Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எல்லாளனின் "ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்பு" புத்தகத்தின் முன்னுரை இது.

சுட்டெரிக்கும் சூரியன்; வயல்களிற்கு, தோட்டங்களிற்கு, கடற்கரைகளிற்கு, கட்டிடவேலைகளிற்கு, அலுவலகங்களிற்கு செல்லும் மனிதர்கள்; பள்ளி செல்லும் மாணவர்கள், மாணவிகள்; பின்னேரங்களில் மதில்களில் சாய்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசும் இளைஞர்கள்; மின்னல் வந்து போவது போல போய் வரும் பெண்கள் இவை எல்லாம் தான் எல்லோரையும் போல எல்லாளனின் உலகமாக இருந்தது. ஆனால் ஒரு நெருங்கிய சொந்தக்காரனைப் போல மரணம் அடிக்கடி எல்லாளனின் உலகத்திற்கு, தமிழர்களின் உலகத்திற்கு வந்து போனது. முரசுகள் முழங்கிக் கொண்டு போர் வந்தது. காற்றுக் கலைத்த கடற்கரை மணல் போல வாழ்க்கை கலைந்து போனது. முனை முறிந்து போன நட்சத்திரங்கள். மொட்டைப்பனை மரங்களின் மேல் பாதி உடைந்த நிலா என இயல்பு வாழ்க்கை அறுந்து வீழ்ந்தது.

ஆனால் அவர்கள் அஞ்சவில்லை. ஆண்களும், பெண்களுமாக அலை, அலையாக எழுந்தார்கள். மூசி வீசும் காற்றில் ஒரு நாள் நம் தேசக்கொடி சடசடத்துப் பறக்கும் என்று நம்பிக்கை கொண்டார்கள். மரணம் கண் முன்னே நின்றபோதும் கணமும் தயங்காது அடிமை விலங்கு உடைப்போம் என்று ஆர்ப்பரித்தார்கள். சிறைக்கதவுகள் அவர்களிற்காக அகல வாய் திறந்து காத்திருந்தன. வெம்மையின் தகிப்பில் பாளம், பாளமாக வெடித்திருந்த வயல்கள் அவர்களின் குருதி குடிக்க காத்திருந்தன. ஆழம் காண முடியா கடல்களின் அடியில் ஒதுங்கப் போகும் அவர்களின் உடல்களிற்காக மீன்கள் பசியோடு காத்திருந்தன. ஆயினும் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களாய் அவர் கண்களில் சுதந்திரத்தின் ஒளி சுடர்ந்து எரிந்தது.

எல்லாளனிற்கு ஏழு வயதாக இருக்கும் போது தாயின் கை பிடித்து கொடுத்து விட்டு தந்தை விடை பெற்றார். தன்னை மனிதனாக வளர்த்தெடுத்தது தன் தாய் என்று "பால் நினைந்தூட்டிய தாயை" வணங்கும் எல்லாளன் தன் தேசத்தாயின் கண்ணீர் துடைக்க கடல் கடந்து போகிறார். என்று சுதந்திரம் நம்மை விட்டுப் போகிறதோ அன்று அது மட்டும் போவதில்லை; எல்லாமே நம்மை விட்டுப் போய் விடுகின்றன என்று தன் தாயின் கண்ணீரைக் கவனிக்காமல் போகிறார்.

மக்கள் போராட்டம் சம்பந்தமான குறைந்தபட்ச அரசியல் அறிவும் இருந்தது. அரசியல் கொள்கைகள், தத்துவங்கள் என்பவை பற்றிய குறைந்தபட்ச அறிவு இருந்தது. போராட்டத் தலைமைத்துவம் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்பில் இருப்பதல்ல என்ற தெளிவும் இருந்த எல்லாளன் எண்பத்துமூன்று கலவரத்தின் பின்னான பெரும் கொந்தளிப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) சேருகிறார். இந்தியா செல்கிறார். இயக்கப் பயிற்சி முகாம் முதல் நாளே அரசியல் அற்ற ஆயுதத்தின் பயங்கரத்தை, வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளின் அராஜகங்களை அதிர்ந்து சொல்கிறது. "அங்குள்ள விதிமுறைகள் சொல்லப்பட்டன; அங்கிருந்து யாரும் தப்பிப் போகமுடியாது என்றார்கள்; அத்துடன், தப்ப முயற்சித்தவர்கள் சிலரையும் கூட்டிக்கொண்டு வந்து காட்டினார்கள். அவர்களில் பலரும் கை, கால்கள், முறிக்கப்பட்டவர்களாக தடிகளின் உதவியினால் நடந்து வந்தனர் என்று எல்லாளன் அந்த சுதந்திரத்திற்காக போராட எழுந்து சுதந்திரம் மறுக்கப்பட்ட மனிதர்களை நினைவு கொள்கிறார்.

பின்பு தவிர்க்க முடியாத பிளவுகள் வருகின்றன. மாபியா குழுத்தலைவர்கள் போல தலைவர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல தருணம் பார்க்கின்றனர். எல்லாளன் போன்ற நேர்மையான மனிதர்கள், போராளிகள் தலைமைக்கு எதிராக உண்மையின் பக்கம் நிற்கிறார்கள். "எமது உயிருக்கு ஆபத்து என்ற கட்டத்தில் எங்கள் பிரச்சினையை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிப்பது அல்லது குறைந்தபட்சம் பொலிஸ் உதவியை நாடுவது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டிருந்தோம். எங்களில் ஒருவர் மண்ணெண்ணெய் உடன் தீக்குளிக்கும் முயற்சியில் வீதிக்கும் வந்து விட்டார்" என்ற அளவிற்கு தலைமைகளின் அச்சுறுத்தல்கள் துரத்துகின்றன.

ஒரு முனையில் செல்வம் குவிவதன் விளைவாக இன்னொரு முனையில் வறுமை குவிகிறது என்றான் வறுமையின் தத்துவத்தை ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ். அது போல ஒரு முனையில் அதிகாரம் குவிய மறுமுனையில் போராளிகளின் குரல்கள் நசுக்கப்பட்டன.பேச்சுச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் அற்ற தன்மைகளை கண்டித்துச் சாகும்வரை உண்ணாவிரதம் செய்வது, தமிழ் நாட்டு மக்களிடையே இப்பிரச்சினைகளை எடுத்துச் சொல்வது என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ஆம், சிங்கள இனவாதத்திற்கு எதிராகப் போராட எழுந்தவர்கள், ஈழ விடுதலை என்ற பெயரில் அதிகாரம் செலுத்திய ஆயுத மனிதர்களிற்கு எதிராகவும் போராட வேண்டிய அவலமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள். சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆரம்பித்த அவர்களது போராட்டம் பின்னர் இயக்க தலைமைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது. மரணத்தை நேருக்கு நேராக பார்த்தாலும் மண்டியிடாமல் மடியக் கூடிய மனிதர்களை எவர் தான் அடிமைப்படுத்த முடியும்?.

பெரும் பேச்சாளர்கள் காணாமல் போய் விட்டார்கள். எழுதிக் குவித்த எழுத்தாளர்கள் எங்கோ போய் விட்டார்கள். பெரும் தலைவர்கள் தூரத்து மாளிகைகளில் ஓய்வெடுக்கிறார்கள். மக்கள் தமது சொந்தப் புதல்வர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். போராட்டம் அழிக்கப்பட்டு விட்டது என்று மக்களின் எதிரிகள் ஓங்கிச் சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்றும் உறங்குவதில்லை. காற்றிலே மக்களின் கோபங்கள் கலந்து போயிருக்கின்றன. முழங்குகின்ற இடி, மின்னல்களிற்கு அவர்கள் பயந்து விடப்போவதில்லை. முடிவுறாத தீய கனவுகளிலிருந்து அவர்கள் விழித்தெழுவார்கள். எதிரிகள் விழும் வரை அவர்கள் போராடுவார்கள். மக்களினதும், போராளிகளினதும் தியாகங்களை எவர் தான் அழிக்க முடியும். விடுதலை என்ற விளக்கை எல்ளாளன் போன்ற போராளிகள் ஏந்திப் பிடிப்பார்கள். இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் இனவாதிகளை எதிர்த்து இணைந்து போர் செய்வார்கள்.