இங்கிலாந்தில் அலிஸ்டயர் பூட், அந்தோனி மரியட் என்பவர்கள் எழுதிய No Sex Please, We Are British என்ற அபத்த, கேலி வகையான நாடகம் எழுபத்தொராம் ஆண்டில் இருந்து அரங்கேறி வருகிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் தனது விருப்பத்திற்குரிய விளையாட்டு வீரனைக் கண்டதும் ஆர்வமிகுதியால் கட்டிப் பிடித்து தனது அன்பை வெளிப்படுத்திய நேரம் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் கொதித்தெழுந்ததைப் பார்க்கும் போது இந்த அபத்த, கேலிக்கூத்து வகை நாடகம் தான் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
அன்பினை வெளிப்படுத்தும் வகையில் கன்னத்தில் முத்தம் இட்டால் கற்பு என்ற ஒரு பொருள் காணாமல் போய் விடுமாம் கைப்பிள்ளைகள் சொல்கிறார்கள். கனடாவில் யாழ்ப்பாணத்துப் பாடசாலை ஒன்றின் பழைய மாணவிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் நடனமாடினார்கள். அப்போதும் அபச்சாரம், அபச்சாரம் என்று கூக்குரல் இட்டார்கள். அதற்கு "நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆன்டிகள் நடனம்" என்று நாசமாப் போன ஒரு தலைப்பு வேறு கொடுத்திருந்தார்கள். எத்தனை வயதில் ஆடினால் என்ன, பாடினால் என்ன? மனிதர்கள் மகிழ்ச்சியாக ஆடிப் பாடக் கூடாது என்று தமிழனின் வரலாற்றில் எங்கே பதியப் பட்டிருக்கிறது?
தமிழர் இயற்கையை வழிபட்டனர். பெண் தலைவியாக இருக்கும் தாய் வழிச் சமுதாயம் அங்கிருந்தது. இயல், இசை, நாடகம் (கூத்து) என்று தமிழை மூன்றாகப் பிரித்திருந்தார்கள். பாணர்கள், விறலியர்கள் என்போர் புலவர்களாக, பொருநர்களாக (நடிகர்கள்), பாடகர்களாக இருந்தனர். பாடினி, விறலி, பாண்மகள் என்ற பெண்பாலாரை குறிக்கும் சொற்கள் ஆண்களும், பெண்களும் பேதமின்றி, ஏற்றத் தாழ்வுகள் இன்றி அன்று ஆடிப் பாடிப் மகிழ்ந்திருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
"வேலன் புனைந்த வெறியர் களம்" (குறுந்தொகை)
"வேலன் வெறியயர் வியன்களம்" (அகநானூறு)
"வேலனர் வந்து வெறியாடும் வெங்களத்து"(சிலப்பதிகாரம்)
என்று வேலன் என்ற பூசாரி ஆட்டுக்கிடாய் அறுத்து வெறியாடிய தமிழ் மரபின் மீது தலையில் இருந்து பிறந்தவர்கள் எனப்படும் (எங்கேயோ இடிக்குதே) பிராமணர்களின் சனாதன மதம் ஆதிக்கம் செலுத்துவதனுடன் தமிழ் மக்களின் வீழ்ச்சி தொடங்குகிறது. இந்து மதம் என்னும் குப்பையின் பிற்போக்குத்தனங்கள் மனிதரை பகுத்தறிவற்றவர்கள் ஆக்கின. உழுபவன் உயர்ந்த சாதி, கடலில் மீன் பிடிப்பவன் தாழ்ந்த சாதி, பனையில் ஏறி கள்ளும், நுங்கும் இறக்குபவன் தாழ்ந்த சாதி, சூழலை சுத்தம் பண்ணுபவன் தீண்டப்படவே தகுதியில்லா மனிதன் என்னும் மிகக் கேவலமான சாதியமைப்பை இந்தக் குப்பை மனிதர்களின் மனதில் விதைத்தது. கலைஞர்களான பாணரையும், பறையரையும், துடியரையுமே கீழ்நிலை மனிதர்களாக, தீண்டத்தகாதவர்கள் என ஆக்கியது இந்த மண்டை கழண்ட கூட்டம். இந்தக் குப்பை தமிழ் மக்களிடம் வந்த பின்பு அது வரை சுதந்திரமாக இருந்த பெண் ஆணுக்கு சமமற்றவள் என ஆக்கப்பட்டு அடிமையாக்கப்படுகிறாள். பிராமணர்களின் செத்த பாசை சமஸ்கிருதம் தமிழரின் வழிபாட்டு மொழி ஆக்கப்படுகிறது.
தன் மொழியாம் தமிழை இழித்து வந்தவர்களின் மொழியை வணங்கிக் கும்பிடுவதுதான் தமிழர் பண்பாடாம். தன்னை சூத்திரன் என்று கேவலப்படுத்துபவனை வணங்கி நீரே எம் குரு என்று கும்பிடுவது தான் தமிழ்ப் பண்பாடாம். யாழும்; பறை மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா எனப் பலவகை முழவும் முழங்க ஆண்களும், பெண்களும் அகமகிழ்ந்து ஆடிப் பாடிய பண்பாட்டை விட்டு விட்டு கூத்தாடுவது உயர்குடியினருக்கு உகந்த செயல் அல்ல என காய்ந்த மனிதராக மாறியது தான் தமிழ்ப் பண்பாடாம். அதனால் தான் "பல வகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்; பதினோராடலும் பாட்டும் கொட்டும்" எனச் சிலப்பதிகாரம் சொல்லும் கூத்து யாழ்ப்பாணத்து வெள்ளாளரால் இழிவாகக் கருதப்பட்டு இல்லாமல் போனது. ஒடுக்கப்பட்ட சாதியினரே தொல் தமிழ்க் கலையாம் கூத்தினை இன்று வரை காவி வருகின்றனர்
மத வெறியர்களிற்கு, சாதி வெறியர்களிற்கு மக்கள் மகிழ்ந்திருப்பது பிடிப்பதில்லை. தலிபான்கள் பாட்டுப் பாடுவதை, பாட்டுகள் கேட்பதை தடை செய்தார்கள். 1644 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் "தூயவாதிகள்" என்பவர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த போது கிறிஸ்மஸ் கொண்டாடுவது தடை செய்யப்பட்டது. கிறிஸ்மஸ் காலங்களில் மக்கள் நடனம் ஆடுகிறார்கள், கரோல் பாடுகிறார்கள் போன்ற காரணங்களிற்காகவே இந்தத் தடை கொண்டு வரப்பட்டது. நல்லூர் கந்தசாமி கோவிலில் பழந்தமிழ் பண்பாட்டின் எச்சமாக பறை முழங்கி வந்தது நல்லூர் ஆறுமுகத்திற்கு ஆகமத்திற்கு புறம்பான செயலாக இருந்தது.
"கிளிநொச்சியில் தீயணைக்க வண்டி இல்லை; அய்யாமாருக்கோ அதிவிரைவு வாகனங்கள்" என்று எமது இணையத்தில் எழுதப்பட்ட கட்டுரையை நியூ ஜப்னா (NewJaffna.com) என்ற இணையத் தளம் மறுபிரசுரம் செய்து விட்டு "கிளிநொச்சியில் ஆண்டியின் .... ஆப்பிளும் மாம்பழமும்" என்று ஆபாசமாக, கேவலமாக தலைப்பு போட்டது. இப்படியான ஆபாச வியாபாரிகள் தான் தமிழ்ப் பண்பாடு பெண்களால் அழிகிறது என்று கூப்பாடு போடுகிறார்கள்.
பெரும்பாலும் சாதி வெறியர்களும், பிற்போக்கு குறுந் தமிழ்தேசியம் பேசுபவர்கள் தான் "தமிழ்ப் பெண்களால் பாழாக்கப்படும் தமிழ்ப் பண்பாட்டை" எண்ணிக் கலங்குகிறார்கள். இந்தக் கைப்பிள்ளைகளிடம் மிகச் சில கேள்விகள். தமிழரின் கோவிலில் சமஸ்கிருதத்தில் பூசை வைப்பது தமிழ்ப் பண்பாடா? தமிழரை சூத்திரர் என்று இழிவுபடுத்துபவனை அய்யா என்று அழைத்து வணங்குவதும் தமிழ்ப் பண்பாடா? இவ்வளவு சீதனம் வைத்தால் தான் திருமணம் செய்வேன் என்று எம் பெண்களை கேவலப்படுத்துவது தமிழ்ப் பண்பாடா? பெண்கள் ஆடிப் பாடினால் மீசையை முறுக்கும் பண்பாட்டுக் காவலர்கள் மனுநீதி முன்னும், சமஸ்கிருதத்திற்கு முன்னும், சீதனக் கொடுமைகளிற்கு முன்னும் அடங்கிக் கிடப்பதேன்?