சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி சம உரிமை இயக்கத்தினால் நேற்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோஷலிச கட்சி, இலங்கை ஆசிரியர் சங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 நாட்கள் முடிவடைந்தும் வடக்கில் இளைஞர்கள் இன்னும் சிறையில், யுத்தம் முடிவடைந்து பல வருடங்களாக கைதிகள் சிறையில், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், இதுவா நல்லாட்சி, மக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளி ஆகிய சுலோகங்களுடனான பதாகைகளை ஏந்திய நிலையில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் ஊடகங்களுக்கு கண்ணீர் மல்க கருத்து தெரிவிக்கையில்,
எனது அம்மாவின் பெயர் சசிதரன் தங்கமலர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனக்கு நான்கு சகோதரிகள் அவர்கள் அனைவரும் திருமணம் முடித்து விட்டனர். இவ்வாறான நிலையில் எனது வீட்டில் நான் மட்டுமே தனிமையில் எனது அம்மாவை பிரிந்து தவிக்கின்றேன்.
எனது அம்மாவை பிரிந்து வாழும் என் னால் எனது கல்வியையும் தொடர முடியாமல் எனது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இங்கு இருக்கும் அனைவரையும் நான் மன்றாடி கேட்கின்றேன். எப்படியாவது எனது அம்மாவை மீட்டுத்தாருங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
யுத்த காலங்களில் பல்வேறு குற்றசாட்டுக்களின் அடிப்படையில் அரசியல் கைதிகள் எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை கண்டித்து முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இன்றைய அரசாங்கத்திலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எமது ஆட்சியில் எந்த ஒரு அரசியல் கைதியும் தடுத்து வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://tamil.lankaviews.com/