தமிழ் மக்கள் பேரவை, தமிழ் கலாச்சாரம் குறித்து பேசுகின்றது. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலாச்சாரம் பற்றி மேடைகளில் முழங்குகின்றார். புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி சேகரிக்கும் நடைபவனியில் வந்த விளையாட்டு வீரனை, பெண் ஒருவர் முத்தமிட்ட காட்சிக்குப் பின்னால் - தமிழ் பண்பாடு குறித்து பேசப்படுகின்றது. மு.திருநாவுக்கரசு (முன்னாள் புலி) தமிழ் பண்பாட்டை காப்பாற்றுவது பற்றிப் பேசுகின்றார். சாறி கட்டாத பெண் தமிழ் பண்பாட்டுக்கு "துரோகம்" செய்கின்றவள் மட்டுமல்ல, அது அவளின் "நடத்தை கெட்ட" செயலாக யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவு பேராசிரியர்களும் மாணவர்களும் அறிக்கை விடுமளவுக்கு, தமிழ் பண்பாடு குறித்த பொது வரையறைகள் இன்று முன்வைக்கப்படுகின்றது.
தமிழ் கலாச்சாரம் குறித்து பொது வெளியில் இப்படி அடிக்கடி பேசப்படுகின்றது. யாழ் சமூகத்தில் பெண்களின் உடல் மற்றும் உடைகள் மூலமாக தமிழ் பண்பாடு பேசுபொருளாக மாறி வருகின்றது. கோயில்கள் முதல் பொது நிகழ்வுகளில் நடக்கும் உரைகளில் கூட, பெண்களின் உடை சார்ந்த நடத்தை மீது - கலாச்சாரம் குறித்து பேசப்படுகின்றது.
இந்த வகையில் இந்து மதத்தின் ஆணாதிக்க வக்கிரங்களை தமிழ் பண்பாடாகக் காட்டி, அதை சமூகம் மீது காறி உமிழ்கின்றனர். இப்படி உமிழ்கின்ற பேர்வழிகளை அறிவாளியாகவும், சமூக வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொள்ளுமளவுக்கு சமூகம் அறியாமையில் மூழ்கி தாழ்ந்து கிடக்கின்றது. இந்து பண்பாட்டுக் கலாச்சாரமானது, சாதியாகவும், இனவாதமாகவும் சமூகத்தில் மேல் எழுந்து வருகின்ற பின்னணியில், பெண்ணை ஆணின் அடிமையாக வாழும்படி கோருகின்றது. அடுத்த தலைமுறைக்கு இந்த ஆணாதிக்க சாதிக் கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்வதானது பெண்ணின் சமூக நடத்தையாக இருத்தலே தமிழ் பண்பாடு என்கின்றனர்.
இந்து மத சாதிய வெள்ளாளப் பண்பாட்டை தமிழ் மக்களின் பொதுப் பண்பாடாக்குகின்ற பின்னணியில், தமிழ் மொழி பேசும் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், கிறிஸ்துவ, முஸ்லிம் மக்களையும் இயல்பாகவே சமூகத்தின் முன், எதிரியாகக் காட்டி விடுகின்றனர். தமிழ்ப்பண்பாடு குறித்து பேசுகின்றவர்கள், அனைத்து தமிழ்மொழி பேசுகின்ற மக்களை உள்ளடக்கிய பொதுக் கலாச்சாரத்தை முன்வைக்க வக்கற்றவராக இருக்கின்றனர். யாழ்ப்பாணிய கிடுகுவேலி அடிப்படையில் சாதி இந்து ஆணாதிக்க கலாச்சாரத்தையே தமிழ்க் கலாச்சாரம் என்கின்றனர்.
இதை மூடிமறைத்து முன்னெடுக்க தமிழ்ப் பகுதிகளின் பௌத்த மத மற்றும் சிங்கள மேலாதிக்க அடையாளத்தை எதிர்க்கின்ற இந்துமத சாதிக் கலாச்சாரக் காவலர்கள், இந்தியாவின் மேலாதிக்கத்துடன் ஆக்கிரமிக்கும் இந்திய அடையாளங்களை கூனிக் குறுகி கும்பிடு போட்டு கும்மியடிப்பதையே தங்கள் தமிழ்ப் பண்பாடாகக் காட்டுகின்றனர். யாழ் இந்தியத் தூதராலயம் போடுகின்ற எலும்புகளை கவ்விக் கொண்டு குலைப்பதே, இவர்களின் மாமூலான கலாச்சார அறிவுரையாக இருக்கின்றது.
இந்தியாவில் ஆதிக்கம் பெற்ற சாதிய வழி வந்த பார்ப்பானிய கலை கலாச்சாரத்தை யாழ்ப்பாணத்தில் திணிக்கின்ற பின்னணியில், அதை தமிழ் பண்பாடாக்கி காட்டுகின்ற அடிமைத்தனத்தை பண்பாடாகக் கொண்டவர்கள் தான், பண்பாடு பற்றி வாய் கிழியப் பேசுகின்றனர்.
யாழ் இந்தியத் தூதரகம் முதல் தன்னார்வ நிறுவனங்கள் வரை வாரி வழங்கும் நிதி முதல் கலாச்சார ஏற்பாடுகள் மூலம் அறிமுகமாகும் ஆதிக்க பண்பாட்டையே, வெள்ளாளிய தமிழ்ப் பண்பாடாக மாற்றுகின்ற பொதுப் பின்னணியில், இந்து மத பிரச்சாரகர்கள் முதல் முற்போக்கு இலக்கியம் பேசுகின்றவர்கள் வரை செயற்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் அரங்கேறும் நிகழ்வுகள் முதல் வெளிவரும் "முற்போக்கு" இலக்கியம் வரை, தன்னார்வ நிதி முதல் மேற்கு மற்றும் இந்திய தூதராலயங்களின் அனுசரணை இன்றி, எதையும் சுயாதீனமாக காணமுடியாத அளவுக்கு அடிமைகளைக் கொண்டு சமூகம் அடிமைப்படுத்தப்படுகின்றது. சமூகத்தின் சுயத்தை அழிக்கின்ற இழிபண்பாட்டைக் கொண்டதாக, யாழ்ப்பாணிய தமிழ் பண்பாடாக மாறி வருகின்றது.
சுயத்தை இழந்த தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் கொண்ட சமூகத்தில் உதாரணமாக பாடசாலைகள் கூட இன்று மத அடையாளங்கள் பெறுகின்ற குறுகிய கலாச்சார வக்கிரங்களை அரங்கேற்றுகின்ற அளவுக்கு, இழிநிலைக்கு தமிழ் சமூகம் தாழ்ந்து போவதை யாரும் கேள்வி கேட்பதில்லை.
பஸ்சில் குண்டி உரச, மார்பு உரச ஆணையும் பெண்ணையும் பனங்கிழங்கு அடுக்குவது போல் அடுக்கி, ஆட்டு மந்தைகளாக அடக்க ஒடுக்கமாக அடங்கி நடப்பதை, யாழ்ப்பாணிய தமிழ் கலாச்சாரம் கேள்வி கேட்பதில்லை. இங்கு உரசுகின்ற நடத்தையையே தமிழன் பண்பாடாக்கி விடுகின்றனர்.
அலுவலகங்களில் தன் மேல் அதிகாரிக்கு முன் கூனிக் குறுகி இழிவாக நிற்கும் நிலையையே, சமூகத்தில் மேல்நிலை பெற்றவர்கள் முன் ஊழியர்கள் நாயைப் போல் வளைந்து நெளிவதையே, யாழ்ப்பாணத்தானின் தமிழ் பண்பாடாக்கி வைத்திருக்கின்றனர். இந்த அடிமைத்தனத்தை கேள்விக்கு உள்ளாக்குவதில்லை.
இந்தியாவின் பார்ப்பானிய சாதிய மதப் பண்பாட்டை இந்திய தூதரகம் முன்னின்று யாழ்ப்பாணத்தில் விதைப்பதையும், அதையே நுகர்வதையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை.
பன்னாட்டுக் கம்பனிகளின் விளம்பர நுகர்வுகளை நக்கும்படி - மக்களை மூளைச்சலவை செய்து அலைய வைக்கின்றமைக்கு எதிராக எதையும், தமிழ் பண்பாடு கேள்விக்குள்ளாக்குவதில்லை.
தமிழ் இனவாத தேசியத்துக்கு தீர்வு அமெரிக்கா முதல் இந்தியா வழங்குபவை தான் என்று கூறி, கால் நக்குகின்ற தமிழ் அடிமைப் பண்பாட்டை தமிழ் பண்பாடு கேள்விக்கு உள்ளாக்குவதில்லை.
ஆதிக்கம் பெற்ற யாழ்ப்பாணிய வெள்ளாள சாதிய நக்குண்ணித்தனத்தை தமிழ் பண்பாடாக காட்டுகின்றதும், திணிக்கின்றதையும் தாண்டி, மக்களுக்கான கலாச்சாரத்தை, இந்து மதப் புரவர்கள் முதல் யாழ் "முற்போக்கு" இலக்கியவாதிகள் வரை முன்வைக்கவில்லை என்பதே எதாhர்த்தம்.
பண்பாடு என்பது என்ன?
உழைத்து சொந்தக் காலில் சுயமரியாதையுடன் வாழ்தலே மனிதப் பண்பாடு.
இன மத சாதி, பால்நிலை ஒடுக்குமுறை கடந்து தன்னை மனிதனாக முன்னிறுத்தி நிற்றலே மனிதப் பண்பாடு.
தன்னைப் போல் சக மனிதளை நேசித்து, சமூகவுணர்வுடன் கூடி வாழ்தலே மனிதப் பண்பாடு.
மனிதனாக சமூகத்தை முன்னிறுத்தி வாழ்கின்ற வாழ்க்கை தான், தமிழ் பண்பாடாக இருக்க முடியுமே ஒழிய, பிறருக்கு எதிராக தன்னை முன்னிறுத்தி வாழ்தல் தமிழ் பண்பாடாக இருக்க முடியாது. இனம், மதம், சாதி, பிரதேசம், பால் கடந்த சமூகத்தை முன்னிறுத்திய பண்பாட்டுடன் வாழ்தலே தமிழ் பண்பாடாக இருக்க முடியும்.
இதற்கு மாறாக இந்து மதம் சார்ந்த பண்பாடு, யாழ்ப்பாணிய வெள்ளாளச் சாதிய ஆணாதிக்க பண்பாடாகும். இது ஒடுக்கப்பட்ட சாதிகள் முதல் முஸ்லிம் கிறிஸ்துவ மக்களுக்கு எதிரானது. பிற பிரதேச மக்களுக்கும் எதிரானது. தன்னை முன்னிறுத்துகின்றதும், சமூகத்தை நேசிக்காத குறுகிய வக்கிரத்தையே, தமிழ் பண்பாடாக்கி விட முனைகின்றது. இது இந்தியாவின் அனுசரணையுடன், பார்ப்பானிய வழி வரும் யாழ்ப்பாணிய வெள்ளாளியத்தனமாகும்.