கடந்த வாரம் 16-02-2016 அன்று கொழும்பில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலையற்ற அனைத்து பட்டதாரிகளும் ஒன்றிணைந்து, "வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை கொடு!", "பட்டதாரிகளிற்கு வேலை வழங்க ஒரு தேசிய கொள்கையினை வகு!" போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகளை மகஜராக சமர்ப்பிக்க பிரதமர் அலுவலகம் நோக்கி அணியாக சென்றனர். மகஜர் கொடுக்கப்போனவர்களை நல்லாட்சி அரசு வன்முறையினை பாவித்து வழியில் மறித்து கலகம் அடக்கும் படை கொண்டு தாக்கியதுடன் மற்றும் நீர்த்தாரகை பிரயோகம் செய்து அவர்களை கலைத்து வேலையற்ற பட்டதாரிகளின் மகஜர் பிரதமர் அலுவலகம் கொண்டு வராது தடுத்து நிறுத்தியது. இதில் பல வேலையற்ற பட்டதாரிகள் காயங்களிற்கு உள்ளானர்.
இதனை கண்டித்து மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இன்று கவன ஈர்ப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன.
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் விசேட கூட்டம் நடைபெற்ற பின்னர் அங்கிருந்து அரசடி சந்தி ஊடாக காந்திபூங்கா வரையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டமாக பேரணியாகச் சென்றனர். பின்னர், காந்திபூங்கா அருகில் விசேட கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"அடிக்காதே அடிக்காதே பட்டதாரிகளை அடிக்காதே!", "வேலைகொடு வேலைகொடு வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகொடு!", "ஏமாற்றாதே ஏமாற்றாதே வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றாதே!", "நல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை தாக்குவதா!" போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகை பிரயோகித்திற்கு எதிராக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.