மாலபேயில் அமைந்துள்ள சத்யம் (SATIM) தனியார் மருத்துவ கல்லூரியினை மூடுமாறு கோரியும், கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கையினையும் எதிர்த்தும் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டுகளாக பாரிய பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மருத்துவபீட மாணவர்கள், அண்மையில் பல தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தொடர் சத்தியாகக்கிரக போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை முன்வைத்து குதித்துள்ளனர்.
இன்று 13ம் திகதி (13.01.2015) சத்தியாகக்கிரக போராட்டத்திற்கு ஆதரவாக மாபெரும் கண்டன போராட்டம் யாழ்பாணத்தில் இடம்பெற்றது. இந்த ஒருநாள் போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர். யாழ் மருத்துவபீட மாணவர்கள், யாழ் மருத்துவபீடத்திலிருந்து போதானா வைத்தியசாலை வரை தனியார் பல்கலைக்கழகங்களின் அனுமதியை எதிர்த்தும், இலவச கல்விக்கு ஆப்பு வைக்கும் அரசின் நடவடிக்கைகளையும் கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதில் 550 க்கு மேற்பட்ட மருத்துவ மாணவர்களும் 400 க்கு மேற்பட்ட ஏனைய பீட மாணவர்களும் கலந்து கொண்டனர்.