முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் செயற்குழு உறுப்பினர் குமார் குணரத்தினத்திற்கு இலங்கை குடியுரிமையை மீள வழங்க இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்குமாயின் அவரின் அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்யவதில் தமக்கு பிரச்சினை கிடையாது என அவுஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னைய மகிந்தா ஆட்சிக்காலத்தில் அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர் கொண்டமையால் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சமடைந்து, அந்த நாட்டின் குடியுரிமையினை குமார் குணரத்தினம் பெற்றிருந்தார். அவரது எண்ணம் எப்போதும் நாடு திரும்பி அரசியலில் ஈடுபடுவதாகவே இருந்து கொண்டிருந்தது. அதற்க்கான சந்தர்ப்பத்திற்க்காக காத்திருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரி - ரணில் கூட்டு அரசியல் காரணங்களிற்க்காக மகிந்த ஆட்சியில் நாட்டை விட்டு வெளியேறியவர்களை மீள வந்து அரசியலில் ஈடுபட அறைகூவல் விடுத்திருந்தது.
தேர்தல் காலத்தில் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசில் சபை உறுப்பினர் குமார் நாட்டிற்குள் வந்திருந்தார். தனது இலங்கை குடியுரிமையினை தேர்தல் கால வாக்குறுதிக்கு அமைய மீள வழங்கும் படி புதிய ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்ததுடன் குடியுரிமையினை மீள பெற்றுக் கொள்ள சட்ட ரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார் என நேற்றைய தினம் (19/08/2016) ராஜகிரியவில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
ஆனால் நல்லாட்சி அரசு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக குமார் குணரத்தினத்தின் குடியுரிமைக்கான பதிலை வழங்காது மௌனம் காத்ததுடன், குடிவரவு திணைக்களத்திற்கு உத்தியோக பற்றற்ற அறிவுறுத்தல்களை வழங்கி குமாரின் விண்ணப்பத்தை கிடப்பில் போட்டதுடன் அவரை சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் தங்கி இருந்த குற்றச்சாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 4ம் திகதி கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசிடமிருந்து எழுத்து மூலமான உத்தரவாதம் கிடைத்தால் தாம் குமார் குணரத்தினத்தின் குடியுரிமையினை ரத்து செய்யும் முடிவினை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.
ஜாகொட அவர்கள் தம்மிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள்; வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையானது; சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப ஒரு நபரை, அவரை ஏற்றுக் கொள்ளப்படும் மற்றொரு நாட்டில் இருந்து உத்தரவாதத்தைப் பெற்றும் வரை திரும்பப் பெற முடியாது என்று விளக்கினார் என்று கூறினார்.
அங்கு பேசிய ரவீந்திர முதலிகே, இப்போது பந்து இலங்கையின் நீதிமன்றத்தில் என்று கூறியுள்ளார். மேலும் "ஆஸ்திரேலியா குணரட்னம் சார்பாக தலையிடு செய்வதை நாம் விரும்பவில்லை. எமது தலைவரது எண்ணம் ஆஸ்திரேலியா திரும்புவது அல்ல. இலங்கை குடியுரிமை மீண்டும் பெறுவதே." என தெரிவித்தார்.
முசோக கட்சியினால் இந்த விடயத்தில் ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடிகிறது. வெளிப்படையாக, ஆஸ்திரேலியா குணரத்தினத்தின் குடியுரிமையினை ரத்து செய்வதன் மூலம் அவரை நாடு அற்ற ஒருவராக்கும் நிலைக்கு தள்ள விரும்பவில்லை. அதனாலேயே இலங்கை அரசிடமிருந்து எழுத்து மூலமான உத்தரவாதத்தினை எதிர்பார்த்து நிற்கின்றது.