Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எனது மயிர் பொசுங்கி விட்டது

எனது தோல் கருகி விட்டது

எனது காதுச்சோணைகள் கருகி விட்டன

இந்த ரணங்களோடு தான்

மீண்டும் எழுந்திருக்கின்றேன்

 

இந்த ஊனங்களின்

தழும்புகளுடன் தான் நான் இனி வாழவேண்டும்.

"மீண்டும் எழுந்திருக்கையில்" என்ற சண்முகம் சிவலிங்கத்தின் இந்தக் கவிதை போலத் தான் எம் தமிழ்மக்களும் கருகிய காயங்களுடனும், பெருகும் அவலங்களுடனும் வாழ்கிறார்கள். இனக்கலவரங்களினாலும், இனப்படுகொலையினாலும் இறுகப் பதிந்த தழும்புகள் என்றைக்கும் மறையப் போவதில்லை. "இனி மரணத்துள் வாழ்வோம்" என்று இன்னொரு கவிதையில் இந்த கவிஞன் இரண்டு வரியில் சொன்னது போல் எம்மக்கள் இலங்கையின் இனவெறி, மக்கள் விரோத அரசுகளின் அடக்குமுறைகளின் கீழ் வாழ்கிறார்கள்.

இலங்கையின் அரசியல்வாதிகள் என்னும் அயோக்கியர்கள் வாக்குப் பொறுக்குவதற்கு இனவாதம் பேசி மக்களை கொல்கிறார்கள். இலங்கைக்கு பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த அதே 1948 ஆம் ஆண்டிலேயே கொஞ்சமும் தாமதிக்காமல் அரச அதிகாரத்தில் இருந்த இனவாதிகள் தமது பித்தலாட்டங்களை தொடங்கினார்கள். இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் சேனநாயக்கா என்ற இலங்கை இனவாதிகளின் பிதா அதே ஆண்டில் கொண்டு வந்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தின்படி "சிங்களப் பெயரையுடைய ஒருவர் இலங்கையின் பிரஜையாக கருதப்பட்ட அதே சமயம் தமிழ்ப் பெயர்களைத் தாங்கி நின்ற மலையகத்தவர்கள் இலங்கை பிரஜைகளாக கருதப்படவில்லை, அல்லது சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட்டனர்". (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், க.மோகன்ராஜ்.)

இலங்கையின் வரலாறு இவ்வாறு இனவாதங்களின் வரலாறாக இருக்கையில், ஒரு சிறு பொறி எரிந்தால் அதைப் பெருநெருப்பாக்கி மக்களை எரிநெருப்பில் தள்ள இனவாதிகள் காத்திருக்கும் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களிற்கும், சிங்கள மாணவர்களிற்கும் இடையில் மோதல் நடந்திருக்கிறது. சிங்கள மாணவர்கள் தாமாகவோ அல்லது இனவாத சக்திகளினால் தூண்டப்பட்டோ கண்டிய நடனத்தை கொண்டு வந்ததை தமிழ் மாணவர்கள் பேசித் தீர்த்திருக்க வேண்டும். மாணவிகளைக் கூட இரத்தம் வருமளவிற்கு தாக்கிய வன்முறை காட்டுமிராண்டித்தனமானது. எமது சமூகத்தின் கையறுநிலையை கணமும் சிந்திக்காத பொறுப்பற்றவர்களின் செயல் இது.

அதிகாரத்துடனும், அதட்டும் பார்வையுடனும் இராணுவத்தினர் தமிழ்ப்பிரதேசங்கள் எங்கிலும் வலம் வருகின்றனர். மக்களின் காணிகள், வீடுகள், ஊர்கள் அரசினால் களவெடுக்கப்பட்டு மக்களை அவலத்தில் வாழ விதித்திருக்கிறார்கள். எத்தனையோ நூற்றாண்டுகளிற்கு முன்னரே மிக முற்போக்கான பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்பிய கெளதம சித்தார்த்தனை கடவுளாக்கி, கல்லாக்கி தமிழ்ப்பிரதேசங்கள் எங்கும் இலங்கை அரசும், இராணுவமும் நிறுத்தி வருகின்றனர். இனப்படுகொலையினால் எம்மக்கள் கொல்லப்பட்டதும், எம்வாழ்வு அழிந்து போனதும் மனதை விட்டு என்றும் மறையப் போவதில்லை. தமிழ் மக்களின் மீதான இந்த ஒடுக்குமுறைகளை செய்யும் ஆட்சியாளர்கள் சிங்கள மொழி பேசுபவர்களாக இருப்பதால் சிங்கள் மக்கள், சிங்கள மொழி, சிங்கள மக்களது பண்பாடு என்பன தமிழ் மக்களிற்கு எதிரானதாக பொதுவான கருத்து தமிழ்மக்களிடையே நிலவுகிறது.

அதனால் தான் சிங்கள மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கண்டிய நடனத்தைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டது மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய வயதிலும், மனநிலையிலும் இருக்கும் தமிழ் மாணவர்களினால் சிங்கள மேலாதிக்கமாக பார்க்கப்பட்டு வன்முறையில் முடிந்தது. ஆனால் சிங்கள் இனவெறி அரசுகளினால் தமிழ்மககளின் மீது கட்டவிழ்த்து விடும் சிங்கள இனவாதத்திற்கு எதிராக போராடுவதை விடுத்து தம்முடன் ஒன்றாகப் பயிலும் மாணவர்களின் கோரிக்கை ஒன்றிற்கு எதிராக வன்முறையில் இறங்கியதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையின் ஆட்சியாளர்கள் என்னும் நயவஞ்சகர்களினால் தூண்டப்பட்டு சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் மத்தியில் இனவாதம் நிலவுவதைப் போல பிற்போக்கு தமிழ்த் தலைமைகளினால் தூண்டப்படும் தமிழ் இனவாதத்தின் பிரதிபலிப்பு தான் இந்த வன்முறை.

இலங்கையில் சிங்கள மக்கள் பெருமளவில் வசிக்கும் பிரதேசங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழ் மாணவர்கள் தமிழ்ச் சங்கங்களை வைத்திருக்கிறார்கள். பேராதனை பல்கலைக்கழகத்து குறிஞ்சிக் குமரன் கோவில் போன்ற சைவக்கோவில்கள் இருக்கின்றன. இனக்கலவரங்களின் போது சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை இனவெறியர்களிடம் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். இடதுசாரி மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்களில் இருந்து கொண்டு முழு மாணவர் சமுதாயத்தையும் பாதிக்கும் தனியார் பல்கலைக்கழகம் போன்ற இலங்கை அரசுகளின் கல்வியை விற்பனை செய்யும் கயமைத்தனங்களிற்கு எதிராக போராடுகிறார்கள். பெரும்பாலான மாணவர் சமுதாயம் இவ்வாறு இனவாதம் அற்று, முற்போக்காக இருக்கும் போது தமிழ் மாணவர்கள் தம் பொறுப்பு உணர்ந்து கொள்ள வேண்டும். இனவாதத்தை முறியடிக்க வேண்டிய தம் கடமையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்களப் பெருமை பேசி தமிழ், முஸ்லீம் மக்களை சிங்கள மக்களின் எதிரிகளாக காட்டி தமிழ், முஸ்லீம் மக்களை கொன்ற இலங்கையின் ஆட்சியாளர்கள் இலட்சக்கணக்கான சிங்கள மக்களைக் கொல்வதற்கு கணமும் தயங்கவில்லை. எழுபத்தொன்றில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக்கட்சி அரசும், எண்பத்தேழு - எண்பத்தொன்பதில் பிரேமதாசாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசும் வறுமை இல்லா, பசி இல்லா சமுதாயம் வேண்டி கிளர்ந்தெழுந்த மக்கள் விடுதலை முன்னணியினரை (J.V.P) இலட்சக்கணக்கில் கொன்றனர். புலிகளை அழித்து இலங்கையையும், சிங்கள மக்களையும், பெளத்தத்தையும் காப்பாற்றினேன் என்று ஊளையிட்ட மகிந்த ராஜபக்சா தான் குடிநீரை தொழிற்சாலைக் கழிவுகளால் நஞ்சாக்காதே என்று போராடிய வெலிவேரியாவின் சிங்கள மக்களைக் கொன்றான். வெளிநாட்டு ஆடைத்தொழிற்சாலை முதலாளிகளின் அராஜகங்களிற்கு எதிராக போராடிய கட்டுநாயக்கா தொழிலாளர்களை கொன்றான். கடற்தொழிலாளர்களிற்கு வழங்கப்பட்ட மானியங்களை குறைப்பதை எதிர்த்து போராடிய புத்தளத்து கடற்தொழிலாளி அந்தோனியைக் கொன்றான். இதே போலத்தான் பிற்போக்கு தமிழ், முஸ்லீம் தலைமைகள் இனவாதம், மதவாதம் பேசி தத்தம் சொந்த மக்களை காட்டிக் கொடுக்கிறார்கள். இலங்கையின் ஆட்சியாளர்கள் என்னும் அயோக்கியர்களுடன் சேர்ந்து பிரச்சனைகளிற்கு தீர்வு காண்போம் என்று ஏமாற்றுகிறார்கள்.

டி.எஸ் சேனநாயக்கா என்ற இனவாதி தமிழ்ப்பெயரைக் கொண்டிருந்த மலையகத் தமிழரை நாடற்றவர்களாக்கினான். மகிந்த ராஜபக்ச என்ற கொலைகாரன் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தான். இன்று மறுபடியும் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், தான் செய்த ஊழல்களையும், சிங்கள மக்களின் மீது செய்த கொலைகளையும், வன்முறைகளையும் சிங்கள மக்களின் மனதில் இருந்து அழிப்பதற்காகவும் இனவாதம் பேசி கண்டிக்கு பாதயாத்திரை போகிறான். இந்த அயோக்கியர்களின் புகலிடமான இனவாதத்தை ஒன்று சேர்ந்து முறியடிப்போம். தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என்று பிரிந்து நின்று நாம் இரத்தம் சிந்தியது இனியும் வேண்டாம். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து இனி ஒரு விதி செய்வோம். எம்மை அடக்கி ஆளுவோருக்கு எதிராக போர் செய்வோம்.