இன்று கொழும்பில் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. வருடாந்தம் வேலை வழங்கும் தேசிய கொள்கை ஒன்றினை தயாரிக்கு மாறும், அனைத்து பட்டதாரிகளுக்கும் முறையாக வேலை வழங்குமாறும், ஓய்வூதிய பங்களிப்பை ஏமாற்ற வேண்டாம் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து வருகை தந்த வேலையற்ற பட்டதாரிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
தென்பகுதி வேலையற்ற பட்டதாரிகளுடன் யாழ்ப்பாணம் வவுனியா திருமலை அம்பாறை மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலிருந்து வருகை தந்திருந் தமிழ் மற்றும் முஸ்லீம் வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமிழ் பிரதேசங்களில் இருந்து கணிசமானளவு பெண் பட்டதாரிகள் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட போராட்டம் காலை 11 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் நோக்கி மகஜர் சமர்ப்பிப்பதற்க்காக பேரணியாக புறப்பட்டனர். லோட்டஸ் வீதியில் பேரணியை மறித்த கலகம் அடக்கும் படையினர் தடுத்து நிறுத்தி கண்ணீப்புகை குண்டுகளை பேரணியினர் மீது வீசியதுடன் தண்ணீர் தாங்கிகளின் மூலம் தண்ணீர் பீச்சியடித்து வன்முறையினை ஏவிவிட்டனர்.