may_2007.jpg

அடங்க மறு; அத்து மீறு!'' இது சுவரெங்கும் விடுதலை சிறுத்தைகள் எழுதி வைக்கும் முழக்கம். இதை வாசித்துவிட்டுப் பொங்கி எழும் தலித் இளைஞர்கள் அத்துமீறினால் அவர்களுக்கு ஆதரவுக் குரல் தராமல், அந்த இளைஞர்களையே ஆதிக்க சாதியிடம் ""அடங்கிப் போ'' என எந்தத் தலைவராவது வற்புறுத்துவாரானால்,

 அவரை நாம் நிச்சயமாக தலித் துரோகி எனச் சொல்லி விடலாம். ஆனால், அவ்வாறு அடங்கிப் போகச் சொல்வதே விடுதலைச் சிறுத்தைகளின் தலைமைதான் எனும்போது, அச்செயலை அம்பலப்படத்தி விமர்சிக்காமல் தலைமையை வியந்தோதி ""சேரிப்புயல்'' என்றோ, ""வாழும் அம்பேத்கர்'' என்றோ நாணயமுள்ளவர்கள் துதிபாடிக் கொண்டிருக்க முடியுமா?

 

புதுக்கூரைப்பேட்டை, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள சிறு கிராமம். இக்கிராமத்தின் தலித் காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசனும், அதே ஊரின் ஊராட்சித் தலைவர் துரைசாமியின் மகள் கண்ணகியும் 8.7.2003 அன்று நஞ்சு ஊற்றிக் கொல்லப்பட்டு உடனடியாக எரிக்கப்பட்டனர். பொறியியல் பட்டம் படித்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனை, வன்னியப் பெண்ணான கண்ணகி காதலித்ததாலேயே, அப்பெண்ணின் வீட்டார்உறவினர்களால் இருவரும் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, ஊருக்கு வெளியேயுள்ள முந்திரிக் காடொன்றில் கட்டி வைத்து உதைக்கப்பட்டனர். கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிதான் முருகேசனின் வாயில் பூச்சிக் கொல்லி மருந்தை ஊற்றிக் கொன்றார். முருகேசனின் தந்தையும், சித்தப்பா அய்யாசாமியும் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் இக்கொடுஞ்செயலைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அன்றைக்கு அவர்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.

 

தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்துத் தன் சுயசாதிக் கவுரவத்தைச் சிதைத்துவிட்ட தங்கையின் வாயில் விசம் ஊற்றினார் அண்ணன் மருதுபாண்டி. வாயைத் திறக்க தங்கை மறுத்திடவே, அவரின் மூக்கிலும், காதுகளிலும் விசத்தை இறக்கிச் சாகடித்தனர். சிறிது நேரத்திலேயே பிணமாகிப் போன இருவரையும் தனித்தனியே எரித்துத் தடயத்தையும் அழித்து விட்டனர்.

 

நெஞ்சை உறைய வைக்கும் இப்படுகொலைகள் நடந்தவுடன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொலைபேசியில் சாமிக்கண்ணுவைத் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னார். போலீசு கண்டிப்பாய் நடவடிக்கை எடுக்கும் என்றார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, இந்தப் பயங்கரத்தை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினார்.

 

இந்தச் சம்பவத்தில் ஆதிக்க வன்னிய சாதிக்கு ஆதரவாய் செயல்பட்டு வந்த போலீசு, இந்த வன்னிய சாதிவெறி பயங்கரவாதம் அம்பலமானவுடனேயே முருகேசனை தலித்களும், கண்ணகியை வன்னியர்களும் கொன்றதாக வழக்கு சோடித்து இரண்டு தரப்பிலும் சிலரைக் கைது செய்தது. தன் கண் முன்னரே தன் பிள்ளை சாவதைப் பார்க்க நேரிட்ட சாமிக்கண்ணுவையும் கொலையாளி ஆக்கிய போலீசின் இக்கொடுமையைக் கேள்வியுற்ற சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் ரத்தினம், தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ""சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்'' என வழக்குத் தொடர்ந்தார். வழக்குரைஞர் ரத்தினம்தான் மேலவளவு கொலையாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்தவர்.

 

இந்த வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்கத் தொடங்கிய அதே சமயம், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே மீண்டும் உறவு மலர்ந்தது. இதன்பின் சாமிக்கண்ணுவின் உறவினரான ஊத்தாங்கால் சண்முகம் என்பவர் மூலம் திருமாவளவன் இவ்வழக்கு விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்றார்.

 

""கேஸ் அது இதுன்னு விசயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்'' என திருமாவளவன் சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமியிடம் தொலைபேசி மூலம் பேசி சமரசமாகப் போகச் சொன்னதும், அய்யாசாமி திகைத்துப் போய்விடடார். ""என்ன இப்படி சொல்றீங்க?'' எனக் கேட்ட அய்யாசாமியிடம் திருமா, ""அன்புமணி மூலமா பிரசர் வருது. நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கணும்'' என நைச்சியமாகப் பேசவே அய்யாசாமி ""வக்கீலிடம் கேட்டு சொல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

 

கடுப்பான திருமாவோ ""வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கீலுக்கு என்ன வேலை நடுவுல? நீங்க முடிவெடுங்க. ஒத்துக்கிட்டா பணம் கூட கணிசமா தருவதா சொல்றாங்க'' என்று பேரத்துக்கு நேரடியாக இறங்கியதும், ""காசு வரும். எம் புள்ள வருமா?'' என்று பொட்டில் அடித்த மாதிரிக் கேட்டு விட்டு, செல்போன் மூலம் நடந்த இந்த உரையாடலை நிறுத்தினார்.

 

கட்டப் பஞ்சாயத்து செய்ய வந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஊத்தங்கால் சண்முகத்தை முருகேசனின் குடும்பம் ""இந்த மாதிரி வேலை செய்யுற நினைப்பிருந்தா சொந்தக்காரன்னு கூடப் பார்க்க மாட்டோம்'' எனத் திட்டித் தீர்த்தது.

 

"சி.பி.ஐ. ஆரம்பத்துல ஒழுங்காத்தான் விசாரணை நடத்துச்சு. தலித்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதால விடுதலை சிறுத்தை பிரச்சனை பண்ணும்னு பயப்பட வேண்டியதில்லை, அதை படையாச்சிங்க சரிக்கட்டிட்டாங்கன்னு தெரிஞ்சோ அல்லது வேறு என்ன காரணமோ திடீர்னு குற்றப்பத்திரிகையில முருகேசனோட சித்தப்பா அய்யாசாமியை நாலாவது குற்றவாளியா சேர்த்தது சி.பி.ஐ.'' என்று கூறுகிறார், வழக்கறிஞர் ரத்தினம்.

 

பொறியியல் பட்டம் பெற்று தன் குடும்பத்தையே உயர்த்துவான் முருகேசன் — எனப் பல நூறு கனவுகள் கொண்டிருந்த அந்தக் குடும்பம், இன்று வழக்காடி எப்படியும் வன்னிய சாதி வெறிக் கும்பலுக்குத் தண்டனை பெற்றத் தருவது என்பதில் உறுதியாய் உள்ளது.

 

ஆனால், சமாதானத் தூது முயற்சியில் தோல்வி கண்ட விடுதலைச் சிறுத்தைகள் தன் தளரா முயற்சியோடு தனது விவசாய அணிச் செயலாளர் திருச்சி கிட்டுவை, வாய்தா நாளன்று நீதிமன்ற வளாகத்துக்கே அனுப்பி பேரம் பேச முயன்றது. அடுத்து, நெய்வேலி சிந்தனைச் செல்வன் எனும் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகரை அனுப்பி வைத்துத் தனது "சமுதாயப் பணி'யைத் தொடர்ந்து செய்து வருகிறது.

 

ஓட்டுப் பொறுக்கி அரசியலை விமர்சித்து "தின்பது வாழைப்பழமாக இருந்தாலும் கழிவது மலம்தான்' எனக் கண்டுபிடித்த திருமா, வாக்குச்சீட்டு அரசியலுக்கு வந்ததும் முதல் வேலையாக பண்ணை ஆதிக்க சாதிவெறி மூப்பனாரைக் கரம் பிடித்தார். தமிழ்நாட்டின் அரசியல் கேவலம் வைகோவையே விஞ்சிடும் வண்ணம், அடுத்தடுத்து அணிதாவினார். தற்போது, ஒடுக்கப்படும் தன் சுயசாதி மக்கள் பக்கம் நின்று போராடாமல் கட்டப் பஞ்சாயத்துப் புரட்சி செய்கிறார். இன்னமும் இத்தகைய தலைவர்கள் தங்களது விடுதலையைப் பெற்றுத் தருவார்கள் எனத் தலித் மக்கள் நம்பிக் கிடப்பது, மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயல்வது போன்றதுதான்.

 

குறிப்பு: ""புதுவிசை'' என்ற கலாச்சார பத்திரிகையின் ஏப்ரல் ஜூன் 2007 இதழில் வெளிவந்த ""சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்'' என்ற கட்டுரையில் காணப்படும் முருகேசனின் உறவினர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


· இருட்டு