சர்வதேச பெண்கள் தினத்தை (8 பங்குனி) முன்னிட்டு, இன்று 5ம் திகதி காலியில் பெண்கள் விடுதலை இயக்கம் (சுதந்திரத்திற்க்கான மகளிர் அமைப்பு) பெண்களின் விடுதலைக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளது. காலி பஸ் நிலையத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சாரம் பின்னர் காலி நகரம் அதனைத் தொடர்ந்து மகமோடரா மற்றும் டாடில்லா பகுதிகள் ஊடாக ஊர்வலமாக சென்றது. குடும்பத்தில், வேலை இடங்களில், தொழிற்சாலைகளில், மலையகத்தில் பெண் என்ற வகையில் முகம்கொடுக்கும் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பெண்களை விளம்பரப் பொருளாகவும் போகப் பொருளாகவும் அடிமையாகவும் தான் இன்றைய சமூகம் பாவிக்கின்றது. இதிலிருந்து மாற்றத்தைக் காண பெண்கள் போராட வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரச்சாரத்தை இன்று முன்னெடுத்திருந்தனர்.
மேலும் வடக்கு கிழக்கில் சிறுமியர், பெண்கள், தாய்மார்கள்; தமது காணாமல் போன உறவுகள் குறித்தும், அரசியல் கைதிகள் குறித்தும் போராடிவரும் போராட்டம் குறித்தும் இந்த பெண்கள் விடுதலை இயக்கம் பிரச்சாரப்படுத்தி, தென்பகுதி பெண்களை இந்த நியாயமான போராட்டத்துடன் இணைந்து போராட முன்வருமாறு அமைப்பும் விடுத்தது.
தெருமுனைக் கூட்டங்கள் பாடல்கள் கலந்துரையாடல்கள் என பெண்கள் விடுதலைக்கான போராட்டத்தை இன்று முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.