நேற்றைய தினம் 23-04-2016 பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் சதுக்கத்தில் இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் அரசியல் காரணங்களிற்க்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதனை கண்டித்து - அவரை விடுதலை செய்யக்கோரியும், வடக்கு-கிழக்கில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள குடியமர்த்தக்கோரியும், அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதப்படுத்துமாறு கோரியும், நிலப்பறிப்பை கண்டித்தும் கோசங்களை முழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் மூவினங்களையும் சேர்ந்த மக்கள் மற்றும் பிரித்தானிய இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள் என 50க்கும் மேலானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது பல வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. சமவுரிமை இயக்கம் ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு தோழமையான ஆதரவினை தமிழ் சொலிடாரிற்ரி, மக்கள் ஜனநாயக அரங்கு, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, சோசலிஸ்ட கட்சி மற்றும் Socialist Fight வழங்கியிருந்தனர்.