இன்று (13/05/2016) யாழ் நீதிமன்றத்தில் மக்கள் போராட்ட அமைப்பின் முன்னணி செயல்வீரர்கள் லலித் மற்றும் குகன் இருவரும் அரச கூலிப்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்றது. இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சரவை பேச்சாளரான கெகலிய ரம்புக்கெல அவர்களை லலித் - குகன் சார்பில் அஜாரான சட்டத்தரணி நுவான் போபகே அவர்கள் குறுக்கு விசாரணை செய்திருந்தார்.
லலித் - குகன் இருவரும் கடத்தப்படவில்லை. அவர்கள் விசாரணைக்காக கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக; மகிந்த ஆட்சியில் அமைச்சரவை பேச்சாளராக இருந்த கெகலிய ரம்புக்கெல ஊடகவியளாலர் மாநாட்டில் அப்போது தெரிவித்திருந்தார். இது குறித்து சட்டத்தரணி நுவான் போபகே கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சரவை பேச்சாளர், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து தனக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே தான் ஊடகவியலாளர் மாநாட்டில் அன்றைய தினம் அத்தகவலை தெரிவித்திருந்ததாக பதிலளித்தார்.
முன்னாள் அமைச்சரின் இந்த நீதிமன்ற பதில் எந்த வித சந்தேகங்களிற்கும் இடமின்றி லலித் - குகன் காணாமல் போனதில் அரச படையினர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெள்ளைவான் பிரபலம் முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு சம்பந்தம் இருப்பதனை உறுதி செய்துள்ளது.
நீதிமன்ற விசாரணை முடிந்ததன் பின்னர் குகன், லலித் குடும்பத்தினருடன் முன்னிலை சோசலிச கட்சி பிரச்சார செயலாளர் புபுது ஜெயக்கொட மற்றும் சமவுரிமை இயக்க பேச்சாளர் கிருபாகன் கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. மேலதிக செய்தி விரைவில்..