முன்னே அக்கொடியைப் பிடித்தவர்கள் இறந்து விட்டார்கள்
கடலின் அடியில் மடிந்தார்கள்
கழனி கங்கையின் கரையில் எரிந்தார்கள்
வன்னிக் காட்டில் கரைந்து போனார்கள்
தூரத்து வெளிகளில் சிலர் மூச்சடங்கிப் போனார்கள்
எனினும் இன்னும் கைகள் பிடித்திருக்கின்றன
செங்கொடியை வர்ணத்தில் வரையவில்லை
வழிந்தோடிய குருதியில் வரைந்தார்கள்
காலம் ஒரு நாள் வரும்
எரிந்த மரங்கள் துளிர் விடும்
சரிந்த முரசங்கள் எழுந்து முழங்கும்
சாகும் வரை போரிட்ட சரித்திரம்
தேசம் எங்கும் சத்தமாக முழங்க
அவர்கள் வருவார்கள்
வெளிறிய வானத்தில் வெள்ளி முளைக்கும்
தூறிய மழையில் தூக்கம் கலைந்து
சுதந்திரத்தின் பாடலைப் பாடியபடி
பசியிலும் பிணியிலும் மெலிந்த உடல் நிமிர்த்தி
அவர்கள் வருவார்கள்
வழிந்தோடிய குருதியில்
வரைந்த செங்கொடியை
தாங்கிப் பிடித்து வருவார்கள்
தாடிக்காரன் சொன்னது போல
வரலாறு எம் தோழரை அன்று விடுதலை செய்யும்