puja_apri_07.jpg

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று திருச்சியில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதலை முன்னணி, இப்போராட்ட நாளில் மறுகாலனிய அடிமைத்தனத்தை வீழ்த்த உறுதியேற்று, கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க மண்டபத்தில் அரங்கக் கூட்டத்தை

 நடத்தியது. தோழர் நிர்மலா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மதுரை மையம் வீதி நாடக இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தேவி, சென்னை ம.க.இ.க. தோழர் துரை.சண்முகம் ஆகியோர் உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகக் கொடுமைகள் தடைகளையும், அடிமைப்பட்ட மண்ணை மீட்க விடுதலைப் போரைத் தொடுப்பதன் மூலமே பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட அனைத்தையும் வீழ்த்த முடியும் என்பதையும் விளக்கிச் சிறப்புரையாற்றினர். ஓராண்டுக்கு முன் இதே நாளில் இவ்வமைப்பு தொடங்கப்பட்டு, குறுகிய காலத்திலேயே பல போராட்டங்களில் ஈடுபட்ட அனுபவங்களைத் தொகுத்த தோழர் நிர்மலாவின் உரைக்குப் பின், புதிய நிர்வாகிகள் தேர்வும் அதைத் தொடர்ந்து புரட்சிகர கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 

கோவில்பட்டியில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தீப்பெட்டி தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில், 11.3.07 அன்று உமா திருமண மண்டபத்தில் அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி தோழர் அனுசியா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய ""மூட்டா'' சங்கத் தலைவரும் ஜி.வி.என். கல்லூரிப் பேராசிரியருமான உமாதேவி, திராவிடர் கழக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தமிழரசி மற்றும் பு.ஜ.தொ.மு. அமைப்பாளர் தோழர் முருகன் ஆகியோர், தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் பெண் விடுதலை சாத்தியமில்லை என்பதையும், நாட்டின் மீதும் மக்களின் மீதும் மறுகாலனிய அடிமைத்தனமும் உழைப்புச் சுரண்டலும் திணிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்களோடு இணைந்து உழைக்கும் பெண்கள் போராடுவதன்மூலமே பெண் விடுதலையைச் சாதிக்க முடியும் என்பதையும் எடுத்துரைத்தனர்.

 

பள்ளிகல்லூரி மாணவிகளின் கவிதை வாசிப்பு, சிறுவர்களின் கலைநிகழ்ச்சியுடன் நடந்த இந்தக் கருத்தரங்கம் குடும்பத்தோட திரண்டு வந்திருந்த பெண் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்தது.


பு.ஜ.
செய்தியாளர்கள்.