Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத்தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழம் போன்ற வலதுசாரிப் பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற உலக மகா அயோக்கியர்களினால் தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு கிடைக்கும். பாதிக்கப்பட்ட எம் மக்களிற்கு இந்த மலைவிழுங்கி மகாதேவன்கள் நீதி பெற்றுத் தருவார்கள் என்று இன்றைக்கு வரைக்கும் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தான் இலங்கை அரசுடன் சேர்ந்து எம்மக்களை கொன்றார்கள் என்ற உண்மையை, ஆயிரக்கணக்கான எம்மக்களின் மரணங்களை தூசியை தட்டி விட்டு போவது போல போய் தம் பிழைப்புவாதங்களை தொடரலாம் என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு பதவிகளிற்காகவும், பணத்திற்காகவும் பொய் சொல்கிறார்கள்.

அண்மையில் பிரித்தானிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (B.B.C) செய்தி அறிக்கையில் பிரித்தானிய அரசின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவான (MI6. Military Intelligence, Section 6) அமெரிக்க கொலைகாரர்களான (C.I.A) உடன் சேர்ந்து இரு லிபிய குடும்பங்களை தாய்லாந்தில் இருந்து லிபியாவிற்கு 2004 இல் கடத்திய செய்தி வெளியானது. அப்துல் கக்கிம் பெல்கஜ் (Abdel Hakim Belhaj), அந்த நேரத்தில் ஆறு மாதக் கர்ப்பணியாக இருந்த அவரது மனைவி பாத்திமா பூட்சார் (Fatima Boudchar) மற்றும் சாமி அல் சாடி (Sami al-Saadi) அவரது குடும்பம் என அந்த நேரம் லிபியாவில் அதிகாரத்தில் இருந்த மும்மார் கடாபியின் எதிர்ப்பாளர்களை பாங்கொக்கில் வைத்து கடத்தி லிபியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

2004 இல் மும்மார் கடாபி அமெரிக்காவினாலும், மேற்கு நாடுகளினாலும் சர்வாதிகாரியாகவும், உலகப் பயங்கரவாதிகளின் தலைவனாகவும் காண்பிக்கப்பட்டவர். 21.12.1988 அன்று ஜேர்மனியில் இருந்து பிரித்தானியா ஊடாக அமெரிக்கா செல்லவிருந்த பான் அமெரிக்கா 103 விமானம் குண்டு வைக்கப்பட்டு ஸ்கொட்லாந்தின் லொக்கர்பி நகரத்திற்கு அருகாமையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 243 பயணிகள், 16 விமானசேவையாளர்களுடன் விழுந்த இடத்தில் இருந்த 11 லொக்கர்பி நகரத்தைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். இக் குண்டுவெடிப்பிற்காக அமெரிக்காவினாலும், பிரித்தானியாவினாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு லிபியா மேல் ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு லிபியாவை பயங்கரவாத நாடாக, தமது பரம எதிரியாக தமது நாட்டு மக்களிற்கும், உலகத்திற்கும் படம் காட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் கடாபியிற்கு எதிராக இயங்கி கொண்டிருந்த இவர்கள் இருவரையும் கடத்தி அனுப்பி வைத்து கடாபியுடன் ஒப்பந்தம் போட்டார்கள். இதன் பிறகு தான் 2004 இல் ஜோர்ஜ் புஸ்சின் வளர்ப்புப் பிராணியான பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் கடாபியை லிபியாவில் வைத்து சந்தித்தார். பொருளாதார ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மேற்கு நாடுகளின் டீல்களிற்கு கடாபி ஒத்துக் கொண்டதால் வில்லனாக இருந்த கடாபியை "இவன் ரொம்ப நல்லவன்டா" என்று புஸ்சும், பிளேயரும் பாராட்டினார்கள்.

பின்பு "அரபு வசந்தம்" என்று அழைக்கப்பட்ட அரபு நாடுகளின் அரசுகளிற்கு எதிரான போராட்டங்களின் போது 2011 மாசி மாதத்தில் லிபியாவிலும் போராட்டங்கள் எழுந்தன. ஐக்கிய நாடுகள் சபை "மக்களைப் பாதுகாப்பதற்காக தேவையான எல்லா நடவடிக்கைகளையும் " எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது. (B.B.C, 16.12.2013, Arab Uprising country by country - Libya). கடாபியுடன் ஒப்பங்கள் போட்ட அமெரிக்காவும், பிரித்தானியாவும் அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பின் விமானங்கள் அதே கடாபியின் அரசபடைகளிற்கு எதிராக குண்டுகள் போட்டன. மறுபடியும் வில்லனாக்கப்பட்ட கடாபி மேற்கு நாடுகளின் ஆதரவு சக்திகளினால் கொல்லப்பட்டார்.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பின்பு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெல்கச்சும், அல் சாடியும் பிரித்தானிய அரசிற்கும், பெயர் குறிப்பிடப்பட்ட புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களிற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தார்கள். லிபிய அரச ஆவணங்கள் பல அவர்களினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. "மார்க்" என்பவர் கையெழுத்திட்டு கடாபியின் புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த மூசாவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் "கடாபியையும், ரொனி பிளேயரையும் சந்திக்க உதவியதற்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அதில் பெல்கச் லிபியாவிற்கு போய்ச் சேர்ந்ததை குறிப்பிட்டு "அது எங்களால் உங்களிற்கும், லிபியாவிற்கும் செய்ய முடிந்த சிறிய உதவி" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியாவின் அரச வழக்கு தொடரும் சேவை (Crown prosecution Service) பிரித்தானியாவின் உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான கடத்தல்களைச் செய்யும் தனிப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதை ஒத்துக் கொண்டாலும் இந்த வழக்கில் எதுவிதமான ஆதாரங்களும் இல்லையென்றும் மேலும் அவர்கள் குறிப்பிட்ட பிரித்தானிய உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி தமது நடவடிக்கைகளிற்கு அரச ஒப்புதல் பெற்றிருந்தாலும் அது முறையான வழிகளில் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்ற விஞ்ஞான விளக்கத்தையும் கொடுத்து வழக்கு தொடர எந்த விதமான காரணங்களும் இல்லை என்று முடிவு செய்தது. பிறகு என்ன கடத்துபவன் கோர்ட்டில் உத்தரவு வாங்கியா கடத்துவான். "வருமானத்திற்கு மேல் சொத்து சேர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது" என்ற இந்திய நீதிபதிகளின் பொருளாதாரப் புலமையை மிஞ்சி விட்டார்கள்.

பிரித்தானிய அரச வழக்கு தொடரும் சேவையின் முடிவை எதிர்த்து அவர்கள் இருவரும் குடியியல் உரிமை (civil claims) வழக்கு தொடர்ந்த போது ஆதாரங்கள் இல்லை என்று சொன்ன அதே வழக்கிற்கு அல் - சாடியிற்கு நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காண்பதற்கு பிரித்தானிய அரச வழக்கு தொடரும் சேவை முடிவு செய்தது. அப்துல் கக்கிம் பெல்கச்சின் வழக்கு தொடர்கிறது. ("Tortured" rendition couple angry over failure to charge MI6, B.B.C, 09.06.2016).

இது தான் அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளின் அரசியல். அவர்களிற்கு தங்களது கொள்ளைகள் தடையில்லாது நடக்க வேண்டும். தங்களிற்கு பணியாத நாடுகளை பயங்கரவாத நாடுகள் என்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஆட்சியை கவிழ்க்கப் பார்ப்பார்கள்; அல்லது தாங்களே நேரில் போய் ஆக்கிரமிப்பார்கள். தங்களது அடிமைகள் அதிகாரத்தில் இருக்கும் நாட்டில் அவர்களிற்கு எதிராக மக்கள் போராடினால் அப்போராட்டங்களை தமது அடிமைகளுடன் சேர்ந்து முறியடிக்கப் பார்ப்பார்கள். அப்போராட்டங்களை ஒடுக்க முடியாவிட்டால் தமது அடிமைகளை பலி கொடுத்து விட்டு தாம் போராடும் சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ஜனநாயக காவலர் வேசம் போடுவார்கள். மேற்கு நாடுகளின் அடிமையான எகிப்தின் கொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சியின் போது இந்த நாடகத்தைத் தான் போட்டார்கள்.

இந்த சர்வதேச பயங்கரவாதிகளை நம்பச் சொல்லி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடு கடந்த தமிழீழம் போன்ற "வக்கீல் வண்டு முருகன்கள்" தமிழ் மக்களிடம் வக்காலத்து வாங்குகிறார்கள். தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளிற்காக ஒன்று திரண்டு போராடக் கூடாது என்பதற்காகத் தான் ஐக்கிய நாடுகள் சபையிற்கு போய் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி வருவோம், மக்கள் எங்களிற்கு வாக்கு போட்டால் போதும் என்று கதை விடுகிறார்கள்.

"லிபியாவில் மக்களைப் பாதுகாப்பதற்காக தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று தீர்மானம் போட்டு நேட்டோவை படையிறக்கிய ஐக்கிய நாடுகள் சபை எம்மக்கள் மரணித்த போது ஏன் வாய் மூடி இருந்தது? தாய் இறந்தது தெரியாமல் அவளின் மார்பில் பால் குடித்த எம் குழந்தைகளின் அவலம் ஏன் அவர்களிற்கு கேட்கவில்லை? சாத்தான்களின் சட்டத்தரணிகள் ஏன் இதற்கெல்லாம் மறுமொழி சொல்வதில்லை?