Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இனரீதியான வன்முறையை அடுத்து "மனித நாகரீகத்தையே இழந்து நிற்கும் யாழ் பல்கலைக்கழகம்" என்ற குறிப்பில் "இன நல்லிணக்கம் வந்து விடக் கூடாது என்று விரும்புகின்றவர்களின் இனவாத அரசியலுக்கு வெளியில், யாழ் பல்கலைக்கழக நிகழ்வை விளங்கிக் கொள்ள முடியாது. வன்முறையை தூண்டியவர்கள், அதில் ஈடுபட்டவர்கள், அதை ஆதரிப்பவர்கள் அனைவரும் மனித விரோதிகளாவார்கள். சக மனிதனின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மதிக்க மறுக்கின்றது யாழ் பல்கலைக்கழகம் என்பதே உண்மை. மனிதனை மனிதன் நேசிக்காத, தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகும். இந்த சிந்தனை முறையும், காட்டுமிராண்டித்தனமும், காலாகாலமாக தொடரும் சாதிய மேலாதிக்க ஒடுக்குமுறையின் வெளிப்பாடு. பெண்கள் மீதான ஆணாதிக்கத்தின் நீட்சி"யாகும். இப்படி நடந்த வன்முறை குறித்து, ஒரு குறிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தேன். இக் குறிப்பு பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்து இருந்தது. நடந்த வன்முறையையும் சாதியத்தையும் எப்படி தொடர்புபடுத்த முடியும் என்ற கேள்வியை எழுப்பி இருந்தனர்.

"தமிழனின்" கலாச்சாரம் என்பது என்ன? ஜனநாயகம் குறித்து "தமிழனின்" அளவீடு என்ன? இந்த கேள்விகள் மூலம் "தமிழ்" சமூகத்தை புரிந்து கொள்ளமுடியும். "தமிழன்" என்ற பெயரில் எப்படி குத்தி முனங்கினாலும், தமிழனின் கலாச்சாரமாக இருப்பது சாதியம் தான். சாதி கடந்த கலாச்சாரமல்ல. அதாவது ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட சாதிகளைக் கொண்ட தமிழ் சமூகத்தில், ஜனநாயகத்துக்கு இடமிருப்பதில்லை. ஜனநாயகத் தன்மையற்ற சாதியக் கலாச்சாரமே தமிழனின் வாழ்வியலாக இருக்கும் அதேநேரம், மறுபட்ட வாழ்க்கை முறைகளுக்கு எதிராக இழிவும் வன்முறையும் தொடர்ந்து அரங்கேறுகின்றது என்பதே எதார்த்தம். 

இங்கு ஜனநாயகம் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் அடிப்படையான தெளிவை நாம் வந்தடைந்தாக வேண்டும்;. தமிழ் சமூகம் சாதிய சமூகமாக இருப்பதாலேயே, ஜனநாயகத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. தமிழனின் சாதிக் கலாச்சாரம் என்பது சாராம்சத்தில் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது. இது உண்மையாக இருப்பதை, யாரும் மறுக்க முடியாது. யாழ் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கடந்து, வன்முறை நியாயப்படுத்திய பின்னணியில் இந்த சாதிய மற்றும் ஜனநாயகமற்ற தன்மையையே நாம் காண முடியும்.  தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் .. போன்ற காரணங்களை முன்னிறுத்தியவர்களும் சரி, ஒடுக்கும் (சிங்கள) இனவாதத்தைச் சொல்லி நடந்த வன்முறையை நியாயப்படுத்தினாலும் சரி,  சமூகத்தை வன்முறை கொண்டதாக நிலை நிறுத்துவதையே கோருகின்றனர்.  இது ஏன்?

தமிழின் வன்முறை கலாச்சாரம் என்பது, அடிப்படையில் சாதியக் கலாச்சாரமாக இருப்பதால் தான். ஒடுக்கப்பட்ட சாதிகளை அடங்கி வாழுமாறு ஒடுக்கும் சாதிகளின் வன்முறையே,  அடிப்படையில் தமிழ் கலாச்சாரமாக இயங்குகின்றது. இந்த சாதியக் கலாச்சாரத்தில் ஜனநாயகத் தன்மை இருப்பதில்லை. இதனால் இயல்பிலேயே ஜனநாயகத்தை மறுப்பவர்களாக இருக்கின்றனர்.      

இங்கு தமிழ் கலாச்சாரமாக முன்னிறுத்தப்படுவது ஒடுக்கும் சாதியத்தின் ஆதிக்க கலாச்சாரத்தையே ஒழிய, வேறுபட்ட கலாச்சாரங்களையோ ஒடுக்கப்பட்ட மக்களின் கலாச்சாரத்தையோ அல்ல. குறிப்பாக யுத்தத்தின் பின் முதன்மையாக முன்னிறுத்தப்படுவது இந்துத்துவ மத அடிப்படையிலான ஒடுக்கும் சாதிய மேலாண்மையே. குறிப்பாக மேலாதிக்க பண்பாட்டுக் கூறுகள், ஒடுக்கப்பட்ட சாதிய சமூகத்தை வன்முறைக்கு உள்ளாக்கி வருகின்றது. 

இந்தப் பின்னணியில் தமிழ் மொழியை பேசுகின்ற கிறிஸ்துவ, முஸ்லிம் மக்களின் பண்பாடுகள் பொது இடங்களில் புறக்கணிக்கப்பட்டு, இந்துத்துவ கலாச்சாரம் முன்னிறுத்தப்படுவதுடன் ஒட்டுமொத்த சமூகம் மீது திணிக்கப்படுகின்றது. கிழக்கு, வன்னி, மலையகம் என்று பிரதேசம் சார்ந்த பன்மையான பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளை மறுத்து, யாழ் இந்துத்துவ சாதிய கலாச்சாரம் முன்வைக்கப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட சாதிய மக்களின் வேறுபட்ட பல பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளை மறுத்து, ஒடுக்கும் சாதியக் கலாச்சாரம் திணிக்கப்படுகின்றது.   

வடக்கில் பொது இடங்களில் தமிழ் மொழி பேசும் மக்களின் பன்முகமான பண்பாட்டுக் கலாச்சார கூறுகளை நிராகரிக்கின்ற பின்னணியில், சிங்கள மொழி சார்ந்த பண்பாட்டு கூறை யாழ் பல்கலைக்கழகம் நிராகரித்து இருக்கின்றது. இந்த பின்னணியில் இருந்தே, யாழ் பல்கலைக்கழகத்தில் வன்முறையை ஏவியதைக் காண முடியும். 

இங்கு இந்த வன்முறையில் பிரதான கூறாக 1.தமிழ் இனவாதமும், 2.ஒடுக்கும் சாதிய யாழ் மேலாதிக்க கூறும், ஒன்றை ஒன்று சார்ந்து பரஸ்பரம் வினையாற்றிய பின்னணியில் வன்முறையை நடத்தியிருக்கின்றது.                

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கக்கூடிய - ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்கள் தங்கள் வாழ்வியல் பண்பாடு சார்ந்து இருக்கக்கூடிய பறை மேளத்தையோ, உடுக்கையையோ. யாழ் பல்கலைக்கழகம் தன்  பிரதேசம் சார்ந்த பண்பாட்டுக் கூறாக அங்கீகரிப்பதில்லை. இந்த உண்மையை வன்முறையுடன் பொருத்திப் பார்க்கவேண்டும். இங்கு ஒடுக்கும் சாதி மேலாதிக்கமே, வன்முறையை கொண்டு எங்கும் இயங்குகின்றது. தமிழ் ஆதி பண்பாடான பறையோ, உடுக்கினையே தமிழ் (தேசிய) அடையாளமாக, தமிழ் கலாச்சாரத்தின் கூறாக முன்னிறுத்தினால், அதன் மீது சாதி இழிவுபடுத்தலும், அதை மீறினால் வன்முறையும் என்பது பொது விதியாக இருக்கின்றது.  

இங்கு யாழ் பல்கலைக்கழகம் பல்கலை கொண்ட, பல் பண்பாடு கொண்ட பல்கலைக்கழகமாக இல்லை. மாறாக ஒடுக்கும் சாதிய பண்பாட்டை முன்னிறுத்தி, அதை நடைமுறைப்படுத்த இனவாதத்தை பயன்படுத்துகின்றது. இது தான் யாழ் பல்கலைக்கழக வன்முறையின் பின்னான சாரம். 

இந்த சாதிய வன்முறை சமூகத்தை மூடிமறைக்க ஒடுக்கும் இனவாதத்தை முன்னிறுத்துகின்றனர். கடந்தகால மற்றும் நிகழ்கால ஒடுக்கும் இனவாத சூழலைக் காட்டி, தங்கள் சாதிய சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் நிலைநிறுத்த முனைகின்றனர்.      

வரலாற்று ரீதியான இனவொடுக்குமுறையின் விளைவாகவே யாழ் பல்கலைக்கழக நிகழ்வு நிகழ்ந்ததாக கூறி தமிழ் இனவாதத்தை (சிங்கள இனவாதத்தை எதிர்த்து சிங்கள இடதுசாரிகள்  விமர்சிக்கின்ற பொதுப் பின்னணியை, தமிழ் இனவாதத்துக்கு சார்பாக பொருத்திப் பார்ப்பது அடிப்படையில் தமிழ் இனவாதம்) நியாயப்படுத்த முனைகின்ற பின்னணியில் கூட, இந்த மனிதவிரோத சாதியமே கொப்பளிக்கின்றது. 

நடத்த வன்முறை வெளிப்படையாக இனவாதமாக இருந்த போதும், சாதியம், வர்க்கம், ஆணாதிக்கம் இதற்கு அடிப்படையாக இருக்கின்றது. இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாது,   அனைத்தையும் தமிழனை முதன்மையாக முன்னிறுத்தி சிந்திக்கின்ற சிந்தனைமுறையும், அது சார்ந்த செயற்பாடுகளும் யாழ் மேலாதிக்க தன்மையைக் கொண்டதே. இந்த வகையில்   தமிழை சிந்தனை முறையாகக் கொண்ட பெரும்பாலான "இடதுசாரி"களின் பார்வைகளும் இதைத்  தாண்டியதல்ல.     

ஒடுக்கும் இனவாதம் ஒடுக்கப்பட்ட இனவாதமாகவும், அதுவே ஒடுக்கும் இனவாதமாக மாறிவிடுகின்ற பின்னணியில், ஒடுக்கும் சாதிய சமூக அமைப்பை கொண்டதாக இயங்குகின்றது. நடந்த வன்முறை என்பது தமிழ் சாதிய சமூக அமைப்பினை விரிவுபடுத்தவும், பாதுகாக்கவுமே இனவாதத்தைக் கையில் எடுத்தது என்பதே உண்மை. சாதி சமூகத்திற்கு பலியானவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்; என்பதே உண்மை.