Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகப்பட விழாக்களில் எல்லாம் ஒப்பற்ற பல விருதுகளை வென்றவையும், தமிழ் மண்ணின் வாழ்வை ஓவியமாக படச்சுருள்களில் பதிந்து தந்தவையுமான காலத்தை வென்று காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்கப் போகும் கோடம்பாக்கத்து தமிழ்ப் படங்களை இலங்கைத் தமிழர்கள் சிலர் கள்ளத்தனமாக பதிவு செய்து வெளியிடுகிறார்கள் என்றும் இப்படிப்பட்டவர்களிற்காகவா நாம் போராடினோம் என்று ஒரு இயக்குனர் பொங்கி எழுந்திருக்கிறார்.

இதைக் கேட்டு விட்டு கோடம்பாக்கத்து கொள்கை வீரர்கள் இப்படிப் பேசலாமா, ஈழப் போராட்டத்திற்கு நீங்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பையே இப்படிப் பேசிக் கொச்சைப்படுத்தி விட்டீர்களே என்று சில ஈழக் கைப்பிள்ளைகள் கலங்கிப் போயிருக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பையும் பெரியார் பேசுவது போல் வெங்காயம் என்று ஏசலாமா? அல்லது ஈராக்கியப் பத்திரிகையாளன் கொலைகாரன் ஜோர்ஜ் புஷ்சிற்கு காலில் போட்ட செருப்பை கழற்றி எறிந்தது போல எறிவதிற்கு பழஞ்செருப்புகளை சேர்த்து வைக்கலாமா?

கோடம்பாக்கத்து கொள்கை வீரர்கள் என்றைக்கு தமது தொழிலான, தமது கலையான தமிழ்த் திரைப்படத் துறைக்கு உண்மையாக இருந்தார்கள்? அவர்கள் பச்சை வியாபாரிகளே தவிர என்றைக்கும் கலைஞர்களாக இருந்ததில்லை. தமிழ் திரைப்படத்தின் சந்தையை விட மிகச் சிறிய சந்தையைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகளில் இருந்து எல்லாம் தரமான படங்கள் வெளி வருகின்றன. ஆனால் இந்த வியாபாரிகள் மிக மட்டமான தரத்தில் இருக்கும் தமிழ்ப்படங்களை தொடர்ந்து கொடுத்து மக்களின் ரசனையை கெடுத்து விட்டு நல்ல படங்கள் ஓடுவதில்லை என்று பழியை மக்களின் மேல் போடுகிறார்கள்.

எப்படி இவர்கள் தமது தொழிலிற்கு, கலைக்கு உண்மையாக இருப்பதில்லையோ அது போலத் தான் மக்களின் பிரச்சனைகளிற்கும் அவர்களின் போராட்டங்களிற்கும் என்றைக்கும் உண்மையாக இருப்பதில்லை. எம்.ஆர் ராதா போன்ற ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களின் துயரங்களாகட்டும், காவேரி நீர் இன்றி பயிர்கள் வாடுவதால் வாழ்வை இழக்கும் தமிழ்நாட்டு விவசாயிகளின் துன்பங்களாகட்டும் இவர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?. உண்ணாவிரதப் போராட்டம் என்று கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வந்து பந்தலில் இருப்பது தான் போராட்டமா? கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற கள்ளர்களை எதிர்த்து மக்களும், முற்போக்கு அமைப்புக்களும் போராட்டம் நடத்தினால் இவர்கள் அய்யா, அம்மா, தெய்வமே என்று அந்தக் கொள்ளையர்களின் காலில் விழுந்து விழா எடுப்பார்கள்.

கோடம்பாக்கத்தில் இருந்து கொண்டு இலங்கை அரசை எதிர்த்து இவர்கள் போராட்டம் நடத்துவார்கள். ஏனென்றால் இலங்கை அரசு தமிழ்நாட்டிற்கு வந்து கைது செய்யவா போகிறது? ஆனால்  இலங்கையில் இருந்து அனைத்தையும் இழந்து ஆதரவு தேடி வரும் அகதிகளை தமிழ்நாட்டு அரசு முகாம்களில் கைதிகளை போல் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து இந்த கோடம்பாக்கத்து அட்டைக்கத்தி வீரர்கள் ஒரு நாளும் வாய் திறக்க மாட்டார்கள். முகாம்களில் வாழும் அகதிகளை அதிகாரிகள், காவல்துறையினர் என்னும் தமிழ்நாட்டு அரசின் அற்பப்பதர்கள் உள, உடல் ரீதியாக துன்புறுத்துவதை இவர்கள் ஒரு நாளும் எதிர்த்ததில்லை.

ஈழ மக்களிற்காக போராடுகிறோம் என்று சொல்லும் இந்த தமிழ்நாட்டு திரைப்படக்காரர்களின் தானைத் தலைவரான சீமானின் தமிழ்நாட்டு கூட்டாளிகள் யாரென்று பார்த்தால் இவர்களின் யோக்கியதை என்னவென்று தெரியும். தமிழ்நாட்டை மொட்டையடிக்கும் ஜெயலலிதாவின் சினேகிதி சசிகலாவின் புருசன் என்ற ஒப்பற்ற ஒரு தகுதியை வைத்துக் கொண்டு கோடீஸ்வரனான கமிசன் கொள்ளையன் நடராஜன், இயற்கையை அழிக்கும் கனிமக் கொள்ளையன் வைகுண்டராசன், தற்போது உள்ளே போயிருக்கும் கல்விக் கொள்ளையன் பச்சைமுத்து என்று தமிழ்நாட்டின் மாபியாக்களின் காலில் விழுந்தும் கட்டித் தழுவியும் கலந்து உறவாடும் சீமான் தான் இலங்கைத் தமிழ் மக்களிற்காக குரல் கொடுக்கும் மூத்த தளபதி என்றால் மற்ற இளைய தளபதிகளைப் பற்றி என்னவென்று எடுத்துரைக்க?

படம் பார்ப்பவர்களின் காதிலே கூடை கூடையாக பூவை வைத்து மயிர்க்கூச்செறியும் சாகசச் சண்டைகள் போடும் தமிழ்ப்படங்களில் கடைசிக்காட்சியில் போனால் போகிறதென்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து வில்லன்களை கைது செய்வது போல சேரன் பேசியதில் ஒரு உண்மை இருக்கிறது. "இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என்று அவர் பேசியதில் "அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு" என்பது ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக விளங்குகிறது.

ஆம், எப்படி தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் துயர்வாழ்க்கை உங்களில் சிலருக்கு பிழைப்பாகவும், விளம்பரமாகவும் இருந்ததோ அப்படியே புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சிலருக்கும் எமது மக்களின் அவலம் தான் பிழைப்பாக இருக்கிறது. இந்த மாபியாக்கள் தான் ஈழப் போராட்டத்தின் ஆதரவாளர்கள் போல நடித்துக் கொண்டு மக்களை அழிக்க துணை போனார்கள். போராட்டத்தை உளவு நிறுவனங்களிற்கு காட்டிக் கொடுத்தார்கள். போராட்டத்திற்கு என்று பணம் சேர்த்து தங்கள் பைகளில் போட்டுக் கொண்டார்கள். இந்த மாபியாக்கள் தான்  தமிழ்ப்படங்களை களவாக பதிவு செய்து வெளியிடுபவர்கள். இந்த புலம்பெயர் மாபியாக்களின் குற்றங்களை நீங்கள் முழு இலங்கைத் தமிழர் மீதும் சுமத்தியிருக்கிறீர்கள்.

இந்த புலம்பெயர் கள்ளர் கூட்டம் தமது ஏமாற்றுக்களை மறைப்பதற்காகவும், விளம்பரத்திற்காகவும் தமிழ்நாட்டின் திரைப்பட, அரசியல் ஈழ ஆதரவு பிழைப்புவாதிகளை புலம்பெயர் நாடுகளிற்கு அழைத்து கூட்டங்கள் போடுவது, தமிழ் நாட்டில் கூவுவதற்காக கூலி கொடுப்பது என்று கொண்டும், கொடுத்தும் உறவு கொள்கிறது. அந்த நன்றிக் கடனிற்காகத் தான் சேரன் கள்ளர் கூட்டத்தை காட்டிக் கொடுக்காமல் முழு இலங்கைத் தமிழர் மீதும் பழி போடுகிறார். மாபியாக்களின் களவிற்காக அவரிற்கு இலங்கை மக்களை நினைக்கவே அருவருப்பாக இருக்கிறதாம். என்ன ஒரு அற்பத்தனம்; என்ன ஒரு துவேசம்.

ஒரு சிலர் செய்யும் பிழைகளிற்கு ஒரு இனத்தையே இழுத்து பேசுவது இன, மத, சாதி வெறியர்களின் வழக்கம். தமிழ் நாட்டின் பிழைப்புவாத தமிழின வெறியர்கள் மக்களின் பிரச்சனைகளிற்கு காரணமான உலகமய முதலாளித்துவம், அவர்களின் தரகர்களான மத்திய மாநில அரசுகள், மக்களைப் பிரிக்கும் பார்ப்பனியம் என்பவற்றை பற்றி ஒரு போதும் பேசுவதில்லை. மலையாளிகள், தெலுங்கு மக்கள் தான் தமிழ்மக்களின் வறுமைக்கு காரணம் என்று இனவெறி பேசுவார்கள். ஈழ மக்களின் அழிப்புக்கு இந்திய மத்திய அரசுடன் காலம் காலமாக எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் துணை நின்றதை மறைத்து விட்டு நாராயணன் போன்ற மலையாளிகள் மத்திய அரசில் பதவியில் இருந்ததை வைத்துக் கொண்டு மலையாளிகள் ஈழ மக்களின் எதிரிகள் என்று உளறுவார்கள்.

ஈழ மக்களை அழிக்கும் மத்திய அரசில் மலையாளிகள் மட்டுமில்லை எத்தனையோ பச்சைத் தமிழர்களும் பதவிகளில் இருக்கிறார்கள் என்பதையோ; இந்திய இராணுவத்தில் இருந்த எத்தனையோ பச்சைத் தமிழர்கள் இந்திய இராணுவம் இலங்கையில் தமிழ்மக்களைக் கொன்ற போது சேர்ந்து கொன்றார்கள் என்பதையோ இந்த தமிழின வெறியர்கள் மறந்தும் பேசுவதில்லை. அவர்களின் பிழைப்புவாத, மக்கள் விரோத அரசியல் என்பது இனவாதம் பேசி மக்களை உணர்ச்சி வசப்படுத்துவது தான் அதனால் தான் அத்தகைய பிழைப்புவாதியான சேரனும் குற்றத்தைப் பற்றி பேசாமல் இலங்கைத் தமிழர் என்று இனவெறி பேசுகிறார்.

தமிழ் நாட்டில் மக்கள் அரசியலை பேசும், நடைமுறையில் போராடும் முற்போக்கு அமைப்புக்கள் ஈழமக்களிற்காகவும் போராடுகிறார்கள். ராஜிவ் காந்தி கொலையின் பின்பு காங்கிரஸ் கயவர்களும், ஈழத்தாய் ஜெயலலிதாவின் அ.தி.மு.க குண்டர்களும் காவல்துறை நாய்களும் தமிழ்நாட்டில் இருந்த இலங்கைத் தமிழர்களைத் தேடித் தேடி தாக்கிய போது முற்போக்கு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தான் எதிர்த்து போராடினார்கள். பாதுகாப்பு கொடுத்தார்கள். ஆனால் அந்தத் தோழர்களை, அவர்களின் போராட்டங்களை இன்று சேரனின் பேச்சைக் கேட்டு பொங்கும் ஈழக் கைப்பிள்ளைகள் கவனிப்பதில்லை. அரசியல், திரைப்பட வெளிச்சத்தில் நின்று ஏமாற்றும் பிழைப்புவாதிகள் தான் ஈழ ஆதரவாளர்களாக கண்ணிற்கு தெரிகிறார்கள் என்றால் தவறு பிழைப்புவாதிகளின் மேல் இல்லை ; நமது தான். "நீரளவே ஆகுமாம் நீராம்பல்".