அன்புக்குரிய அன்னையே, தந்தையே, தோழரே, தோழியரே…
முழு வாழ்க்கையையும் நாசமாக்கிய யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்டன. நீங்களோ நாங்களோ இந்த யுத்தத்தை உருவாக்கவில்லை. இவ்வாறான கொடூர யுத்தத்தை உருவாக்கியதற்கு உங்களில் யாரும் பொறுப்பாளிகளல்ல.
அந்த யுத்தம் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இல்லாமலாக்கியது. வாழ இடமின்றி காணி, வீடு, கால்நடைகள் ஆகியவற்றை பறித்து உங்களை நிர்க்கதியாக்கியது.
யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களிற்கு பின்பும் இராணுவம் பறித்துக் கொண்ட மக்களின் காணிகளை அந்த மக்களிடம் ஒப்படைக்கவில்லை. நாசமாக்கிய சொத்துக்களுக்கு இன்று வரை 5 சதம் கூட இழப்பீடாக கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி எவ்வித நீதி விசாரணைகளும் இல்லை. அரசியல் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுமில்லை.
முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து புதிய ஜனாதிபதியொருவரை நியமிப்பதற்கு வடக்கு கிழக்கு மக்களில் 85% ற்கும் அதிகமானோர் முன்வந்தமை இரகசியமல்ல. இப்போது இருக்கும் புதிய ஜனாதிபதி; அந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகவும், காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் குறித்து முறையான விசாரணை நடத்தி அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நீதி கிடைக்க செய்வதாகவும் வடக்கு கிழக்கு மக்களுக்கு வாக்குறுதியளித்தார். இராணுவ முகாம்களுக்காக அபகரித்த மக்களின் காணிகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதாகவும் யுத்தத்தினால் அழிந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் நாடாளுமன்ற தேர்தலின் போதும் வாக்குறுதியளித்தார்.
இப்போது புதிய ஜனாதிபதி பதவியேற்று 1 ½ வருடம் கடந்துவிட்டது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் சென்றுவிட்டது. இதுவரை உங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
கோஸ்கம சாலாவ முகாமின் ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பவம் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்தன. அவர்களுக்கு உதவி செய்வதனை அரசாங்கம் தவிர்த்த போது அதற்கெதிராக கொஸ்கம மக்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதனால், அவர்களிற்கு வீடுகள் கட்டித்தரும் வரை வாடகை வீட்டுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க நேர்ந்தது. போராடாமல் எதுவுமே சாத்தியமாகாது என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.
சும உரிமை இயக்கம் என்ற வகையில், நாம் உங்களுக்கு சொல்வது மேலும் பார்த்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. உங்களது நியாயமான உரிமைகளை வென்றெடுக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஆம்! அரசாங்கத்திடம் வற்புறுத்திக் கேட்போம்.
இப்போதாவது யுத்த பாதிப்புகளுக்கு இழப்பீடு கொடு!
இராணுவத்தை முகாம்களுக்குள் மட்டுப்படுத்து!
சகல காணாமலாக்கல்கள் சம்பந்தமான தகவல்களை உடன் வெளிப்படுத்து!
சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!
உரிமைகளை வென்றெடுக்க போராட்டமின்றி வேறு வழி கிடையாது.
சம உரிமை இயக்கம்
தொலைபேசி: 071 4966 738