முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் கைது செய்யப்பட்டு கடந்த 5ம் திகதியுடன் இரு மாதங்கள் நிறைவடைந்து விட்டன. மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் குமாரின் குடியியல் உரிமை குறித்தான தனது நிலைப்பாட்டினை அறிவிக்காது தொடர்ந்து மௌனம் காக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி புலம்பெயர்ந்தவர்களை திரும்ப வருமாறு மைத்திரி – ரணில் கூட்டு பகிரங்க அழைப்பினை விடுத்ததன் பேரிலேயே குமார் குணரத்தினம் அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாடு திரும்பி இருந்தார்.
குமாருக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்கு விசாரணை எதிர்வரும் 8ம் திகதி கேகாலை நீதிமன்றத்தில் நிகழவிருக்கின்றது. கோட்டை புகையிரத நிலையதிற்கு முன்பாக குமாரின் அரசியல் மற்றும் குடியியல் உரிமைகளுக்கான சத்தியாகக்கிரகம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாளை 7ம் திகதி ஒரு நாள் ஆர்ப்பாட்டங்கள் பல நகரங்களில் இடம்பெறவுள்ளன.
நாளை காலை 10 மணி முதல் அநுராதபுர பஸ் நிலையத்தின் முன்பாகவுள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாகவும், பாணந்துர பஸ் நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்ட போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதனை தொடர்ந்து 8ம் திகதி முழுநாள் ஆர்ப்பாட்ட போராட்டங்கள் மொனராகல மற்றும் வெள்ளவாய நகரங்களில் இடம்பெறவுள்ளன.
இந்த போராட்டங்களில் இணைந்து கொண்டு அனைவரினதும் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய அணிதிரளுமாறு முன்னிலை சோசலிச கட்சி அழைக்கின்றது.