Language Selection

சீவுளிச்சித்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எமது நாட்டில் 1915ல்-56ல்-58ல்-61ல்-77ல்-81ல்-83ல் கலவரங்களும், 1971ல் 88-89ல் ஆயுதக்கிளர்ச்சிகளும், 1983 முதல் 2009 வரை யுத்தமும் இடம் பெற்றுள்ளன. இதனால் லட்சக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் - ஊரை விட்டு ஊர் இடம் பெயர்ந்துள்ளனர் - நாட்டை விட்டு ஓடியுள்ளனர் –லட்சக்கணக்கான குடும்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

இன்று நாட்டில் 75 சத வீதமான மக்கள் வாழ்வாதாரங்கள் இன்றி வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சகல வளங்களும் மக்களுடைய உரித்துக்களாக இல்லாத வண்ணம் பொருளாதாரத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்நியர்களின் தொழிற் கூடமாக இலங்கையும் அவர்களின் அடிமைச் சேவகர்களாக மக்களும் மாற்றப்பட்டு வருகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் காரணகர்த்தாக்களான எமது ‘மக்கள் பிரதிநிதிகள்’ வழமைபோல மக்களைப் பிளவுபடுத்திக் கொண்டு தங்கள் அரசியல் சாதுரியங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டு தங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்த வண்ணம் பவனி வந்தபடி உள்ளனர்.

மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வு கொழும்பில்தான் எனவும் - தங்கள் கையில் அதிகாரம் இல்லை எனவும் கூறியபடி வருவோர் போவோரிடமெல்லாம் மனுக் கொடுத்தபடி இருக்கிறார்கள். இந்த ‘அதிகாரம்’ இவர்கள் கையில் வந்துவிட்டால் 'பாலும் தேனும் ஓட வைப்போம்' எனக் கூறுகிறார்கள்.

மாகாண சபையின் கீழ் உள்ள பிரதேசங்களில் நாளாந்தம் குவியும் குப்பை கூளங்களை அப்புறப்படுத்தத் திராணியற்றவர்களுக்கு அரச சேவையாளர்களின் பதவிகள்-பதவி உயர்வுகள்-இடமாற்றங்கள் ஆகியவற்றில் ‘சாதியத்தை’ நிலைநாட்டுவதில் மட்டும் அதிகாரம் கையில் கிடைத்துவிடுகிறது. மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு வழி தேட வக்கற்றவர்களுக்கு ‘திட்டப் பணி ஒப்பந்தங்கள் அனுமதி’ ஊடாக கோடிகள் குவிக்க அதிகாரம் வந்துவிடுகிறது.

நாட்டில் இடம்பெறும் சமூக சீர்கேடுகளை களைவதற்கு அல்லது அவற்றைப் பற்றிப் பரிசீலிப்பதற்கு அல்லது அது தொடர்பாக ஒரு மக்கள் மத்தியில் கலந்துரையாடலை நடாத்துவதற்கு கூட கரிசனை அற்றவர்களுக்கு அரச சலுகைகளை இன-மத-சாதி-ஊர் பார்த்து பங்கீடு செய்யும் அதிகாரம் கிடைத்து விடுகிறது.

மாறி மாறிப் பதவிக்கு வரும் ஆட்சியாளர்களும் இவர்களுக்கூடாகவே மக்கள் சரியான பாதையில் சிந்திக்க விடாத வண்ணம் அவர்களை அன்றாட பிரச்சனைகளுக்குள் தள்ளி மூழ்கடித்து வைத்துக் கொண்டு நாளும் பொழுதும் அவர்கள் வதைபடும் விதத்தில் தங்கள் அதிகாரங்களைப் பிரயோகிக்கின்றனர்.

இன்று நாட்டில் ‘சனநாயகம்’ எனப்படுவது ‘பணபலம் படைத்தவர்களின் அதிகாரப் பகிர்வு’ ஆகும். இன்றைய இந்த ‘சனநாயக நடைமுறை’ அழிக்கப்பட்டு மக்களுக்கான சனநாயகம் நடைமுறைக்கு வரும் வரைக்கும் எமது துயரங்கள்-துன்பங்கள்-கதறல்கள்-ஒப்பாரிகள்-ஓலங்கள்-அழுகுரல்கள் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.

ஏனெனில் நாமே தெரிவு செய்தனுப்பிய எமது பிரதிநிதிகளுக்கே தமது மக்களின் குறைநிறை தீர்க்க வேண்டிய அவசியம் இல்லாதபோது அக்கம்-பக்கம்-அயல் நாடுகளுக்கு எம்மேல் அக்கறை கொள்ளவேண்டிய தேவை இல்லை. மாறாக நம்மால் தெரிவு செய்யப்பட்டவர்களை வைத்தே நம்மை அடிமைப்படுத்தி எமது நாட்டின் வளங்களை தாங்கள் கொள்ளையடிப்பதிலேயே அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர்.

ஆதனால்தான் நாட்டில் இன்று நிலவும் சனாநாயக விரோத நடவடிக்கைளுக்கு ‘கண்துடைப்பான’ கண்டனங்களையும்-காரசாரமான அறிக்கைகளையும் தெரிவித்தபடியே நாட்டுக்கு நாடு போட்டி போட்டுக் கொண்டு அபிவிருத்திக்கான கடன்-மனிதாபிமான உதவி-முன்னேற்றத்திற்கான முதலீடு என்று கூறி ‘கலங்கிய குட்டையில்’ மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

நமது சனநாயகப் பிரதிநிதிகள் நாட்டின் சுலபமாக தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை கூட அவை தீர்க்கப்படக்கூடாது என்னும் வகையில் கையாளுகிறார்கள். அவற்றிற்கு ஒரு உதாரணம் அரசியல் கைதிகள் விவகாரம். நாட்டின் நலன் எனும் போது ‘இனமாகவும்’ இன நலன் என்று வரும் போது ‘சாதி-சமய-பால்’ வாரியாகவும் செயற்படுகிறார்கள். அதிகாரம் கிடைக்கும் போது ‘குடும்பம்-சொந்த பந்தம்’ மட்டுமே வாழப்பிறந்தவர்கள் என்பதையே நிலைநிறுத்துகிறார்கள்.

எனவே குடிமக்கள் நாம் சனநாயகத்தை மக்கள் சனநாயமாக மாற்றவேண்டும். ‘சனநாயகம்’ என்பது நீதி-நியாயம்-மனிதாபிமானம்-மக்களின் நலன் என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒரு பொறிமுறை. இதனை நன்கு விளங்கிக் கொண்டு அதனை அதிக அக்கறையுடன் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பும்-கடமையும் இன-மத-சாதி-சமய-பால் வேறுபாடுகள் கடந்து நாட்டின் மக்கள் அனைவருக்கும் உண்டு.

மக்களை மக்கள் புரிந்து கொள்ள மொழி ஒரு தடையல்ல. மக்கள் மக்களுடன் உறவாட ஒரு மொழி தேவையுமல்ல. மனிதநேயம் ஒன்றே போதும் மக்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள. இனவெறியால் நாம் இருந்ததையும் இழந்தோம். மொழி வெறியால் மொத்தமாக அழிந்தோம். நாடு எனக் கேட்டு நாடு கடந்தவர் லட்சம் பேர். மண் எனக் கூறி மடிந்தவர் லட்சம் பேர்.

கடந்த காலத்தில் நாட்டில் (படைகளின்)‘போர்’(கள்) நடைபெற்றதே தவிர(மக்களின்) ‘போராட்டம்’(கள்) நடாத்தப்படவில்லை. போர் ஆயுதத்தை முன்னிறுத்துவது. போராட்டம் சனநாயகத்தை நிலைநிறுத்துவது.

மனிதன் பிறந்ததும் பொக்கிள் கொடி துண்டிக்கப்பட்ட கணம் முதல் அவனது ‘போராட்டம்’ காற்றைச் சுவாசிப்பது என்பதில் ஆரம்பமாகி தனது சுவாசத்தை நிறுத்தி மரணமடைவது வரை தொடருகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட அவனது வாழ்க்கையின் மறு பெயர்தான் அரசியல். இதனை குடிமக்கள் புரிந்து கொண்டு தாமாக இயங்குவது தான் சனநாயகம் என்பதன் அர்த்தமாகும்.

இந்த சனநாயகம் தான் நாட்டின் மக்களை ஒன்றிணைக்கும். ஓரணியில் மக்களை திரட்டும். இவர்களால் மட்டுமே இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு ஒரு தீர்வை காணமுடியும்.