Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மத வெறியர்கள், இன வெறியர்கள், சாதி வெறியர்கள் என்போர் எப்பொழுதும் தேசபக்தியை தாமே முழுக் குத்தகைக்கு எடுத்த தவப்புதல்வர்கள் என்று ஊளையிடுவார்கள். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தவரை பெரும்பான்மையினராக கொண்ட நாகலாந்து, மிசோராம், மேகாலயா மக்கள் தமது உரிமைகளிற்காக போராடுவதை இந்த தேசபக்தி அயோக்கியர்கள் கிறிஸ்தவ சதி என்று கொச்சைப்படுத்துவார்கள். ஒரு சில மதவெறி குழுக்களின் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டை வைத்து காஷ்மீர் மக்களின் வாழ்வு உரிமைகளிற்கான போராட்டங்களை முஸ்லீம் மதவெறியர்களின் போராட்டமாக கொச்சைப்படுத்துவார்கள்.

இயற்கையையும், தமது வாழ்வாதாரங்களையும் அழிக்க வரும் பன்னாட்டு நிறுவனக் கொள்ளையர்களையும், அவர்களின் பாதம் தாங்கிகளான இந்திய அரசையும் எதிர்த்துப் போராடும் பழங்குடி மக்களையும், மாவோயிஸ்ட்டு கட்சியினரையும் கம்யுனிஸ்டு சதிகாரர்கள் என்று இந்த நாய்கள் ஊளையிடும். அகண்ட பாரதம், விரிந்த பாரதம் என்று சொல்லும் இந்தக் கும்பல் தான் இன்று இயற்கை அன்னயின் கொடையான காவேரி ஆற்றை கர்நாடகத்திற்கு மட்டும் என்று இனவெறி பேசுகிறது. இயற்கை தந்ததை இடை மறிப்பது தான் இந்த அயோக்கியர்களின் தேசபக்தியின் யோக்கியதை.

தேசபக்தி, நாட்டுப்பற்று, ஒற்றுமை என்று பேசும் இந்து வெறிக்கும்பல்கள் தான் இன்று கர்நாடகாவில் தமது காவிக் கோவணத்தைக் கழட்டி எறிந்து விட்டு நிர்வாணமாக நின்று கன்னட இனவெறி பேசுகிறார்கள். இந்து ஒற்றுமை என்று குரைக்கும் இவர்கள் தான் தமிழ் நாட்டின் இந்து மதத்தை சேர்ந்த அப்பாவிகளை கணமும் தயங்காது அடித்து காடைத்தனம் செய்கிறார்கள். பாகிஸ்தான் பாரதமாதாவை ஆக்கிரமிப்பு செய்கிறது என்று அபாயச்சங்கு ஊதும் இவர்கள் தான் காவேரித்தாயை தம் சக நாட்டு மக்களிற்கு தரமுடியாது, அணை கட்ட வேண்டும் என்று அலறுகிறார்கள்.

இந்தியாவின் ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் எலும்புத் துண்டுகளிற்காக இந்தியா முழுவதும் உள்ள நதிகள், காடுகள், மலைகள் என்று இயற்கை தந்த கொடைகளை, மக்களின் வாழ்வாதாரங்களை சர்வதேச பெரு நிறுவனங்களிற்கு விற்று நாட்டை பாலைவனமாக ஆக்குகிறார்கள். சர்வதேசக் கொள்ளையர்கள் ஒரு பக்கம் என்றால் கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள், தமிழ்நாட்டின் கடல் கொள்ளையன் வைகுந்தராசன், மணல் கொள்ளையன் ஆறுமுகசாமி, கிரானைட் கொள்ளையன் பழனிச்சாமி போன்ற உள்ளூர் கொள்ளையர்கள் மறு பக்கத்தில் மாநில ஆட்சி கமிசன் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள்.

இந்தக் கொள்ளைகளில் இந்த இன, மத வெறியர்களிற்கும் பங்கு கிடைக்கிறது என்பதால் இவர்கள் சர்வதேச, உள்ளூர் கள்ளர்களிற்கு எதிராக வாயே திறப்பதில்லை. கர்நாடகாவில் கோக்கிற்கும், பெப்சிக்கும் மக்களின் வாழ்வாதாரமான ஆற்றுநீரை விற்பதை இந்த கன்னட இனவெறியர்கள் கண்டு கொள்வதில்லை. 802 கிலோமீட்டர் நீளமான காவேரியில் 423 கிலோமீட்டரைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரை கேட்கும் போது மட்டும் கன்னடத்திற்கே போதாத தண்ணீரை தமிழ்நாட்டிற்கு எப்படி தர முடியும் என்று கணக்கு சொல்கிறார்கள். அன்னிய நாட்டு முதலாளிகளிற்கு, காவேரியில் எந்த விதமான உரிமையும் இல்லாதவர்களிற்கு பணத்திற்காக விற்கும் போது வாயடங்கிக் கிடப்பவர்கள்; காவேரியில் சம உரித்துடைய ஒரே நாட்டு மக்களிற்கு தவித்த வாய்க்கு தண்ணீராகவும், பசித்த வாய்க்கு சோறு விளைவிக்கும் ஆதாரமாகவும் விளங்கும் காவேரித் தாயை தர முடியாது என்று இனவாதம் பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டில் வைகை, பாலாறு, நொய்யல், தாமிரபரணி என்று வற்றாத வளநதிகளை எல்லாம் மணல் அள்ளியும், பெருநிறுவனங்கள் நீரை உறிஞ்ச அனுமதி கொடுத்தும் வற்றிப் போகச் செய்தார்கள். மக்கள் குளிக்க, பயணிக்க பயன்பட்ட கூவமும், அடையாறும் இன்று தொழிற்சாலைக் கழிவுகளாலும், ஆக்கிரமிப்புக்களாலும் நஞ்சாக்கப்பட்டு விட்டன. ஏரிகள், குளங்கள் அரசியல்வாதிகளாலும், அவர் தம் கைத்தடிகளான காலிகளாலும் விற்கப்பட்டு கட்டிடங்களாக மாற்றப்பட்டு விட்டன. இப்படி வாழ்வின் ஆதாரமான நீரை அழித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான அற்பர்கள் காவேரிக்காக கர்நாடகாவிடமும், முல்லைப் பெரியாறுக்காக கேரளாவிடமும் உரிமைப் போராட்டம் நடத்துவோம் என்று ஊழலில் ஊறிய தம் குரல்களால் ஊளையிடுகிறார்கள்.

தமிழ் நாட்டில் மனிதர்களில் எந்த வகையிலும் சேர்க்க முடியாத ஒரு இனம் இருக்கிறது. அவர்கள் தமிழ் மக்களைப் போல இருந்தாலும் மானிடவியலாளர்கள் அவர்களை பொறுக்கி அடிமை நாய்கள் என்னும் பிரிவின் கீழ் அட்டவணைப்படுத்துகிறார்கள். அவர்கள் ஜெயலலிதாவைக் கண்டதும் பின்பக்கத்தை கீழே கொண்டு போவார்கள். ஜெயலலிதாவின் காரைக் கண்டதும் கீழே விழுவார்கள். ஜெயலலிதாவிற்கு பக்கத்தில் நின்று பேசுவதென்றால் வாயைப் பொத்திக் கொண்டு பேசுவார்கள். (ஏன் பல்லே விளக்குவதில்லையா?). அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கட்டப் பஞ்சாயத்து செய்தல் என்ற பயற்சிக்காலங்கள் முடிந்து அ.தி.மு.க மந்திரிகள் ஆவார்கள்.

ஜெயலலிதாவின் காலில் விழாத நேரங்களில் ஊரை அடித்து உலையில் போடுவார்கள். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரர்களை விட வேகமாக கொள்ளையடித்து கோடீஸ்வர்கள் ஆவார்கள். இப்படிப்பட்ட பிராணிகளில் ஒன்றான தமிழ்நாட்டு சுற்றுச்சூழல் மந்திரி கருப்பண்ணன் "ஒரு துண்டு நிலம் இல்லாதவன் எல்லாம் விவசாயி என்று போராட்டம் செய்கிறான்" என்று சமீபத்தில் உளறியது. மானம் என்ற ஒன்றே இல்லாத இவன் எல்லாம் மனிதன் என்று வெள்ளை வேட்டி கட்டித் திரிந்து கொண்டு விவசாயிகளைப் பற்றி உளறுகிறான். விவசாயிகளைப் பற்றி இப்படிப் பேசுபவன் தான் மந்திரி என்றால் தமிழ்நாட்டு விவசாயிகளின் கதி என்ன? ஜெயலலிடாவை சுற்றி வருவது தான் சுற்றுச்சூழல் என்று நினைப்பவன் எல்லாம் மந்திரி என்றால் சூழல் நாசமாக்குவதைத் தவிர வேறென்ன செய்வான்?

இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளை கேவலமாகப் பேசுபவனை விட்டு விட்டு தமிழ் இனவெறியர்கள் தமிழ்நாட்டில் வைத்து கன்னட மக்களை அடிக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தை கொள்ளை அடிப்பவர்களை விட்டு விட்டு தமிழ் மக்களை கன்னட வெறியர்கள் தாக்குகிறார்கள். அது போலவே தமிழ் இனவெறி பேசுவதன் மூலம் தமிழ்நாட்டு கள்ளர்களின் கொள்ளைகள் மறைக்கப் படுகின்றன. காவேரி நமதே என்று கன்னட வெறியர்கள் தமிழ் மக்களை மிரட்டி சொல்ல வைப்பதாலும் அதையே தமிழ்நாட்டில் தமிழ் இனவெறியர்கள் கன்னட மக்களை அடித்து சொல்ல வைப்பதாலும் இரு மாநில மக்களுக்கும் இடையே மூழும் பகையை வைத்து இரு மாநில ஆட்சியாளர்களும் அரசியல் லாபம் தேடிக் கொள்ளுவார்கள். இனவாத தீயில் தமது கொள்ளைகளைத் தொடருவார்கள். இலங்கையில் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கையின் ஆட்சியாளர்கள் சிங்கள இனவாதம் பேசியே மக்களை ஏமாற்றி தமது கொள்ளைகளை தொடருகிறார்கள் என்பது நம் கண் முன்னே உள்ள எடுத்துக்காட்டு.

உழவர் ஓதை, மதகு ஓதை

உடைநீர் ஓதை, தண்பதம் கொள்,

விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,

நடந்தாய் வாழி காவேரி!

என்று சிலப்பதிகாரம் சொல்லும். கன்னடத்து விவசாயிகளும், தமிழ் நாட்டு விவசாயிகளைப் போலவே வறுமையில் தான் வாழ்கிறார்கள். காவேரி நமதே என்று கன்னட விவசாயிகளை ஏமாற்றும் கன்னட அரசியல்வாதி அற்பர்களிற்கும், தாமிரபரணியை விற்கும் தமிழ்நாட்டு கேவலப் பிறவிகளிற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. உழைக்கும் ஏழை மக்கள் இன, மத பேதமின்றி ஒன்று சேர்ந்து நாட்டை விற்பவர்களை, இயற்கை அழிப்பவர்களை ஓட ஓட விரட்டும் போது மட்டுமே மீண்டும் மதகுகள் நிறைந்து நடப்பாள் காவேரித் தாய். அன்று உழவர் ஓசையும், விழவர் ஓசையும் சிறந்து ஆர்ப்ப நடப்பாய் வாழி காவேரி!