உலகு முழுவதும் மக்கள் கொடுங்கோலர்களை எதிர்த்து உரிமைகளிற்காக வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். தம்மைச் சுரண்டிக் கொழுக்கும் ஊழல் ஆட்சியாளர்களிற்கு எதிராக மக்களை வறுமையில் வாழ வைக்காதே என்று போராடுகிறார்கள். ஒடுக்கப்படும் மக்கள் இனவெறியர்களிற்கு எதிராக, மதவெறியர்களிற்கு எதிராக போராடுகிறார்கள். இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய கொலைகாரனும்; நாட்டையும், மக்களின் உழைப்பையும் சுரண்டிய மிகக் கேவலமான ஊழல் பெருச்சாளியுமான மகிந்த ராஜபக்சா கண்டிக்கு பாதயாத்திரை போய் "நானும் ஒரு போராட்டக்காரன் தான்" என்கிறான்.
இவனையும் இவனது தறுதலைப் பிள்ளைகளையும் கொலைகளையும், கொள்ளைகளையும் அண்ணன் காட்டிய வழியில் அடியொற்றிய கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச என்ற தம்பிகளையும் மைத்திரி-ரணில் கூட்டுக் கம்பனி சுற்றி வளைப்பதிலிருந்து தப்புவதற்காக இந்த பாதயாத்திரை நடத்தப்பட்டது. இவர்கள் மீது தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததற்காக என்றைக்குமே மைத்திரி-ரணில் கம்பனி மட்டுமல்ல எந்தவொரு இலங்கை அரசும் வழக்குகளை தொடுக்கப் போவதில்லை. இந்த கொலைகாரக் கும்பலின் அநியாயங்களை எதிர்த்து, ஜனநாயக உரிமைகளிற்கு குரல் கொடுத்ததிற்காக இந்தப் பேய்களினால் கொல்லப்பட்டவர்களிற்கு என்றைக்குமே எந்த அரசும் நீதி வழங்கப் போவதில்லை.
மைத்திரி சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்காவின் கூட்டு அரசாங்கங்கத்திற்கு மகிந்த ராஜபக்சவின் கும்பலால் அச்சுறுத்தல் வரக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழக்குகளை இந்த அரசு விசாரணைக்கு எடுத்திருக்கிறதே தவிர மகிந்த கும்பலால் கொல்லப்பட்டவர்களைப் பற்றியோ இவர்களால் சூறையாடப்பட்ட நாட்டைப் பற்றியோ இன்றைய இலங்கை அரசு என்றைக்கும் கவலைப்படப் போவதில்லை.
தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று குரல் எழுப்புவர்களை பயங்கரவாதிகள் என்றும், இலங்கையை வெளிநாடுகளிற்கு விற்பவர்கள் என்றும் முத்திரை குத்தியும் இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானது, பக்கச்சார்பற்றது என்று சான்றிதழ் வழங்கியும் வந்த மகிந்த கும்பலும், சிங்கள பெளத்த இனவெறிக் கூட்டமும் இன்று தங்கள் மீதான வழக்குகளை அவர்களே சான்றிதழ் கொடுத்த இலங்கையின் நீதிமன்றங்களில் சந்திக்க முடியாமல் "ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்து விட்டது" என்று ஊளையிட்டுக் கொண்டு ஊர்வலம் போகிறார்கள்.
மகிந்த கும்பலின் கொலைகளிற்கும், கொள்ளைகளிற்கும் எதிராக மிக மெலிதாக குரல் எழுப்பியவர்களின் மீது கூட கழிவு எண்ணெய் வீசினார்கள். விசுவாசம் என்ற ஒன்றைத் தவிர வேறேதும் அறியாத வளர்ப்புப்பிராணிகளான நாய்களை இந்தப் பேய்கள் கொன்று வீடுகளின் முன்னால் போட்டார்கள். "இடது முன்னணியின்" தலைவரான கலாநிதி விக்கிரமபாகு வெளிநாடுகளில் தமிழ் மக்களின் இனப்படுகொலை குறித்து பேசினார் என்பதற்காக அவர் இலங்கை திரும்பிய போது விமானநிலையத்தில் வைத்தே மகிந்தவின் காடையர்களால் தாக்கப்பட்டார். இப்படிப்பட்ட பொறுக்கி தனது கண்டி பாதயாத்திரையை இந்த அரசு தடுக்கப் பார்க்கிறது என்று புலம்புகிறது.
ஆறுமுகம் வீரராஜ் ஒரு இரப்பர் தோட்டத் தொழிலாளி. தோட்ட நிர்வாகம் கொடுத்திருக்கும் சிறு குடிசையில் வாழ்கிறார். நாளாந்த கூலியில் தனது குடும்பத்தின் பசியாற்ற வேண்டிய வறுமை சூழ்ந்த வாழ்வு. உடலையும், உழைப்பையும் உறிஞ்சும் தோட்டவேலை முடித்து வீடு வந்தாலும் சாய்ந்து சிறிது ஓய்வு எடுக்க முடியாமல் உடலையும், மனதையும் பெருஞ்சுமை ஒன்று அழுத்துகிறது. அவரின் மகன் லலித் வீரராஜ் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கிறார்.
அவரின் மகன் லலித் மகிந்தாவின் தறுதலைப் பிள்ளைகளைப் போல் கொலை செய்யவில்லை. பொதுமக்களின் சொத்துகளைக் கொள்ளை அடிக்கவில்லை. லலித் செய்த குற்றம் என்ன? தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் போனவர்களே பயந்து பேசாமல் இருந்த போது காணாமல் போன தமிழ் மக்களின் உறவினர்களை ஒன்று சேர்த்து மக்கள் போராட்ட இயக்கத்தினால் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியது தான் அவர் செய்த குற்றம். அதன் பின் யாழ்ப்பாணத்தில் வைத்து "காணாமல் போனவர்களை வெளிப்படுத்து", "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என்ற முழக்கங்களை முன் வைத்து ஒரு போராட்டத்தை மக்கள் போராட்ட இயக்கத்தினால் நடத்த குகன் முருகானந்தனுடன் சேர்ந்து ஒழுங்குகள் செய்து கொண்டிருந்தது தான் லலித்தும், குகனும் செய்த குற்றம்.
மகிந்த அரசின் அமைச்சரவை பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல லலித்-குகன் கடத்தப்பட்ட வழக்கில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் "லலித் மற்றும் குகன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது உண்மை என்றும் லலித் மற்றும் குகன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கை ஒன்றை ஆதாரமாகக் கொண்டே தான் அவ்வாறு தெரிவித்ததாகவும் அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும்" சாட்சியம் அளித்திருக்கிறார்.
ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவன் மகிந்த ராஜபக்ச. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவன் கோத்தபாய ராஜபக்ச. இந்த இரு கொலைகாரர்களையும் நீதிமன்றமும் அழைக்கவில்லை. லலித்தின் தந்தைக்கும், குகனின் மனைவிக்கும் இந்த அரசும் எந்த நீதியையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.
சரணடைந்த இசைப்பிரியா போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளின் கொலைகளிற்கு என்றைக்குமே இவன் மறுமொழி சொல்லப் போவதில்லை. பாலச்சந்திரன் போன்ற பாலகர்களின் மரணங்களிற்கும் நீதி கிடைக்கப் போவதில்லை. மரணித்த மக்களிற்காக ஒரு அஞ்சலி செலுத்துவதற்கு ஆயிரம் தடைகள் போடும் இந்த அரசு இந்த கொலைகாரனை சுதந்திரமாக பாத யாத்திரை போக அனுமதித்திருக்கிறது. மகிந்தவின் அரசு மாறி மைத்திரி அரசு வந்ததும் "நல்லாட்சி அரசு வந்து விட்டது என்றும், "தமிழர்களின் பிரச்சனைகளிற்கு பேசி தீர்வு காண்போம்" என்றும் பொய் பேசும் கயவர்களை இனம் கண்டு கொள்வோம். இலங்கையின் மக்கள் விரோத இனவெறி அரசுகள் முகங்களை மாற்றுமே தவிர கொலைகார மனங்களை என்றைக்குமே மாற்றப் போவதில்லை.