பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உடனடியாக பதில் தரவேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.
மேலும் நேற்று மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச தனியார் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
இவ்வாறு மாணவர்கள் மீதான தாக்குதல்கள் அரசுக்கு ஒன்றும் புதிய விடயம் இல்லை என இதன்போது லஹிரு சுட்டிகாட்டினார்.
நேற்று நடைபெற்ற பேரணியை மிகவும் அமைதியான முறையில் மேற்கொண்டதோடு, நியாயமான கோரிக்கைகளையே முன்வைத்தோம். இதனால் யாருக்கும் எந்த இடையூறுகளும் ஏற்படவில்லை. மக்களுடைய எதிர்பார்ப்புக்களுக்காகவும், மக்களுடைய நலனுக்காகவுமே போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.
இருந்த போதும் நேற்று மாணவர்கள் மீது குறிபார்த்து கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
போராட்டத்தை கலைப்பதற்கு ஒரு முறை உண்டு. ஆனால் நேற்று பொலிஸார் வரைமுறைகளை மீறி தாக்குதல்களை நடத்தினார்கள்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி HNDA மாணவர்கள் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் பூஜித் ஜயசுந்தர கடைமையில் இருந்தார். அவர் இருக்கும் போதே மாணவர்கள் மீது அத்துமீறிய தாக்குதல்கள் நடாத்தப்பட்டது.
அதேபோல் பூஜித் ஜயசுந்தர தற்போது புதிய பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர் மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது. அப்போது பணியில் இருக்கும் போது நடாத்திய பாணியிலேயே தற்போதும் பூஜித் ஜயசுந்தர மேற்கொண்டு வருகின்றார் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.