Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனம், மதம், தேசம், குறிப்பிட்ட சமுதாயப்பிரிவு, அரசியல் கருத்து என்பவற்றிற்காக துன்புறுத்தப்படுவர் அல்லது துன்புறுத்தப்படலாம் என்ற பயம் கொண்டவர் அகதி என்று 1951 ஆம் ஆண்டின் ஜெனீவா பிரகடனம் வரையறுக்கிறது. மேற்கூறப்பட்டவற்றுடன் தமிழ்நாட்டு அரசினதும், அதன் அதிகார வர்க்க அடிமை நாய்களினதும் கொடுமைகளையும் சேர்க்க வேண்டும். ஆதரவற்று அகதியாக சென்ற மனிதர்களையே கொடுமைப்படுத்திக் கொல்லும் இரத்தக் காட்டேரிகள் தான் இந்த நாய்கள்.

இலங்கைத் தமிழ்மக்களிற்கு மொழி, இனம், பண்பாடு என்ற எந்த அடிப்படையிலும் தொடர்பில்லாத எத்தனையோ நாடுகளில் ஜெனீவா பிரகடனத்தின் அடிப்படையில் அகதிகளாக, சக மனிதர்களாக நடத்தப்படுகையில் தமிழ்நாட்டு அரசும், அதன் அடிமை நாய்களான அதிகார வர்க்கமும் இலங்கைத் தமிழ்மக்களை குற்றவாளிகளைப் போல் சிறப்புமுகாம்களில் அடைத்து வைத்து கொலை செய்கிறார்கள். சித்திரவதை செய்கிறார்கள். இலங்கைத்தமிழ் அகதிமுகாம்களை தமிழ்நாட்டு காவல்துறையின் மிக மோசமான பயங்கரவாதிகளான கியூ பிரிவு தான் கண்காணிக்கிறது.

ஆம், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று ஊழலிலும், வன்முறையிலும் மூழ்கிப் போயிருக்கும் இந்த மக்கள் விரோதிகள் தான் இலங்கைத்தமிழ் அகதிகளை குற்றவாளிகளாக நடத்துகிறார்கள். தமிழினத் தலைவர், புரட்சித்தலைவர், ஈழத்தாய் என்று பட்டங்களை கழுத்திலே கட்டிக் கொண்டு மேடைகளில் "இலங்கைத் தமிழர்களிற்கு இன்னல் விளைந்தால் கடல் கடந்து சிங்களவரை கடிச்சுச் கொல்லுவேன்" என்று குரைக்கும் இவர்கள் தான் அகதிகளை சிறைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். தமது மொழி அறவே தெரியாத அகதிகளின் குழந்தைகளிற்கு அவர்களினது வயதிற்கு எந்த வகுப்பில் இருக்க வேண்டுமோ அந்த வகுப்பினில் சேர்த்துக் கொள்ளப்படும் நிலை பல நாடுகளில் இருக்கும் போது தமிழ்நாட்டில் இலங்கைத்தமிழ் அகதிகள் கல்வி கற்பதற்கான பாதைகளை தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் முள்வேலி இட்டு மூடுகிறார்கள். மருத்துவக் கல்வி கற்பதற்கு தேவையான மதிப்பெண்கள் இருந்தும் இலங்கை அகதி என்ற ஒரே காரணத்திற்காக இடம் மறுக்கப்பட்ட மாணவி தனது அவலத்தை ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது மிக அண்மையில் நடந்தது.

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், காவல்துறை என்ற பிராணிகளை நீங்கள் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம். இவையும் நாய்கள், பூனைகள், மாடுகள், ஆடுகள் போன்ற பிராணிகளை ஒத்தவை தான். ஆனால் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. நாய்கள், பூனைகள் போன்றவை நன்றி உள்ள விலங்குகள். அவை தம்மை வளர்ப்பவர்களை, தம்மிடம் அன்பு செலுத்துபவர்களை தமது வாழ்நாள் முழுக்க மறப்பதில்லை. அவை தம்மிடம் அன்பு செலுத்துபவர்களை முழு மனதோடு அன்பு செய்யும். தம்மிடம் அன்பு செலுத்துபவர்களைக் கண்டதும் பாய்ந்து வந்து ஒட்டி உரசும்.. எண்ணெய் கழிவுகளில் சிக்கி இறக்கும் நிலையில் இருந்த தன்னைக் காப்பாற்றிய கடற்தொழிலாளியை காண்பதற்காக ஒவ்வொரு வருடமும் நாலாயிரம் மைல்கள் கடந்து சிலியில் இருந்து பிரேசில் வரும் டின்டிம் என்ற பென்குயின் காட்டும் அன்பு அவை காட்டும் அன்பிற்கு ஒரு சிறு உதாரணம்.

தமிழ்நாட்டு அதிகார வர்க்க மிருகங்களும் மனிதர்களைக் கண்டதும் பாய்ந்து வந்து கைகளை நீட்டும்; பாசத்தினால் அல்ல, பணத்திற்காக. நீங்கள் காசை நீட்ட வேண்டும். இந்த மிருகங்கள் தம்மை ஆறறிவு படைத்தவை என்று சொல்லிக் கொள்ளுவதனால் லஞ்சப்பிச்சை வாங்கும் போதும் மனிதர்களைப் பகுத்தறிந்தே வாங்கும். அவை ஏழை, எளிய மனிதர்களிடம் அதிகாரத்துடன் பிச்சையை பறித்து எடுக்கும். அதிகாரத்தில் உள்ளவர்கள், பணம் படைத்தவர்கள் வீசி எறியும் பிச்சைக்காக வாலை ஆட்டிக் கொண்டு காலைச் சுற்றி வரும்.

இப்படிப்பட்ட இழிபிறவிகள் ஆதரவற்ற அகதிகளிடம் தமது மிருகத்தனத்தை காட்டுகின்றன. மேலதிகாரிகளின் கோவணத்தை நாக்கால் நக்கியே சுத்தம் பண்ணிக் கொடுக்கச் சொன்னாலும் இழித்துக் கொண்டே நக்கக் கூடிய இந்த நாய்கள் ஏழைகளை ஏறி மிதிக்கிறார்கள். இந்த அடிமைநாய்க் கூட்டத்தில் ஒன்றான துரைப்பாண்டி என்னும் எருமையின் சித்திரவதை தாங்காமல் ரவீந்திரன் என்னும் ஆறு பிள்ளைகளின் தந்தை மின்சாரக் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்திருக்கிறார்.

ரவீந்திரனின் மரணத்தை "வீம்புக்கு டவரில் ஏறி உயிர் விட்ட அகதி" என்று செய்தி வெளியிட்டிருக்கிறது "குமுதம் ரிப்போர்ட்டர்" சஞ்சிகை. தமது ஆறு பிள்ளைகளைக் கூட ஒரு கணம் மறந்து தன்னுயிர் மாய்க்கும் அளவிற்கு துரைப்பாண்டி என்ற எருமையின் கொடுமை தாங்க முடியாமல் இருந்திருக்கும் போது "குமுதம்" இப்படி ஒரு செய்தி போட்டிருக்கிறது. ஆனாலும் என்ன; தமிழகத்திலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் இப்படி ஒரு மனிதனின் மரணத்தை குமுதம் கேவலப்படுத்துகிறது என்பதற்காக ஏனென்றும் கேட்கப் போவதில்லை. குமுதத்தை வாங்காமலும் விடப்போவதில்லை.

"நீங்கள் எல்லாம் ஏண்டா இங்கே இருக்கிறீங்க" என்று கேட்டு சுபேந்திரன் என்னும் இலங்கைத் தமிழ் அகதியின் கால்களை அடித்து உடைத்திருக்கிறான் டில்லிபாபு என்னும் தமிழ்நாட்டு பொலிஸ் நாய். "சிங்களவரின் மேல் கஞ்சா வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவேன்" என்று வீர வசனம் பேசும் எவரும் ஏழைத்தமிழனின் காலை உடைத்த கழுதையின் மேல் வழக்கு போடவில்லை. ஜெயலலிதா களவெடுத்து உள்ளே போனதிற்கு கண்ணீரும் கம்பலையுமாக கடிதம் எழுதிய உருத்திரகுமாரனிற்கும், சிறிதரனிற்கும் இந்த ஏழை மனிதனின் துயரம், அவரிற்கு நடந்த அநியாயம் கண்ணிலே படவில்லை. தமிழ்நாட்டிலே இருந்து வைரமுத்துவைக் கூப்பிட்டு பொங்கிப் படைத்த தமிழ்க்கூட்டமைப்புக்காரரிற்கு நம் மக்கள் தமிழ்நாட்டு முகாம்களிலே படும் துன்பம் பார்வையில் படவில்லை.

தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலைக்காடுகளிற்கு வந்து தம் உழைப்பையும், உயிரையும் கொடுத்த ஏழை மனிதர்களின் குடியுரிமையை சிங்கள இனவெறியர்கள் பறித்த போது மேட்டுக்குடி, வலதுசாரி தமிழ்த்தலைமைகள் சிங்கள இனவெறியர்களுடன் சேர்ந்து நின்றார்கள். இன்று தமிழ்நாட்டின் அதிகாரத்தில் உள்ள அயோக்கியர்கள் இலங்கைத் தமிழ் அகதிகளை கொடுமைப்படுத்துகிறார்கள். தமிழ், தமிழினம் என்று அலறிக் கொண்டு ஏழைத்தமிழ்மக்களை ஒடுக்கும் இந்த அயோக்கியர்களை எதிர்த்து மனிதம் என்னும் மகத்தான பதாகையை ஏந்தி நிற்கும் இடதுசாரி, முற்போக்கு சக்திகள் அணி திரள்வோம்.