூகத்தில் இருந்து ஒழித்துக் கட்டுவதல்ல.

ஊழல், லஞ்சத்தை முன்னிறுத்திய விசாரணைகள் என்பது தங்கள் அரசியல் எதிரிகளை ஒடுக்கவும் தங்கள் அதிகார வழிக்கு கொண்டு வரவும், முரண்பட்ட நவதாராள பொருளாதார சக்திகளை கட்டுப்படுத்தவும் நடத்தப்படுகின்ற போலி நாடகங்கள்.

இதில் ஜனாதிபதி (சி.ல.சு.க) – பிரதமர் (யூ.என்.பி.) இரு வேறு அதிகார மற்றும் முரண்பட்ட நவதாராளவாத பொருளாதார நலன்களைக் கொண்ட இரு வேறு கட்சிகள் சார்ந்து, தங்கள் அதிகாரத்துக்கு சவால் விடக்கூடிய எதிரிகளை கட்டுப்படுத்த முன்னெடுத்ததே, ஊழல், லஞ்ச விசாரணைகள். அதாவது இரு வேறுபட்ட அதிகார சக்திகளுக்கு இருந்த ஒரே நோக்கமும், இரு வேறு முரண்பட்ட நோக்கங்கள் கொண்ட கட்சிகளும், இன்று வெளிப்படையாக முரண்பட்டு மோதுகின்றது. போலியாக நடந்த ஊழல், லஞ்ச விசாரணைகள் முதல் சில அரசியல் படுகொலைக்கு எதிரான போலி விசாரணைகள் அனைத்தும், அம்பலமாகி வருகின்றது. "நல்லாட்சி" என்பது நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்கும் கைக்கூலி ஆட்சியும், அதற்கான தங்கள் அதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சியுமாகும்.