கடந்த 16ம் திகதி சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நடந்த மோதல் சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளர். அதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட விடயத்தில் தலையீடு செய்ய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தோழர் துமிந்த நாகமுவ ஊடக சந்திப்பின்போது கூறிய கருத்துக்கள்.
“யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு வடக்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் தென்பகுதி மாணவர்கள், விஷேடமாக சிங்கள மாணவர்கள உள்நுழையத் தொடங்கினர். இந்த நடைமுறை நான்கு வருட காலமாக இருந்து வருகின்றது. யாழ். பல்கலைக்கழக சூழுலுக்குள் இருந்தே அனைவரும் இது குறித்து பேசுகின்றனர். நாம் இந்த உரையாடலை தொடங்குவதற்கு முன்பு ஒரு விடயத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
யாழ். பல்கலைக்கழகம் அமைந்திருப்பது யாழ்ப்பாண நகரில். யாழ்ப்பாணம் இருப்பது வடக்கில். வடமாகாணம் இருப்பது இலங்கைக்குள். பெரும்பாலான மக்கள் இந்த விடயத்தை மறந்துவிட்டு யாழ்ப்பான பல்கலைக் கழக வளவிற்குள் இருந்துக் கொண்டு இந்த மோதல் குறித்து கருத்து கூறுகின்றனர். இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தோ வடக்கின் அரசியலிலிருந்தோ பிரித்தெடுத்து இந்த விடயத்தை பேச முடியாது. கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டால், புதிய மாணவர்களை உள்வாங்கும்போது அவர்களை வரவேற்பதற்காக வருடம்தோறும் ஒரு விழா நடாத்தப்படும். அந்த இனிய விழாவில் சிங்கள கலாச்சார அம்சமொன்றை சமர்ப்பிக்கும் விடயத்தில் ஏற்பட்ட வாய்த்தர்கம் இந்த மோதலுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இந்த விழாவில் இவர்கள் கூறும் சிங்கள கலாச்சார அம்சம் இதற்கு முந்தைய வருடங்களிலும் இடம்பெற்றிருந்தது. இம்முறை அந்த கலாச்சார அம்சம் இடம் பெற்றிருந்தமை தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்பு அது மோதலாக மாறியுள்ளது. எனவே, இது ஒரு நடனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மாத்திரமல்ல. யாழ்ப்பாணத்தில் நிலவும் அரசியல் முரண்பாட்டின், அரசியல் மன அழுத்தத்தின் வெளிப்பாடகவே நாம் இந்த சம்பவத்தை காண்கின்றோம்.
ஆகவே, பல்கலைக்கழகத்திற்கு வெளியில் வந்த சம்பவம் என்பதால் பல்கலைக் கழக மாணவர்களது பிரச்சினை என்ற வகையில் மாத்திரம் பேசப்படுவது நியாயமாக இருக்காது. இதை விட விரிவாக இது குறித்து பேசப்பட வேண்டும். இது சம்பந்தமாக கருத்துக்களை முன்வைக்கும் சிலர், இந்த மோதல் ஏற்படுத்திய மன அழுத்தத்தை தனிக்கும் நோக்கில் இங்கு இனவாதமொன்றும் கிடையாது, இரு மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதல் மாத்திரமே, அதனை இனவாதத்தோடு தொடர்புபடுத்த வேண்டாமென கூறுகின்றனர்.
இந்தப் பிரச்சினை தவறாக விளங்கப்பட்டுள்ளதாக நாங்கள் நினைக்கின்றோம். அது சரியாக பாதுகாப்பிற்காக காட்போட் வீடுகளுக்குள் நுழைவதைப் போன்றது. அதனால் பாதுகாப்பு கிடைக்காது. இந்த சம்பவத்தின் மூலம் இனவாதமும் தலை காட்டியுள்ளது. இனவாத மனோநிலையுடன் தலையிட்டமையால் ஏற்பட்ட மோதலாகத்தான் இதனை நோக்க வேண்டும். ஏன், நோயை சரியாக அறிந்து கொள்ளாவிட்டால் சிகிச்சையளிப்பது இயலாத காரியம். அடுத்த விடயம், இந்த மோதலினால் நாட்டில் ஏற்பட்டுள்ள கருத்தாடல் சம்பந்தமாகவும் அவதானிக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தை அரசியல் கட்சிகளும் திடீரென கையிலெடுத்து விட்டன. அவர்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அது குறித்து எமது கருத்தையும் கூற வேண்டும். முப்பது வருடகாலம் நீடித்த யுத்தம் 2009 நடுப்பகுதியில் முடிவுக்கு வந்ததை நாம் அறிவோம். அதன் பின்பு இன்னொரு யுத்தமோ, இனவாத மோதலோ இந்த நாட்டில் ஏற்பட மாட்டாதென பெரும்பாலானோர் கருதினார்கள். யுத்தம் முடிந்து விட்டதுதான். ஆனால், யுதத்திற்காக மண்ணை தயார்படுத்திய இனவாதம் மற்றும் இன ஒடுக்குமுறை இன்னும் ஓயவில்லை. யுத்தம் தொடங்குவதற்கான காரணிகளும் அப்படியே தொடர்கின்றன. இந்த நிலையில்தான் எமது நாட்டில் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, இனவாதம் துளிர்விடாது என நினைக்க முடியாது. மீண்டும் ஒரு யுத்தம் வராது என எம்மால் கூற முடியாது.
முப்பது வருடம் நீடித்த யுத்தத்திற்கு நட்டஈடு செலுத்திவிட்டு நிம்மதிப் பெருமூச்சோடு மறுபக்கம் திரும்பும்போதே கடந்த ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான யுத்தமொன்றுக்கு பின்புலத்தை அமைத்ததை நாங்கள் மறக்க முடியாதது. தர்கா நகரை தீயிட்டு, அளுத்கம மக்களை தாக்கி பொது பல சேனா என்ற அடிப்படைவாதிகள் அமைப்பு ரீதியல் செய்த அட்டூழியத்தை எம்மால் மறக்க முடியாது. அந்த சம்பவம் குறித்து இப்போது வேறு கதை சொல்கின்றார்கள். முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் காட்டி ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக செய்யப்பட்ட சதி எனவும் சிலர் கூறுகின்றார்கள். ஆனால், பாதுகாப்பு கொடுத்து அனுசரனை வழங்கி பொது பல சேனா போன்ற அமைப்புகளை ஊதிப் பெருக்க வைப்பதற்காக செயற்பட்ட விதத்தை நாம் கண்டோம். இந்நாட்டில் எவரும் அமைதியான எதிர்ப்பை காட்ட, ஆர்ப்பாட்டம் செய்ய முடியாதிருந்த நிலையிலும் அளுத்கமையில் பற்றி எரியவில்லையா? மக்கள் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும்போது துப்பாக்கி வேட்டுக்களால் பதிலளிக்கப்பட்டதை மறக்க முடியுமா? மீனவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் துப்பாக்கியை கொண்டு பதிலளிக்கப்பட்டது. ஆனால், பொது பல சேனாவிற்கு மாத்திரம், தான்; விரும்பியவாறு தர்கா நகரில் வன்முறை ஆட்டம் போட சந்தர்பம் கிடைத்தது. அங்கே இனவாதம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் கண்டோம்.
ஜனவரி 8ம் திகதிக்குப் பின்பு நடந்த மாற்றங்கள் என்ன. அன்றிலிருந்து இந்நாட்டின் தமிழராகட்டும், முஸ்லிமாகட்டும் சிறுபான்மை மக்களின் எந்தப் பிரச்சினையும் இந்த அரசாஙகத்தின் கீழ் தீர்க்கப்படவில்லை என்பதுதானே உண்மை. இந்த இனவாதத்திற்கு பின்புலமாகச் செயற்படும் நுட்பமான விடயங்களை நாம் அறிந்திட வேண்டும். "இது எமது சிங்கள நாடு" என்பதே இனவாதிகளின் பொதுவான கருத்தாக உள்ளது. இது எமது சிங்கள நாடு என்று தொடங்கியவுடன் எழுகின்ற வாதமானது சிங்களவர்கள் தான் நாட்டின் பெரும்பான்மை, ஆகவே முஸ்லிம், தமிழ் மக்கள் அவர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதே.
இது ஒட்டுமொத்த சிங்கள மக்களினதும் மனோநிலை என நாம் கருதவில்லை. ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மத்தியிலும் அப்படின ஒரு நிலை இருப்பதாகக் கருத முடியாது. ஆனால், சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களே அப்படியான கருத்தை சொல்கின்றார்கள். அதன்படிதான் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படிதான் இராணுவ காவல் நிலயங்களை அமைப்பதா என தீர்மானிக்கப்படுகின்றது. அதன்படிதான் அரசியல் சிறைக்கைதிகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுகின்றது. சிறைக்கைதிகளென்று யாரும் கிடையாதென அரசாங்கம் கூறுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஜனவரி 8ம் திகதிக்க முன்பு அரசியல் சிறைக்கைதிகள் இருந்தார்கள், வடக்கு- கிழக்கு மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது என்று ஏற்றுக் கொண்டார்கள். இப்போது அரசாங்கத்திற்கு அவை பிரச்சினையாகத் தெரிவதில்லை.
இவை அனைத்தும் ஒரு உண்மையை உணர்த்துகின்றது. அதாவது தமிழராயினும் முஸ்லிமாயினும் அனைவருமே சிங்களவர்களுக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்பதே. இதனால் சிங்கள மக்களுக்கு கடுகளவாவது நன்மை கிடைக்கப் போவதில்லை. நீங்கள் தான் சிறப்புரிமை பெற்ற மக்கள் என்று கொஞ்சம் சந்தோசப்படலாம் அவ்வளவுதான். அப்படியிருந்தாலும் சிங்கள மக்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. 1948லிருந்து இவர்கள் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அரசியலை இப்படித்தான் முகாமைத்துவம் செய்தார்கள். அந்த நீண்டகால அரசியல் விளையாட்டின் தாக்கம்தான் மேற்படி சம்பவங்கள். இப்போது என்ன நடக்கின்றது. கடந்த காலங்களில் இன ஒடுக்கு முறை தொடர்பில் பேசுவதற்கு எடுக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றிற்காவது தீர்வு கிடைக்கவில்லை. அதன் விளைவுதான் இது.
தமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஏற்பட்ட மன உளைச்சல்தான் ஒவ்வொரு இடங்களிலும் வெளிப்படுகின்றது. பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றது. அதற்கு எதிர்வினையாக சிங்கள மக்கள் பதிலளிக்கின்றார்கள். அரசாங்கமும் இவ்விடத்தில் ஒரு படி முன்னேறியிருக்கின்றது. இதனை பாரதூரமாக எடுக்க வேண்டும், இது பாரதூரமான ஒரு சம்பவம், இதனை பரவ விடக்கூடாது என்று அரசாங்கத்திலுள்ள சிலர் புதுமையான அனுகுமுறையை கொண்டுவரப் பார்க்கின்றனர். உண்மையிலேயே அது ஒரு போலி அனுகுமுறை. இந்த பிரச்சினைக்குக் காரணமான காரணிகளில் ஒன்றுக்காவது தீர்வு காண்பதில் அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அனைத்து பிரச்சினைகளும் பழைய முறையிலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றன. தீர்வு கிடைக்காமையால் ஏற்படும் மன அழுத்தம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இச்சந்தர்ப்பத்தி;ல் இந்த இனவாதத்தை கொண்டு யாரை எழுப்பப் பார்க்கின்றார்கள்? யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவத்ததை பயன்படுத்தி குளிர்காய முயற்சிப்பது யார்?
1977ல் இலங்கையில் திறந்த பொருளாதாரம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு போதைப் பொருள் வியாபாரம் பரவலாகத் தொடங்கியது. அரசியல் பலவான்களின் அநுக்கிரகத்துடன் போதைப் பொருள் வியாபாரம் இரகசியமாக நடந்தாலும், இலங்கையில் பகிரங்கமாக யாரும் போதைப் பொருள் விற்க முடியாது. ஹெரோயின் விற்க முடியாது. ஆனால் அதிகார பலத்தை, பண பலத்தை கொண்டு இரகசியமாக வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இனவாதம் என்பது ஹெரோயினை விட பயங்கரமான போதைப் பொருள். வித்தியாசம் என்னவென்றால் அது வெளிப்படையாக நடக்கும் வியாபாரம். யாழ்ப்பாண சம்பவத்தின் பின்பு இப்போது, இனவாதிகள் வெளிப்படையாக இந்த இனவாதம் என்ற போதைப் பொருளை விற்கின்றார்கள். மறைந்திருந்த இனவாதத்தை மீண்டும் தலைதூக்கச் செய்யும் தேவை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2009ல் யுத்தம் முடிவுற்ற போதிலும், சிங்கள மக்களின் வாக்குகளைக் கொண்டு அதிகாரத்தை நடாத்திச் சென்றாலும், சிங்கள மக்கள் மத்தியில் அவர்களால் வரவேற்பை பெற முடியவில்லை. ஒரு மேடையில் எல்.டீ.டீ.ஈ.யை தோற்கடித்ததாகக் கூறி வாக்கு கேட்கின்றாரக்ள். இன்னொரு இடத்திற்குச் சென்று எல்.டீ.டீ.ஈ. மீண்டும் தலையெடுப்பதாகக் கூறி வாக்கு கேட்கின்றார்கள். மறுபுறம் முஸ்லிம் மக்களுடன் குரோதத்தை தூண்டச் செய்கின்றார்கள்.
இந்த சம்பவத்தின் பயன்படுத்தி மீண்டும் இனவாதத்தை உருவாக்குவதற்கு பின்புலம் அமைக்கப்பட்டு வருவதை நாங்கள் பார்க்கின்றோம். இப்போது நகைப்பிற்கிடமான கதையொன்றை பொது பல சேனாவும், முன்னால் அமைச்சர் விமல் வீரவன்சவும் கூறுகின்றார்கள். தெற்கின் பல்கலைக் கழகங்களில் இவ்வாறான கலையம்சங்களை சமர்ப்பிக்க தடையேதும் இல்லை, வடக்கில் மட்டும் இதை சமர்ப்பிக்க முடியாதது ஏன்? எனக் கேட்கின்றார்கள். இது அவர்களது கெட்டிக்காரத்தனம் என நினைக்கின்றார்ள். அவர்களுடைய விளையாட்டை போட நேர்ந்திருந்தால் இதற்கு முன்பே தெற்கு பல்கலைக்கழகங்களில் இனவாதம் பற்றி எரிந்திருக்கும். ஏன் அப்படி செய்ய முடியவில்லை? பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் இடதுசாரிய பாரம்பரியம், இடதுசாரிய கருத்தியல்கள் உறுதி செய்யப்பட்டிருந்தன. இனவாதம் தலைதூக்க முடியாதவாறான பின்புலமொன்று இலங்கை பல்கலைக்கழகங்களில் நிலவுகின்றது. இனவாதத்தை தூண்டுவதற்கு அழைப்பவர்கள் தெற்கு பல்கலைக்கழகங்களில் தற்போதைய நிலைமையை உதாரணமாகக் கொள்கின்றார்கள். முப்பது வருட யுத்த காலம் பூராவும் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் இனவாதத்தைத் தூண்ட, அழிவை உண்டாக்க முடியாமற் போனதற்கு காரணம் அவர்களது கெட்டிக்காரத்தனம் அல்ல. பல்கலைக்கழகங்களில் பன்முகத்தை ஏற்றுக் கொள்கின்ற தன்மை, ஜனநாயக சூழல், இனவாதத்தை ஓரங்கட்டிவிட்டு பல்கலைக்கழகங்களை நடாத்திச் செல்லக் கூடிய ஆற்றல் கிடைத்திருப்பது யாருடைய கெட்டிக்காரத்தனத்தினாலும் அல்ல. இடதுசாரிய அரசியல் பாரம்பரியத்தினால் உருவாக்கப்ட்ட சூழல் பல்கலைக்கழகங்களில் நிலவுகின்றது. இடதுசாரிய அரசியல் கட்சிகளினால் வரலாறு பூராவும் பல்கலைக்கழகங்களுக்குள் ஏற்படுத்திய நன்மையளிக்கக் கூடிய தலையீடுகளினால்தான் இது நிலைக்கின்றது.
இனவாதிகள் தமது வாதங்களை நியாயப்படுத்த தென் பகுதி பல்கலைக்கழகங்களின் இந்த நிலைமையை பயன்படுத்துகின்றார்கள். தர்கா நகரில், 83 கறுப்பு ஜூலையில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? அவர்களது இனவாதத்தை உறுதி செய்ய, இனவாதத்திற்கு எதிரான தலையீடுகளைக் கொண்ட தெற்கின் பல்கலைக்கழகங்களை உதாரணத்திற்கு எடுக்கின்றார்கள். இதில் ஒரு பாரதூரமான விடயம் மறைந்திருக்கின்றது. அதாவது, இப்போது வடக்கில் சிங்கள கலாச்சார அம்சங்களை சமர்ப்பிக்க முடியாது. ஆனால் சிங்களமல்லாத கலாச்சார அம்சங்களை தெற்கில் சமர்ப்பிக்க முடியும். தொடர்ந்தும் இதுபோன்று நடக்குமேயானால் நாமும் எதையாவது செய்தாக வேண்டும் என்ற செய்தியைத்தான் இவர்கள் சொல்கின்றார்கள். அதாவது தெற்கின் பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்களுக்கு சொல்கிறார்கள். "இப்போது நீங்கள் பதில் கொடுங்கள். வடக்கில் சிங்கள் கலாச்சார அம்சங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. தெற்கில் தமிழ் அல்லது வேறு கலாச்சார அம்சங்களை சமர்ப்பிக்க இடமளிக்காதீர்கள்" என இவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் இனவாதத்தை அணைப்பதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் அதற்கு எண்ணெய் ஊற்றப் பார்க்கின்றாரகள். இது சரியாக ஒரு புண்ணியவான் பாவம் செய்ய விருப்பமில்லாமல் ஒரு ஆட்டை கொல்வதற்கு கொடுத்ததைப் போன்று உள்ளது. ஒரு புண்ணியவான் இறைச்சிக் கடைக்குச் சென்று வீட்டில் ஒரு ஆடு இருப்பதாகக் கூறுகிறார். ஆட்டை கொல்ல இறைச்சிக் கடைக்காரர் வரும்போது புண்ணியவான் பூஜையில் இருக்கிறார். ஆட்டை கொல்வதில் அவர் சம்பந்தப்பட விரும்பவில்லை. எனவே அதோ அங்கே இருக்கிறது தடி, இதோ இங்கே இருக்கிறது ஆடு என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொள்கின்றார். தெற்கு பல்கலைக்கழகங்களை பற்றி கதைப்பவர்களும் இப்படித்தான் செயல்படுகின்றார்கள். அவர்கள் கூறும் இந்தக் கதை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகவே நாம் நினைக்கின்றோம்.
இது விடயத்தில் பிரச்சினையை தீர்ப்பதற்கு விமல் வீரவன்ச ஆலோசனை வழங்கியிருக்கின்றார். இராணு பலத்தை அதிகரிக்க வேண்டுமாம். இந்த மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் இதே கருத்து இருக்கக் கூடும். மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தக் கருத்து சரியானதுதான் என சிலர் கூற முடியும். யாழ். பல்கலைக்கழகத்திற்கு இராணுவத்தை அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்புதான் சிங்கள மாணவர்களை அனுப்ப வேண்டுமென சிலர் கருதலாம். ஆனால், இதற்கு முன்பு பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸ் காவலரண்கள் இருந்த அநுபமும் உண்டு. 1984ல் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அப்படித்தான் நடந்தது. ஜே.ஆர்.ஜயவர்தனாவின் ஐ.தே.க. அரசாங்கம் மாணவர்களை அடக்குவதற்கு இந்த திட்டத்தை செயற்படுத்தியது. பேராதெனியவில் தொடங்கப்பட்டது. கிடைத்த பலன் என்ன?
1984 ஜூன் 19ம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நடந்த மோதலில் பத்மசிரி அபேதீர் என்ற மாணவர் கொல்லப்பட்டார். பல்கலைக்கழகங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவரான ரோஹன ரத்நாயக் கொல்லப்பட்டார். இப்படியான இனவாத சூழ்நிலை அப்போது இருக்கவில்லை. சிங்கள மாணவர்களுக்கும், சிங்கள பொலிஸாருக்குமிடையில நடந்த மோதல். ஏன் அப்படி நடக்கின்றது? இந்த இளம் சிங்கள சமூகத்தின் மத்தியில் இரும்பு சப்பாத்தை கொண்டு பதிலளிக்க முயற்சிப்பதால்தான் இவ்வாறான அநுபவங்கள் கிடைக்கின்றன. அடக்குமுறை தீர்வுகளுக்குச் சென்றால் இம்மாதிரி கசப்பான அநுபவங்களுக்குத்தான் முகம் கொடுக்க வேண்டும். பொலிஸையும் இராணுவத்தையும் பயன்படுத்தி தீர்வு தேடப்போனால் இப்படியான நிலைமைகளதான் உருவாகும். அது இன்றோ நாளையோ அல்ல. அடக்குமுறையால் பதிலளிப்பது என்பது மோதலை பரவலாக்கும் செயலாகவே இருக்கும். அதன் முடிவு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கமிடையிலான அல்லது மாணவர்களுக்கும் இராணுவத்திற்குமிடையிலான மோதலாக மாறிவிடும். அது தமது விளையாட்டை காட்ட இனவாதிகளுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்துவிடும். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இப்போது, இந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் போன்ற அனைத்து மக்களும் எண்ணெய் குளியலில் மூழ்கியதைப் போன்று இருக்கின்றார்கள். வரிச்சுமை, பொருட்களில் விலை பிரச்சினை, செய்யும் தொழிலில் வருமானம் போதாமையால் மேலும் வருமானத்தை தேடப்போய் தமக்கேயான வாழ்வும் சமூக வாழ்வும் இல்லாமல் தடுமாறும் பிரச்சினை, வீடு வாசல் கட்டிக் கொள்ள கடன்பட்டால் கடனை திருப்பிச் செலுத்த முடிவில்லை, பிள்ளைகளை பாடசாலையில சேர்க்க முடியாத பிரச்சினை, நோய் நொடிக்கு மருந்தெடுக்க, பாமஸிக்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கும் பணத்தை கொடுத்து விட்டு கையில் ஒரு சதமும் மிச்சமிருக்காத பிரச்சினை. இவர்கள் எல்லோருமே எண்ணெய்க் குளியலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றார்கள். இனவாதிகள், எண்ணெய் குளியலில் இருப்பவர்களின் கைக்கு போதைப் பொருளை கொடுக்கின்றாரகள். இவற்றை பாவித்துவிட்டால் தமது உண்மையான பிரச்சினையை உணர முடியாது. நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இனவாதிகள் இதைத்தான் தருகின்றார்கள். இதனை பயன்படுத்திவிடடால் இந்நாட்டு பாடுபடும் மக்களின் பிரச்சினைகளை மறக்கடிக்க முடியும். இந்த இனவாத தீ பற்றி விட்டால் தமது இனம் என்று மக்களும் கொஞ்சம் சுயதிருப்தியடைவார்கள். ஆனால், அவர்களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்க ஆட்சியாளர்கள் இந்த மருந்தையே கொடுக்கின்றார்கள் என்பதை அவர்கள் உணரத் தவறி விடுகின்றார்கள்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து போராட வேண்டிய உண்மையான பிரச்சினைகளை இவற்றால் மறைத்து விடுகின்றார்கள். என்றாலும், இதற்கு என்ன தீர்வு என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வராத பட்சத்தில் இந்த நிலை தொடரத்தான் செய்யும். அதற்கான தீர்வை காண இந்த ஆட்சியாளர்களோ, பிரதான கட்சிகள் என்றுக் கூறிக் கொள்ளும் கட்சிகளோ முன்வரப்போவதில்லை. ஆட்சியாளர்கள் ஒருபோதும் தீர்வு காண முயற்சிக்க மாட்டார்கள். சிங்கள ஒடுக்கப்பட்டவர்கள் ஏன் முன்வரவேண்டும்? இந்த மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிங்கள ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தளவு முன்வருகின்றாகளோ, அந்தளவில்தான் அவர்கள் இனவாதக் கட்சிகளின் மாய வலையில் சிக்குவதிலிருந்து விடுபடுவார்கள். பிரபாகரன் போன்றவர்களிடமிருந்து தீர்வு காண நேரிடுவதற்கும், இனவாதத்தின் துணையை நாடுவதற்கும் காரணம் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமைதான். சிங்கள ஒடுக்கப்பட்டவன் அவர்களது பிரச்சினைக்காக் முன்வரும் நாளில் TNA அவர்களுக்குத் தேவைப்படாது. இனவாத அரசியல் அவர்களுக்குத் தேவைப்படாது. ஒடுக்கப்பட்ட சிங்களவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதாயிருந்தால், அவர்கள் நம் அனைவரினதும் உண்மையான பிரச்சினைகளுக்க தீர்வு காண முன்வருவார்கள்.
எனவே, ஒடுக்கப்பட்ட சிங்களவனும், ஒடுக்கப்பட்ட தமிழனும் முஸ்லிமும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றுபட வேண்டும். இப்போது தமிழ் மக்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு. இந்த இனவாதப் பொறியிலிருந்து மீண்டு, உண்மையான தீர்வு தேடும் திசைக்கு திரும்ப வேண்டும். இனவாதத்திலிருந்து இந்த சமூகத்தை மீட்டிடவும், ஒருவரையொருவர் கொலை செய்து கொள்ளும் மோதலை முடிவிற்கு கொண்டுவரக் கூடிய தீர்வும் அதுதான். சட்டத்தை பயன்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறுகின்றது. களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொடுத்த தண்டனையை நியாயப்படுத்தி அமைச்சர் சம்பிக ரணவக இந்தப் பிரச்சினை பற்றி பேசுகிறார். களனியில் கால்சட்டைக்குப் பதிலாக கவுன் (Gown) அணிந்து வருமாறு கூறப்பட்டது. அதனால் மாணவர்கள் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்களென்றால் வடக்கிலுள்ளவர்களுக்க ஏன் தண்டனையளிக்க முடியாதென கேட்கிறார். அதுதான் சரியான தண்டனை அதையே வழங்குங்கள் என்று கூறுகிறார். தண்டனையளித்து இவற்றை தீர்க்க முடியுமாயிருந்தால் எவ்வளவோ பிரச்சினைகளுக்க தீர்வு கண்டிருக்க முடியும். இவை தண்டனையினால் தீர்க்க முடியாத சமூகப் பிரச்சினைகள் என்றே நாங்கள் கூறுகின்றோம். ஆட்சியாளர்களால் இதுவரை தீர்க்க முடியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் இவை. அதிகார நோக்கத்திற்காக இந்தப் பிரச்சினைகளை பயன்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நடந்தது சமூகப் பிரச்சினை. இந்த சமூகத்தில் கொந்தளிக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காபோது பல வடிவத்தில் இது வெடிக்கின்றது. அங்கிருந்த தமிழ் மாணவர்களினதோ அல்லது சிங்கள மாணவர்களினதோ தவறுகளால் நடந்த சம்பவங்களல்ல இவை. ஒவ்வொருவரையும் சுட்டிக் காட்டி நீங்கள்தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டுமென குற்றம் சுமத்த அவர்களால் முடியும். இச்சந்தர்ப்பத்தில் யாழ். தமிழ் மாணவர்களுக்கு முக்கிய பொறுப்பொன்று உள்ளது. அங்கு அவர்கள் பெரும்பான்மை என்பதால் சிங்கள அல்லது வேறு மாணவர்களுடன் அமைதியான சூழலை ஏற்படுத்தி பல்கலைக்கழகத்திதை நடாத்திச் செல்ல மாணவர்கள் என்ற வகையில் முன்வர வேண்டும். அரசாங்கத்திற்கோ, நிர்வாகத்திற்கோ தேவையானவாறு இதை செய்ய முடியாது. மாணவர்கள் என்ற வகையில் பொறுப்பை ஏற்று தலையீடு செய்யும் கடமை அவர்களுக்கு உண்டு. வரலாறு பூராவும் தமிழ் மக்களிடமிருந்து, இளைய சமுதாயத்திடமிருந்து வாழ்க்கை உட்பட அனைத்தையும் பறித்த, பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பறித்த, வீடுவாசல் சொத்துக்களை நாசமாக்கிய ஒடுக்குமுறையையும் அடக்குமுறையையும் தொடுத்த இனவாதத்தை ஒதுக்கிவிட்டு இந்த விடயத்தை கவனிக்கும் பொறுப்பு மாணவர் சமூகத்திற்கு உண்டு.
இனவாதம் பரவலாவதற்கு வாய்ப்பளிக்காது, மாணவர்களின் மட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு மாணவர் தலைவர்களுக்கு நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம். அதேபோன்று, யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் உள்ள அரசியல் இயக்கங்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது பழைய இனவாத நோக்கத்துடன் செயற்படுவது தெரிகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவ்வாறான இனவாத நோக்கங்கள் தலைதூக்கக் கூடிய வாய்ப்புகளை மாணவர் சமூகம் தோற்கடிக்க வேண்டும். இந்த நிலைமையை மாற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர் சமூகத்திற்கும் மத்தியில் கருத்தாடலை, பேச்சுக்களை நடத்த வேண்டுமென நாம் கருதுகின்றோம். மாணவர் விகிதாசாரத்தை கூட்டியோ குறைத்தோ இதை செய்ய முடியாது. பொலிஸ் காவலரண் அல்லது இராணுவ தலையீட்டினாலும் இதை செய்ய முடியாது. மாணவர்கள் மத்தியில் இது குறித்து அவதானிப்பையும் புரிந்துணர்வையும் உண்டாக்கும் விதத்தில் தீர்வு காண்பது எப்படி என்ற கருத்தாடல் அவசியமாகின்றது.
மாணவர்களின் தலையீடு தேவை என்பதால் மாணவர் அமைப்பிற்கு இங்கு ஒரு பொறுப்பு உண்டு. இனவாதிகளின் உபதேசங்களுக்கு செவிமடுப்பதை ஒரு பக்கம் வைத்துவிட்டு, இந்நேரத்தில் ஏனைய பல்கலைக்கழகங்களில் இனவாதிகள் புகுந்து விளையாட இடம் கிடைக்காதவாறு செயல்படுங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இனவாதத்தை பயன்படுத்தி பல்கலைக் கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பொறுப்புடன் முன்வந்து யாழ். பல்கலைக்கழகத்தை திறக்கக் கூடிய நிலைமையை உருவாக்கும் முன்னுதாரணத்தை வழங்க மாணவர் அமைப்பிற்கு முடியுமென நாங்கள் நினைக்கின்றோம்.
இறுதியாக, இதனை இன்னுமொரு கறுப்பு ஜூலையாக ஆக்கி, அரசியல் இலாபம் பெற காத்திருக்கும் இனவாதிகளின் நோக்கத்திற்கு இடமளிக்க வேண்டாமென மாணவர்களிடமும், மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம். விஷேடமாக இனவாதத்திற்கு எதிரானவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் ஓரளவு விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் வாய்மூடி ஒதுங்கிவிடக் கூடாது. முன்னிலை சோஷலிஸக் கட்சியாகிய நாங்கள் யாழ். மக்களுடனும், மாணவர்களுடனும் இது குறித்து செயற்பட்டு வருவதோடு, இனவாத அரசியலை தோற்கடிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானித்துள்ளோம்.