Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்திய ராணுவத்தால் படுகொலைக்குள்ளான யாழ் வைத்தியசாலை ஊழியர்கள்

ராஜிவ் காந்தி என்ற கொலைகாரன் அனுப்பிய இந்திய இராணுவம் ஆயிரக்கணக்கான எம்மக்களைக் கொன்றது. எமது மண்ணை எரித்துச் சாம்பலாக்கியது. இக்கயவர்களினால் அழிக்கப்பட்ட எமது பெண்களின் கண்ணீர் இன்று வரை நிற்கவில்லை. ஆசைப் பெற்றோரை எமது குழந்தைகள் இழந்தார்கள். இக்கொலையாளிகள் கொன்ற கணவன்மாரை நினைத்து கதறும் பெண்களின் விசும்பல்கள் காற்றில் இன்னும் கலந்திருக்கின்றன. காதல் மனைவியரை காவு கொடுத்த ஆண்களின் அடி மனதிலிருந்து எழும் ஓலங்கள் இன்னும் ஓய்ந்திடவில்லை.

சிரியாவின் அலெப்போ நகரத்தின் ஒம்ரான் என்னும் சிறு குழந்தை இரத்தம் தோய்ந்த முகத்துடன் புழுதி படிந்த உடலுடன் சலனம் இல்லா விழிகளுடன் சாய்ந்திருக்கிறான். இந்தப் பச்சைக் குழந்தை யாருக்கு என்ன செய்தது? ஒம்ரானைப் போலவே எம்குழந்தைகள் ராஜிவ் காந்தியின் கொலைகாரகள் போட்ட குண்டுகளால் குருதி வடிந்த உடல்களுடன் குளறி அழக் கூட வாய் திறக்க முடியாத வலிகளுடன் இடிந்து விழுந்த வீடுகளிற்குள் மயங்கிக் கிடந்தார்கள். இன்னும் சில குஞ்சுகள் வலி இன்றி, வாயில் இருந்து ஒலி இன்றி கண்களை நிரந்தரமாக மூடி காந்தி தேசம் தமிழ் மக்களின் மீது காட்டிய வன்மத்தின் சாட்சியங்களாய் மண்ணில் கிடந்தார்கள்.

இந்தக் கொலைகாரர்களிற்கு எமது மண்ணில் இந்திய சுதந்திரமான தினமான ஆவணி பதினைந்து அன்று பலாலி விமான நிலையத்தில் அமைந்திருக்கும் இந்திய இராணுவத்தினரின் நினைவுத்தூபியில் இந்திய தூதரகத்தினர், இந்திய இராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினராம். எமது மக்களைக் கொன்றவர்களிற்கு எமது மண்ணில் அஞ்சலி செலுத்துகிறார்கள். இதை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் கட்சிகள் என்று சொல்லும் எந்தவொரு கட்சியும் கண்டிக்கவில்லை. எந்தவொரு தமிழ்த் தலைவருக்கும் இது மரணித்த எம் மக்களின் மீது ஏறி மிதிக்கும் கயமைத்தனம் என்று தெரியவில்லை.

சோவியத் யூனியன் (ரஸ்சியா), அமெரிக்கா என்று உலகம் இரு அரசியல் துருவங்களாக பிரிந்து கிடந்த நாட்களில் இந்திரா காந்தியின் இந்தியா சோவியத் யூனியனின் பக்கம் இருந்தது. ஜெயவர்த்தனாவின் இலங்கை வழக்கம் போல அமெரிகாவின் அடிமையாக இருந்தது. எண்பத்து மூன்றாம் ஆண்டு ஜெயவர்த்தனா என்ற கொலைகாரன் தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்து விட்ட இனக்கலவரத்தின் போது கூட தமிழ்மக்களைக் காப்பாற்ற இந்தியா எதுவும் செய்யவில்லை. பார்த்தசாரதி டெல்லிக்கும், கொழும்புக்கும் பறந்து திரிந்து பரபரப்பு காட்டியது தவிர வேறொன்றும் நடக்கவில்லை.

இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்ததினால் மறுபக்கத்தில் சோவியத் யூனியன் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஆதரித்தது. அதனால் இந்தியாவும் அந்நாட்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பக்கம் நின்றது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருந்தது. எதிரிக்கு எதிரி என்ற நோக்கமே தவிர பாலஸ்தீன மக்களின் கண்ணீரும், கவலை தோய்ந்த வாழ்வும் இவர்களிற்கு ஒரு பொருட்டே இல்லை என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. ஆனால் தமிழ் மக்களிற்கு அந்தளவிற்கு ஒரு அங்கீகாரத்தைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை என்னும் போது இன்று அமெரிக்காவின் ஒற்றைத் தலைமை புதிய உலக ஒழுங்கின் கீழ் இருக்கும் இந்தியா தமிழ் மக்களிற்கு தீர்வு பெற்றுத் தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் இந்தியாவிற்கு பஜனை பாடி, காவடி எடுக்கும் கூட்டம் இதை என்றும் கண்டிக்கப் போவதில்லை. அமைதி காக்கும் படை என்னும் பெயரால் ராஜிவ் காந்தி அனுப்பி எமது மக்களிற்கு அழிவையும், அவலத்தையும் தந்த கூட்டம் வந்து போய் இருபது வருடங்கள் கூட இன்னும் ஆகவில்லை. இந்திய அரசு என்னும் இரத்தம் குடிக்கும் பேய்களினால் எமது மக்கள் அனுபவித்த துன்பங்களின் வாழும் சாட்சியங்களாக எமது மக்கள் இருக்கிறார்கள்; என்ற போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய அதிகார வர்க்கம் எமது மக்களிற்கு தீர்வு பெற்றுத் தரும் என்று தனது தேய்ந்து போன பொய்களை வெட்கமின்றி சொல்கிறது என்னும் போது இந்திய இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்துவதை மட்டும் எதிர்க்கவா போகிறது?

மேற்கு நாடுகளில் உள்ள வலதுசாரிக் கட்சிகளும்; தொழிலாளர் கட்சி (பிரித்தானியா), சோசலிசக் கட்சி (பிரான்ஸ்) என்று இடதுசாரிக் கட்சிகள் என்று பொய்முகம் காட்டி மக்களை ஏமாற்றும் கட்சிகளும் பாராளுமன்ற ஆசனங்களிற்காக ஒருவரை ஒருவர் எதிர்த்தாலும் வெளியுறவுக் கொள்கைகளில் ஒன்றாகவே இருப்பார்கள். அப்கானிஸ்தான் போர், ஈராக்கின் மீதான படையெடுப்பு என்று எந்த அக்கிரமிப்பிலும் அவர்கள் பாராளுமன்றங்களில் சேர்ந்தே படையெடுப்புகளிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அவ்வாறே ஒருவரை ஒருவர் எதிர்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்பனவும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்பவற்றின் காலில் விழும் கொள்கையில் ஒன்றாகவே இருக்கிறார்கள். ஆகவே இந்திய இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்துவதை அவர்களும் எதிர்க்கப் போவதில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் கண்டிய நடனம் தொடர்பான பிரச்சனையின் போது மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்; வன்முறை வேண்டாம்; சிறு பொறியை பெரு நெருப்பாக கிளறி விட காத்திருக்கும் இனவாத சக்திகளிற்கு இடமளிக்கக் கூடாது என்று இடதுசாரி அமைப்புக்கள் அறிக்கை விடுத்தார்கள். ஆனால் சில தமிழ்த்தேசிய குஞ்சுகள் "தமிழ் மண்ணில் சிங்களவர்களின் வாலாட்டினால் மண்டை உடையும், மறுபடியும் ஒரு சண்டை வரும்" என்று வீரவசனம் பேசினார்கள். ஆனால் தமிழ் மக்களைக் கொன்றவர்களிற்கு தமிழ் மண்ணில் அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த மைனர் குஞ்சுகள் இருந்த இடமே தெரியாமல் இருக்கிறார்கள். வாயும், வீராப்பும் களத்தே போக்கி வெறுங்கையோடு கணனிக்குள் தலையைக் கவிட்டு விட்டார்கள் மைனர் குஞ்சுகள்.

இப்போது இந்திய இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். கொன்றவர்களிற்கு அஞ்சலி செலுத்துபவர்கள் கொல்லச் சொன்னவனை மட்டும் மறந்து விடுவார்களா? யாழ்ப்பாணம் முற்றவெளியில் ராஜீவ் காந்திக்கு சிலை வைத்தாலும் அச்சரியப்படுவதிற்கில்லை. அமெரிக்கரை வரவேற்கச் சென்ற அய்யா சம்பந்தன், விக்கினேஸ்வரன், அண்ணன் மாவை சேனாதிராசா ராஜிவ் காந்திக்கு சிலை வைத்தால் வராமலா இருக்கப் போகிறார்கள்?

ஏற்கனவே பல தடவை எடுத்துச் சொன்ன சண்முகம் சிவலிங்கத்தின் "எகிப்தின் தெருக்களில்" என்ற கவிதையின் ஒரு பகுதியைத் தான் இந்த மானம் கெட்ட தரகர் கூட்டங்களிற்கு மறுபடியும் ஒரு தரம் சமர்ப்பணம் செய்கிறேன்.

சொல்வார் சொல்லிற்கு

தலை அசைத்து கரம் கூப்பி

கறுப்பை வெள்ளை என்றால் அதையும் நம்பி

வெள்ளையைக் கறுப்பு என்றால் அதையும் நம்பி

பிடாரனின் ஊதலிற்கு

தலை கெழித்து தலை கெழித்து

வளைந்து நெளிந்து அடங்கிச் சுருளும்

சவமாய் சவங்களாய்

எங்கள் ஆண் உடம்புகள் ஏன் எழுவதில்லை?

எங்கள் யோனிகள் ஏன் அரிப்புக் கொள்வதில்லை?”