02_2007_pj.jpg

பொதுமக்களுக்கு வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் அரசாங்கம் உரிய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது, இந்தியா போன்ற ஏழை நாடுகளின் மீது உலக வங்கி திணிக்கும் நிபந்தனைகளுள் ஒன்று. இக்கட்டளைக்குக் கீழ்படிந்துதான், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து என அரசால் வழங்கப்பட்டுவரும் அனைத்து விதமான சேவைகளின் கட்டணங்களும் மெல்ல

 மெல்ல இலாபம் ஈட்டுவதை நோக்கி உயர்த்தப்பட்டு வருகின்றன;அரசாங்க மருத்துவமனைகளில் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது; கட்டணம் கட்டும் சிகிச்சை பிரிவை (pay ward) உருவாக்குவது என மருத்துவ சேவையிலும் கூட வணிகமயத்தைப் புகுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனின் தொடர்ச்சியாக, அரசு நடத்தி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் வணிகமயம்/தனியார்மயத்தைப் புகுத்தும் ஒரு திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது.

 

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற ஏழைகள்; சமூக அடுக்கில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் ஆகியோருக்கு எதிர்வரும் 2012ஆம் ஆண்டுக்குள் தரமான மருத்துவ வசதியைச் செய்து தரப்போவதாகக் கூறிக் கொண்டு, ""தேசிய கிராமப்புற நலவாழ்வு பணித் திட்டம்'' என்றவொரு திட்டத்தை, 2005ஆம் ஆண்டு மைய அரசு அறிவித்தது. கேட்பதற்கு சர்க்கரையாக இனிக்கும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை கூட்டப்படும்; அங்கு வழங்கப்படும் மருத்துவ சேவை தரமானதாக மாற்றப்படும் என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்து கொண்டால், அதில் வெந்நீரை ஊற்றுகிறது மைய அரசு. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நிதி ஒதுக்குவது; அவற்றை நிர்வகிப்பது ஆகிய பொறுப்புகளில் இருந்து அரசு விலகிவிட வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

 

இத்திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக, ""ஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பைப் பதிவு பெற்ற கூட்டுறவு சொசைட்டிகளிடம் ஒப்படைப்பதற்கு'' உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, அச்சங்கங்களுக்கு, ""நோயாளிகள் நலச் சங்கங்கள்'' என வசீகரமான பெயரைச் சூட்டியிருக்கிறது.

 

தண்ணீரைத் தனியார்மயமாக்கும்/வணிகமயமாக்கும் திட்டத்தை நிறைவேற்ற, ""தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கங்கள்'' உருவாக்கப்பட்டதை நினைத்துப் பார்த்தால், ""நோயாளிகள் நலச் சங்கங்கள்'' உருவாக்கப்படுவதன் பின்னுள்ள அபாயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

 

ஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகிக்க உருவாக்கப்படும் கூட்டுறவு சொசைட்டிகளில், அரசு மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மட்டுமின்றி, தனிநபர்களும், தனியார் நிறுவனங்களும் உறப்பினர்களாகப் பங்கு பெற முடியும்.

 

""ஒரு தனியார் நிறுவனம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தால்; அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள ஒரு வார்டை தத்து எடுத்துக் கொண்டால் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பராமரிக்கும் செலவுகளை ஏற்றுக் கொண்டால், அத்தனியார் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர், நிர்வாக உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார். 25,000 ரூபாய்க்கு மேல் நன்கொடையாகத் தரும் எந்தவொரு நபரும் இந்த சொசைட்டியின் துணை உறுப்பினராக (Associate Member)ச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்'' என உறுப்பினர் பதவிக்கான ஏலத்தொகை சட்டப்பூர்வமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

""ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் பகுதியின் நிலைமைக்கு ஏற்ப, அங்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் (user fee) வசூலிக்கவும்; ஆரம்ப சுகாதார வளாகத்திற்குள்ளேயே, எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன், சோனோகிராபி போன்ற மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை தனியார் நிறுவனங்கள் நிறுவிக் கொள்ள அனுமதிக்கவும், அம்மருத்துவப் பரிசோதனைக்குரிய கட்டணங்களை நிர்ணயிக்கவும்; ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கவும்; இரத்தப் பரிசோதனை, ஆம்புலன்ஸ் வண்டியை இயக்குவது போன்ற துணை மருத்துவப் பணிகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விடவும் நோயாளிகள் நலச் சங்கங்களுக்கு உரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் ஆணை குறிப்பிடுகிறது. தனியார்மயம் என நேரடியாகக் குறிப்பிடாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தந்திரம் தான் இது.

 

""கிராமப்புற ஏழை மக்களை அதிகம் பாதிக்கும் மலேரியா, காலரா, இரத்த சோகை, அயோடின் பற்றாக்குறை, கண் பார்வை பாதிப்பு போன்ற நோய்களுக்கு இவ்வருடம் முழுவதும் மருந்து கொடுக்க முடியாமல் திண்டாடும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற அதி நவீன மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை நிறுவுவது, அக்கருவிகளைத் தயாரிக்கும் சீமென்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பயன்படுமேயொழிய, ஏழை நோயாளிகளுக்குப் பயன்படாது; மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்புப் பயிற்சிப் பெற்ற மருத்துவர்களை நியமிக்காமல், பரிசோதனை வசதிகளை மட்டும் ஏற்படுத்துவது ஏமாற்று வேலை'' என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் இந்த டாம்பீகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

 

""ஒவ்வொரு நாடும், தனது குடிமக்களுக்கு மருத்துவசுகாதார வசதிகளைச் செய்து கொடுக்க, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறைந்தபட்சம் 5 சதவீதத் தொகையை ஒதுக்க வேண்டும்'' என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்திய அரசோ, 1 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் (0.9%) மருத்துவ சேவைக்கு நிதி ஒதுக்குகிறது. இந்த அற்பத் தொகை ஒதுக்குவதைக் கூடக் கைகழுவி விட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சைக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 

அரசு, கட்டாயஇலவச மருத்துவ சேவையை வழங்குவதற்குப் பதிலாக, ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீடு ஆகிய தனியார்மயத்திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் தற்பொழுது இந்திய அரசின் மருத்துவக் கொள்கை. இதனை நøடமுறைப்படுத்தும் விதமாக, மருத்துவக் காப்பீடு திட்டத்திற்காக 54 கோடி ரூபாயை மானியமாக ஒதுக்கியிருக்கிறது, மைய அரசு. அரசு நன்றாக ஒத்துழைத்தால், மருத்துவக்காப்பீடு வியாபாரம், 2009இல் 25,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனத் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கணக்குப் போட்டுக் கொண்டு, பிணந்தின்னிக் கழுகுகளைப் போலக் காத்திருக்கின்றன.

 

மைய அரசு ஊழியர்களுக்காக நடத்தப்பட்டு வந்த மைய அரசு மருத்துவமனைகள் (CGHS) மூடப்பட்டு, அதற்குப் பதிலாக மைய அரசு ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்குத் தனியார் மருத்துவமனைகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதேபோன்ற நிலைமை, மாநில அரசு நடத்திவரும் ""ஈ.எஸ்.ஐ.'' மருத்துவமனைகளுக்கும் வரக்கூடும்.

 

இதுவொருபுறமிருக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் நலச் சங்கங்களை மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லையென்றால், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி உதவியை நிறுத்திவிடுவோம் என மைய அரசு மிரட்டி வருகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியும், மைய அரசிடமிருந்து 30 கோடி ரூபாய் நிதி உதவியைப் பெறுவதற்காகத்தான், நோயாளிகள் நலச்சங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக நியாயப்படுத்தியிருக்கிறார்.

 

ஆட்சியைப் பிடித்தவுடனே சினிமா கழிசடைகளுக்குப் பல கோடி ரூபாய் வரிச் சலுகைகளை அறிவித்தார், கருணாநிதி. மைய அரசோ, முதலாளிகள் மைய அரசிற்குச் செலுத்த வேண்டிய 80,000 கோடி ரூபாய் வரிபாக்கியைத் தள்ளுபடி செய்ய நாள் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்படி அவர்களிடம் தாராள மனதோடு நடந்து கொள்ளும் ஆட்சியாளர்கள், மக்களின் நல்வாழ்வுக்குச் செலவு செய்ய வேண்டும் என்றால், நிதிப் பற்றாக்குறை, கஜானா காலி என ஒப்பாரி வைத்து விடுவதோடு, மக்களைத் தனியார்மயம் என்ற மரணக் குழிக்குள்ளும் தள்ளிவிட்டு விடுகிறார்கள்!

 

· செல்வம்