Language Selection

பவானி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலம்பெயர் நாடுகளில் சாதிக்குரிய தன்மைகளாகக் குறிப்பிடப்படும் பல அம்சங்கள் தெற்காசிய சமூகங்களிக்கிடையே விரவிக்கிடக்கின்றது.

சாதியமும் சாதிய அடையாளங்களும் நீடித்துவரும் கொடுமைகளுக்கு எதிராக குறிப்பாக இங்கிலாந்தில் Equality Act 2010 கொண்டு வரப்பட்டு அது குறித்து விரிவான விவாதத்தை பாராளுமன்றத்தில் நடத்தி வருகின்றது.

கடந்த 2014-ல் இங்கிலாந்து தொழிலாளர் நீதிமன்றத்தில் முதன் முதலாக சாதி ரீதியான ஒடுக்குமுறை நடைபெற்றதை ஒப்புக்கொண்டு ஆவணப்படுத்தியுள்ளது. இதனை மேல் முறையீட்டு மன்றமும் ஒத்துக் கொண்டதுடன் அதற்க்கான இழப்பீட்டு தொகையினையும் அறிவித்துள்ளது.

இதை ஒட்டி >ERRA (ENTER PRISE AND REQULATORY ACT 2013) சட்டத்தின் மீது மேலும் அதிக மற்றும் சாதி ரீதியான குறிப்பிட்ட விசயங்களை விவாதத்திற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் எடுத்துக்கொள்ள அட்டவணையை உருவாக்கியுள்ளது. இவை ஒரு தகவலுக்காக புலம்பெயர் நாடுகளில் சாதியம் எவ்வாறு உள்ளது என்பதற்க்காக இதை குறிப்பிட்டுள்ளேன்.

நாம் ஏன் புலம்பெயர் நாடுகளிலும் “சாதி வெறியின்” அடையாளங்களை எதிர்க்க வேண்டியுள்ளது. நமது “பொது புத்தி” ஒருவரின் தனிப்பட்ட செயல்பாட்டை பாராட்டும் அதே நேரம் அவர் தன்னுடைய சாதிய பெருமிதத்தை முன்னிறுத்தி தன்னை முதன்மைப்படுத்தும் போது அதை எந்தவித கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள சொல்ல வைக்கப்படுகின்றது.

உயர் சாதிய அல்லது இடைநிலை சாதிகளின் முகவர்கள் தங்களுடைய இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள “சாதிய பெருமிதத்தை” தூக்கி வைத்துக் கொள்வதுடன் அதை ஏற்றுக்கொள்ள சொல்லி நிர்ப்பந்திப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.

“பொது புத்தி”யை பற்றி இத்தாலிய மாக்சிய அறிஞரும் பெனிடோ முசோலினியின் பாசிசத்தால் பாதிக்கப்பட்டவருமான அன்டனியோ கிராம்ஸியின் வார்த்தைகளில் “பொது புத்தியின் அடிப்படை பண்பு நலன் என்பது ஒரு மனிதனின் மூளையிலேயே அக்கருத்தாக்கம் துண்டானதாக, தொடர்பற்றதாக, விளைவுகள் உண்டாக்கததாக, மக்கள் திரளின் சமூக, கலாசார நிலைப்பாடோடு ஒத்துப்போவதாக அமைந்திருக்கும்” என்பதாகும் என கூறுகிறார். (பிம்ப சிறை)

சாதியம் குறித்தோ, பார்பனர்கள் தங்களின் உள்ளார்ந்த உயர்நிலையை வெளிப்படுத்தும் தருணங்களை அம்பலப்படுத்தும் போதோ,சாதிய ஒடுக்குமுறையாலோ அல்லது சாதிய மறுப்பாளர்களாலோ முன்வைக்கப்படும் விமர்சனங்களை புறந்தள்ளி பொது தளங்களில் ஆரிய அடிவருடிகளால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

அம்பேத்கர் குறிப்பிடுவது போல “சாதி இன்றளவும் தனக்கான பாதுகாவலர்களைக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு பரிதாப நிலையே. பாதுகாவலர்கள் பலர்” என்கிறார். (சாதியை அழித்தொழித்தல்)

சாதிய பாதுகாவலர்கள் தங்களின் முகப்புத்தகங்களிலும் இணையங்களிலும் “கழிந்து” வைப்பதை தலித்துகளும் சாதி மறுப்பாளர்களும் வந்து கழுவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

புலம் பெயர் நாடுகளில் ஊர் சங்கங்களின் பெயரில் சாதிய சங்கங்களாகவும் (உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் தெரிவின் போது நடந்த கொடுமை), இந்து சானதாநிகளின் இஸ்லாமிய விரோத போக்கு, தலித் விரோத போக்கு, பெண்களுக்கு எதிரான போக்கு, சிறுபான்மை இன விரோத போக்கு என வலதுசாரி போக்கு நீடித்து வருகிறது.

குறிப்பிடத்தக்க வகையில் புலம்பெயர் நாடுகளில் சாதியம் நிலைத்திருப்பதை தலித் மக்கள் உறுதிப்படுத்துவதையும், அதற்கு எதிராக மேல்சாதி இந்துக்கள் அதை மறுத்துரைக்கப்படுவதும் குறித்த விவாதத்தில் இன்றைய இங்கிலாந்து தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோபின் குறிப்பிடுகையில் “தெற்காசிய சமூகங்கள் தங்களின் வருகையுடன் தூய்மை வாதத்தையும், தனித்துவத்தையும், சாதியையும் எடுத்து வந்து விடுகிறார்கள் என்கிறார்.

ஆணவப்படுகொலைகள் ஒருபுறம், சாதியத்திற்கு எதிராக மிகப்பெருமளவில் ஒடுக்கப்பட்ட சமூகம் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், இந்துத்துவ கொள்கையுடன் இணைந்து செயற்பட்டுவரும் பார்ப்பன ஆதிக்க சாதிகளின் “பெருமிதங்களை” தகர்க்க முன்னெடுக்கும் சக்திகளுடன் இணைந்து போராடுவோம்.

-பவானி