தமிழ் பேசும் மக்களின் மீட்பாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். 'விடுதலை" பேசிய புலிகள் முதல் 'ஜனநாயகம்" பேசிய புலியெதிர்ப்பு ஒநாய்கள் வரை, தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்றும், தமிழ் மக்களின் ஜனநாயகம் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம், கேடுகெட்ட மனித விரோதிகள் என்பதை, அவர்களின் அரசியலையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் கூறிவந்தோம்.

 

இன்று அவர்களில் பலர் தமது செய்கைகள் மூலம் அம்பலமாகிவருகின்றனர். புலிகள் அரசு பேசுசுவார்த்தையின் போது, புலிகள் தாம் படுமோசமான மக்கள் விரோதிகள் என்பதை ஊர் உலகம் அறிய தம்மை அம்பலமாக்கினர். இதே காலத்தில் ஜனநாயகம் பேசும் கூட்டம் புளுத்து, திடீர் மிதப்பாகினர். ஆனால் அரசு புலியின் யுத்த தொடங்கியவுடன், தாங்கள் புலிகளை மிஞ்சிய மக்கள் விரோதிகள் என்பதை, தமது சொந்த அரசியல் நாற்றத்துடனேயே எடுப்பாக அவர்கள் அம்பலமாக்கி வருகின்றனர்.

 

'ஜனநாயகத்தின்" பெயரில் ரீ.பீ.சீயையும், தேனீயையும் மையமாக வைத்து ஜனநாயகம் பேசியவர்கள, இலங்கையின் இந்தியாவின் அரசியல் எடுபிடிகளாக இன்று பலர் தாமாக வெளிவருகின்றனர். அன்று 'ஜனநாயக" மாநாடுகள், சமூக விழுமியங்கள், தீர்வுப் பொதிகள் என்ற வேஷத்தில் கொட்டமடித்தவர்கள் எல்லாம், இலங்கை அரசின் கோமணங்களாக இருப்பது அம்பலமாகி வருகின்றது.

 

ரீ.பீ.சீக் கும்பலோ ஈ.என்.டீ.எல்.எவ் என்ற இந்தியக் கூலிக் கும்பலில் எடுபிடிகளே தாங்கள், என்பதை வெளிப்படை அம்மணமாக்கி நிற்கின்றனர். கருணாவின் பிளவுடன் ஈ.என்.டீ.எல்.எவ் கும்பலும் நடத்திய (இந்தியா) அரசியல் தேன் நிலவு வரை நீடித்த, அவர்களின் ஜனநாயக கூத்து இன்று நொருங்கிப்போய்விட்டது. அக்காலத்தில் கருணா ஊர் உலகத்தை கொள்ளையடித்த கொள்ளைப் பணத்தின் ஒருபகுதியைப் பெற்றே, ரீ.பீ.சீ 'ஜனநாயகம்" பேசியதை இன்று கருணா-பிள்ளையான் கும்பல் அம்பலமாக்கியுள்ளது. இன்று ஒருவரை ஒருவர் பரம எதிரியாகவும், பரஸ்பரம் அவதூறை கட்டமைக்கும் 'ஜனநாயகத்தை"யே அவர்கள் தமது அரசியலாக செய்கின்றனர்.

 

தேனீக் கும்பல, ஆனந்தசங்கரி முதல் புளட் கும்பல் வரையிலான எடுபிடி 'ஜனநாயகம்' பேசி நாறுகின்றது. எல்லாம் இலங்கையில் இயங்கும் கூலிக் கும்பல்களின் பினாமிகள் என்பது, இந்திய இலங்கை ஏகாதிபத்திய அரசியல் ஏஜண்டுகள் என்பது வெளிப்படையானது. மக்களுக்கென்ற ஒரு சுயாதீனமான மக்கள் அரசியலை என்றும் இவர்கள் வைத்தது கிடையாது. இவர்கள் பேசிய 'ஜனநாயகம்" என்பது, இலங்கை இந்திய கூலிக் குழுக்களைச் சார்ந்து, தாம் பிழைத்துக்கொள்ளும் சுயநலத்தை தாண்டியதல்ல என்பது இன்று வெளிப்படையாகி நிற்கின்றது.

 

இந்த வேஷதாரிகள் வெளிப்படையாக வெளுத்துப் போக, தேசம் நெற் இந்த கும்பலின் பின்னணியில் தனிமனித வக்கிரங்களை அள்ளிக் கொட்டுகின்ற அற்ப கொசிப்புத் தளமாகியது. இலங்கை மக்களின் சொந்த விடுதலை பற்றி யாரும் பேசிவிடக் கூடாது என்ற அடிப்படையில், அன்னிய உளவுத்துறைகளின் திட்டமிட்ட அரசியல் தேவையுடன் தேசம் நெற் களமிறங்கியது.

 

தமக்கு கருத்து கிடையாது, அரசியல் கிடையாது என்று அறிவித்துக்கொண்டு, மக்களுக்கு எதிரான அரசியலுடன் விபச்சாரம் செய்தனர். இதையே கடந்தகால கருத்தற்ற இலக்கிய சந்திப்பும், கருத்தற்ற புலம்பெயர் சஞ்சிகைகளும் செய்துவந்தன. இதன் மூலம் அவர்கள் கருத்தின்றியே செத்து மடிந்தன.

 

இன்று தேசம்நெற் மக்களின் உரிமைகள் மீதும் கூட தமக்கு கருத்துக் கிடையாது என்று கூறிக்கொண்டு, அது தனிமனித காழ்ப்புக்களை கொட்டி ஆட்டம் போட்டது, போடுகின்றது. புலி, புலியெதிர்ப்பு அரசியல் வக்கரித்துப் போன சமூக விரோதிகளின், சொந்த ஆடுகளமாக கொண்ட வாசகர் தளத்தை அடிப்படையாகக் கொண்ட தேசம் நெற் அரசியல் செய்தது, செய்கின்றது. இப்படி இரண்டு சமூக விரோதிகளின் அரசியலைக் கொண்டு, மக்களுக்கு எதிராகவே தன்னை மிதப்பாக்க முனைந்தது.

 

மக்களை நேர்மையாக அணுகவும் நேசிக்கவும் வக்கற்ற கும்பலினை வளைத்துப்பிடித்துக் கொண்டு, தமிழ் மக்களை வழிகாட்டப் போவதாக பீற்றிக்கொண்டது. கொசிப்பு, அரிப்பு, வம்பளப்பு மூலம், தன்னை பிரபல்யமாக்க முனைந்தது. இதைச் செய்த பலர், முடிவற்ற இந்த சூதில் சிக்கி களைத்துப் போய்விட்டனர்.

 

இப்படி எங்கும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்று விதம் விதமாக பேசியவர்கள் எல்லாம், இன்று அம்பலமாகிவிட்டனர். அண்மையில் ஞானம் கிழக்கில் பிள்ளையான் அருகில் அமர்ந்து மதியுரைஞனாக கருத்துரைத்ததன் மூலம், அதன் அரசியல் குருவானார். இது எமக்கு நன்கு தெரிந்த ஞானத்தின் சொந்தக் கதையல்ல. ஞானம் போன்றவர்கள் இன்று ஒரு உதாரணம், ஆனால் புலி எதிர்ப்பு பேசும் பலரின் சொந்த நிலை இது. கிழக்கு தேர்தலில் வேறு (புலம்பெயர்ந்தவர்கள்) சிலர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் பின்னணியில் பணம் முதல் அவர்களின் அரசியல் வரை, தாராளமாக அரசியல் விபச்சாரம் செய்கின்றது. சந்தர்ப்பம், சூழல், துணிவும் இருந்தால் 'ஜனநாயகம்" பேசும் பலர், தமிழ் மக்களுக்கு எதிராக, புலிகளின் பெயரில் இலங்கை - இந்திய அரசின் ஏஜண்டுகளாக செயல்பட தயாராகவே உள்ளனர் என்பதே எதார்த்த உண்மை.

 

ஞானத்தை அம்பலப்படுத்துவது எமது இலக்கல்ல

 

ஞானம் போன்றவர்கள் தான், புலியெதிர்ப்பு அரசியல் பிதாமக்கள். ஞானத்தின் அரசியல் என்ன? இன்று அல்ல, நேற்று அல்ல, அவரின் அரசியல் கதை நீண்டது, நெடியது. அவர்கள் புலம்பெயர் இலக்கியம் பேசிய முதல், இலக்கிய சந்திப்பின் பிதாமகனாகவும், 'ஜனநாயகத்தின்" கொம்பாக ரீ.பீ.சீ உளறியது வரை, இந்த துரோக அரசியல் தான் காணப்பட்டது. தலித் முன்னணி ஏற்பாட்டாளராக இருந்த போதும் கூட, இந்த அரசியல் தான் அவரின் முதுகெலும்பாக இருந்தது. தலித்தியம், உயிர்நிழல், எக்சில் பின் முகிழ்ந்த அரசியல் எல்லாம், மக்கள் விரோத அரசியல் தான். இப்படிப்பட்டவர்களின் அரசியல் கூட்டுத்தான், இந்த புலம்பெயர் புலியல்லாத தளத்தில் பொதுவான அரசியல். இவர்களுக்கு இடையிலான முரண்பாட்டிலும் கூட.

 

இன்று ரவுடி பிள்ளையானின் அரசியல் ஆலோசகர். அன்று எதை புலம்பெயர் இலக்கியத்திலும் அரசியலிலும் அவர் உளறினாரோ, அதை பிள்ளையானுக்காக இன்று உளறுகின்றார். ஒரே குட்டை தான் எங்கும். அதை ஞானத்தின் அன்றைய இன்றைய செய்கைகள் மெய்ப்பிக்கின்றது. இங்கும் பல பிள்ளையான்கள் பல வேஷத்தில் உள்ளனர் என்பது, வெளிப்படையானது. அது ஞானம் வடிவில் வெளிவந்தது தற்செயலானது.

 

அவருடன் கடந்த காலத்தில் இருந்த பலரும், சமகாலத்தில் நீPடிப்பவர்களும், அவருடன் முரண்பட்டவர்களும் கொண்டிருக்கும் அரசியல், ஞானத்தின் இன்றைய அதே அரசியல் தான். வேறுபாடும் முரண்பாடும், எந்த கொம்பை பிடித்து மேலே ஏறுவது என்பது தான். இவர்கள் அனைவரும் புலம்பெயர் இலக்கியம், அரசியல் ஊடாக செய்ததும், செய்வதும் படுகேவலமான மக்கள் விரோத அரசியல் தான்.

 

தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை மறுப்பதும், அனைத்தையும் புலியாக காட்டுவதும் இவர்களின் அரசியல் முகமூடி. தமிழ் மக்களுக்கு புலிகள் மறுக்கும் ஜனநாயக உரிமையைப் பற்றி தமக்கு ஏற்ப தாளம் போட்டு பேசுவதும், அதேநேரம் அந்த மக்களின் அரசியல் உரிமைகளை மறுப்பதும், இவர்களின் மொத்த இழிவான அரசியலாகும். இந்த அரசியல் அடிப்படையில் இலங்கை இந்திய அரசின் ஏஜண்டுகளாக செயலாற்றுகின்றனர். கூலிக் குழுக்களை ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொண்டு, நேரடி மற்றும் மறைமுக அரசியல் தொடர்புகளை கொண்டவராக, புலியெதிர்ப்பு அரசியல் பொதுவாக மூடிமறைத்துக் காணப்படுகின்றது.

 

பேரினவாத அரசு தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மறுப்பதை கண்டும் காணாது நியாயப்படுத்திக்கொண்டு, அவர்களின் பின்னால் குலைப்பதே இவர்களின் அரசியல். மக்களின் அடிப்படை அரசியல் உரிமையை நிராகரிப்பதில் இருந்து தான், இவர்களின் அரசியல் தொடங்கி முடிகின்றது. புலியை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அரசியல் வித்தை காட்டுவதே, இவர்களின் எதிர்ப்புரட்சி அரசியலாகும். இதற்காக மார்க்சியம் முதல் தலித்தியம் வரை, ஏன் இவர்கள் பேசாத பொருள் கிடையாது.

 

இவர்கள் மக்களுக்கு வழிகாட்டியதும் வழிகாட்டுவதும் எதை? அவர்கள் சொந்த அடிமைத் தனத்தையும் அற்பத்தனத்தையும் தான். பிள்ளையானின் வாலைப் பிடித்தோ அல்லது டக்கிளஸ்சின் வாலைப் பிடித்தோ, இது போன்றவர்களில் தொங்கிக்கொண்டு தான் தமிழ் மக்கள் தமது விடுதலையைப் பெறமுடியும் என்கின்றனர். தமது சொந்த அடிமைப் புத்தியை நியாயப்படுத்த, தமிழ்மக்கள் ஒடுக்கும் புலிகளின் பாசிசம் இவர்களுக்கு உதவுகின்றது. இதைக் காட்டிக் கொண்டு, இலங்கை அரசின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழ்வது தான், தமிழ் மக்களின் விடுதலை என்கின்றனர். புலியின் அடிமைத் தனத்தில் இருந்து, பேரினவாத அரசின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழ்வது தான், தமிழ் மக்களின் விடுதலை என்பதே புலியெதிர்ப்பு அரசியலாகும். இதற்கு வெளியில் யார் எதை தான் முன்வைக்கின்றனர்?

 

பிள்ளையானோ ஒரு அரசியல் ரவுடி

 

கருணாவின் அதிகாரத்தை கைப்பற்றிய வழிமுறையே, அந்த அரசியல் ரவுடிசத்தைக் காட்டுகின்றது. இலங்கை அரசின் படுகேவலமான ஒரு எடுபிடியாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு லும்பன் தான் பின்ளையான். இப்படித் தான் கிழக்கில் திடீரென உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவன் தான் பிள்ளையான். கூலிக்கு மாரடிப்பதும், கொலை கொள்ளை கற்பழிப்பு என்று எல்லாவற்றையும் அரசியல் பெயரில் செய்த ஒரு ரவுடி தான், கிழக்கின் விடிவெள்ளி. அவனுக்கு ஏற்ற அரசியல் ஆலோசகர் உயிர்நிழல்-எக்சில் ஞானம். பெண்ணியம் தலித்தியம், மார்க்சியம், பின்நவீனத்துவம், யாழ் மேலாதிக்கம் எதிர்ப்பு என்று, எத்தனை எத்தனை முகம்.

 

இந்த அரசியல் வழிகாட்டியின் தலைவனோ, விதவிதமாக ரையைக் கட்டி படம் போடுவதன் மூலம், தன்னை நம்பிக்கையான கவுரவ அரசியல்வாதியாக காட்டிக்கொள்ள விரும்புகின்ற பக்காத் திருடன். இவரின் அரசியல் ஆலோசகர் ஞானமும், ஸ்ராலின் என்ற பெயரில், சின்னமாஸ்ட்டர் என்ற பல பெயரிலும் இயங்கியவர்.

 

புலம் பெயர் 'முற்போக்கு" இலக்கியம், அரசியல் எல்லாம் இப்படி ஒரு ரவுடியின் அரசியல் பின்னால் முகிழ்வது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவர்களுடன் எமது நீண்ட போராட்டம், மிகச்சரியானது என்பதை இவை நிறுவியுள்ளது. உண்மையில் ஞானம் போல் பலர் உள்ளனர்.

 

இலங்கை - இந்திய அரசுடன் இயங்குகின்ற கூலிக் கும்பல்களின் தலைவர்களுடன் தொடர்பு கொள்ளாத, அவர்களுடன் தொலைபேசி உரையாடலைக் கொள்ளாத, அவர்களின் சந்திப்புகளில் கலந்த கொள்ளாத எத்தனையோ பேர், புலியெதிர்ப்பு அரசியலில் உள்ளனர். எபப்டித்தான் இவர்கள் மக்களின் அரசியலுக்காக போராடுகின்றனர். மக்கள் விரோதிகளுடன் உறவை வைத்துக்கொண்ட பலரையே நாம், எம்மைச் சுற்றிய புலியெதிர்ப்பு 'முற்போக்கில்" காண்கின்றோம். படுகேவலமான அரசியல் சூழலை தக்கவைத்தபடி, அதை 'முற்போக்கு" என்று சொல்லுகின்ற அரசியல் வக்கிரமே அரங்கேறுகின்றது.

 

ஞானம் வெளிப்படையாக பிள்ளையானின் மடியில் அமர்ந்து பிழைப்பதே, தமிழ் மக்களின் அரசியல் என்றவுடன், அந்த ரவுடியின் அரசியல் ஆலோசகராகி விடுகின்றார். இப்படி பலர் வெளிப்படையற்ற வகையில் உலாவுகின்றனர். இந்த விமர்சனத்தையே, பலர் தனிநபர் அவதூறு எனகின்றனர். எங்களுக்கு இதுபற்றிக் கவலை கிடையாது. கேடுகெட்ட வகையில், மக்களுக்கு எதிராக யார் எந்த வேஷத்தில் இருந்தாலும், அதை நாம் அம்பலப்படுத்தினோம், அம்பலப்படுத்துவோம்.

 

ஞானம் போன்றவர்கள் சாதிக்கப் போவது எதை?

இலங்கை அரசின் கூலிக் குழுவாக இருப்பது எப்படி, என்பதை வழிகாட்டுவது தான். அதற்கு ஒரு தத்துவ முலாம் பூசுவது. அதை மக்கள் அரசியலாக சோடிப்பது, அதை 'ஜனநாயகம்" என்று காட்டுவதும் தான். வெறும் புலியெதிர்ப்பை லாடமாக கொண்டு, தாமும் பிழைத்துக் கொள்வது. தம்மைத் தாம் 'முற்போக்கு" என்று கூறிக்கொண்டு, மேலும் மக்களை அடிமைப்படுத்தி தாம் மட்டும் பொறுக்கி வாழ்வது.

 

மக்களின் சொந்த விடுதலை என்பதை அடையாளம் காணவிடாது தடுப்பதே இவர்களின் அரசியல். இதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது. பேரினவாதிகளின் திட்டமிட்ட சதித்தன்மையான தேர்தலை, 'ஜனநாயகம்" என்று கூறி, ஊர் உலகத்தை ஏமாற்றி பிழைப்பது, அதற்கு ஏற்ற அரசியல் ஆலோசனைகளை வழங்குவது, இதற்கு ஏற்ப பிழைத்துக் கொண்டு, சொந்த வாழ்வை வளப்படுத்துவது. சட்டவிரோத கடத்தல், கப்பம், கொலைகளை நடத்த உதவுவது. வடக்கு மக்களுக்கு எதிராக, கிழக்கு மக்களை உருவேற்றுவது, முஸ்லீம் மக்களை எதிரியாக்கி, கிழக்கு அரசியல் பேசி அரசியல் பிழைப்பு நடத்துவது, சிறுவர்களை ஆயுதபாணியாக்கி, தம்மைப் பாதுகாப்பது. அவர்களின் பாதுகாப்பில் அரசியல் ஆலோசனை வழங்குவது.

 

(வடக்கு – கிழக்கு) மக்கள், இவர்களின் அடிமைகளாக வாய் பொத்திக் கிடப்பதுதான் இந்த 'ஜனநாயக"த்தின் உச்சம். இனவாதம், பிரதேசவாதம், சாதிவாதம் என்று பல வகையில் தம்மை நியாயப்படுத்திக் கொள்ள, மக்களை பிளப்பதே இவர்களின் அரசியல் உத்தி.

 

ஞானம் வழிநடத்திய புலம்பெயர் தலித்தியம்

 

புலம்பெயர் தலித்தியம் இன்று சந்திக்கு வந்துள்ளது. தலித் ஏற்பாட்டாளர்களில் இந்த ஞானம் முக்கியமானவர். பாவம் தலித் மக்கள். தலித் மக்களின் பெயரில் அரசியல் பிழைப்பு நடத்தப்பட்டதை, ஞானத்தின் இன்றைய நிலை எடுத்துக்காட்டுகின்றது. தலித்திய மற்றைய ஏற்பாட்டாளர்களின் கள்ள மௌனம், இதற்கு எதிராக கருத்துரைக்காத அவர்களின் தலித்தியமும், இதை மேலும் அம்பலமாக்குகின்றது.

 

தலித் மக்களைக் கொண்டு பிளக்கும், இலங்கை அரசின் ஏற்பாடா தலித்தியம் என்ற கேள்வியை எம்முன் இது எழுப்புகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத அரசின் ஒரு அரசியல் ஏஜண்டாக ஞானம் வெளிவந்த பின்பு, தலித் ஏற்பாட்டாளர்கள் எந்த எதிர்வினையுமின்றி இருப்பது ஏன்? தலித் மக்களின் விடுதலை இவர்களின் நோக்கமல்ல என்பதையே, இது தெளிவாக காட்டுகின்றது. இலங்கை அரசும் இது போன்ற சமூக பிளவுகளை தனது அரசியல் நோக்கில், நேரடியாகவும் மறைமுகமாகவும், சுற்று வழிகளிலும் தொடர்ச்சியாக செய்து வருகின்றது. தலித்தியம் பற்றிய தெளிவற்ற வளவளப்பு கோட்பாட்டை, தலித் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்த போது, அதை நாம் அம்பலப்படுத்தினோம்.

 

தலித் பேசுவோர்கள், இலங்கை அரசாங்கத்தை இதன் பெயரில் கண்டிப்பது கிடையாது. ஏன் இவர்கள் கூட, இலங்கை அரசின் ஊடாக தலித் விடுதலை பற்றியே கனவு காண்கின்றனர். புலியொழிப்பு போல் இதுவும், இலங்கை அரசின் ஊடாக தீர்வு என்று, அதே சக்கரத்தைத் தான் உருட்டுகின்றனர்.

 

இப்படி தமிழ் மக்கள், தலித் மக்கள், கிழக்கு மக்களின் விடுதலை எல்லாம், இலங்கை அரசின் கையைக் காலைப் பிடித்து சாதிக்கும் அரசியல் விடையமாகிவிட்டது. அதை 'ஜனநாயக" மாக காட்டி செய்யும் அரசியலோ, மொத்தத்தில் மக்கள் விரோத அரசியல் தான்.

 

பி.இரயாகரன்
04.05.2008