may_2007.jpg

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு இங்குள்ள அமெரிக்க அடிமைகளும் அமெரிக்க மோகிகளும் அப்படியே துடிதுடித்துப் போய்விட்டார்கள். சில ஆண்டுகளுக்கு

 முன்பு அமெரிக்காவின் ""நாசா''வின் விண்ஓடம் கொலம்பியா வெடித்துச் சிதறிய விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா மாண்டபோது ஜான்சிராணியோடு அவரை ஒப்பிட்டுப் போற்றி நாட்டையே துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கடித்தனர். இவர்கள் ஏதோ தாய்நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் காப்பதற்கான போராட்டத்தில் தமது உயிரையே தியாகம் செய்தவர்களைப் போல இந்த நாட்டின் பிஞ்சு நெஞ்சங்களிலும் நஞ்சை விதைக்கின்றனர்.

 

கோவையில் பொறியியற் பட்டப்படிப்பும், கான்பூரில் மேற்படிப்பும் முடித்து ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்கா போய், கால் நூற்றாண்டுக்கும் மேலாக அங்கேயே பேராசிரியர் வேலை செய்து, குடும்பம் நடத்தி, செத்தால் அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியவர் லோகநாதன்; உலக மேல்நிலை மேலாதிக்கப் போர்வெறி நோக்கத்துக்காக விண்வெளி ஆராய்ச்சி நடத்தும் ""நாசா''வில் வேலைக்குச் சேர்ந்து விபத்தில் மாண்டு போனவர் கல்பனா சாவ்லா. இப்படி அந்நியச் சேவைக்குத் தங்களால் அனுப்பி வைக்கப்படுபவர்கள், ஏதாவது துப்பாக்கிச் சூடு, விபத்து என்று பலியாகிப் போவதால் மற்றவர்கள் சோர்ந்து போகக்கூடாது அல்லவா! அதனால்தான் அரசியல்தொழில் தரகர்கள் ஒவ்வொரு நிகழ்வின்போதும் துக்கத்தில் வெடிக்கிறார்கள். அரேபியப் பாலைவனத்தில் செத்து பிணமாகி சவப்பெட்டியிலேயே அழுகி நாறும் தமிழகத் தொழிலாளிகளை தாயகம் கொண்டு வரவும், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கசையடி சித்திரவதைப்பட்டு சிறைகளில் துடிக்கும் தமிழகத் தொழிலாளிகளை மீட்பதற்கும் துப்பில்லை; தமிழக மீனவர்கள் கடலிலே சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்கும் முயற்சி இல்லை. கடவுச் சீட்டு வாங்க சென்னை வரை வந்துவிட்ட பேராசிரியர் லோகநாதனின் உறவினர்கள் விமானக் கட்டணத்துக்குப் பணமில்லாமல் மீனம்பாக்கத்தில் தவித்ததை போல, கருணாநிதி தலைமையில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, துக்கம் தெரிவிக்கிறார்கள்; பேராசிரியரின் உறவினர்களை இலவசமாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

 

இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் ஏதாவது சேவை செய்வார்கள் என்ற ""நம்பிக்கை''யில்தான் மனிதவள மேம்பாடு என்ற பெயரில் ஒரு பொறியியலாளர், ஒரு மருத்துவர், ஒரு விஞ்ஞானி, ஒரு கல்வியாளரை உருவாக்க பொதுப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஆனால் இவர்களிடம் முழுக்க முழுக்க சுயநல பிழைப்புவாதம்தான் நிரம்பி வழிகிறது; அவர்களால் இந்த நாடும் மக்களும் அடைந்த பெருமை, நன்மை ஏதும் கிடையாது. தானும், முடிந்தவரை தம் உறவினர்களும் அமெரிக்காவிற்குப் போய் பச்சை அட்டை வாங்கிக் கொண்டு சொகுசாக எப்படி வாழ்வது என்பது பற்றியே அவர்கள் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ""என்னிடம் அறிவிருக்கிறது, அதற்கு நல்ல விலை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் விற்கத் தயாராக இருக்கிறேன். அதிலென்ன தப்பு?'' என்று கேட்கிறார்கள். ஆபாசச் சினிமாக்காரிகள்கூட தன்னிடம் கவர்ச்சி இருக்கிறது, பணத்திற்கு அதைக் காட்டுவதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறார்கள்.

 

அந்நிய மோகமும் அடிமைத்தனமும் தலைக்கேறியதால்தான் கள்ளக் கடவுச் சீட்டு வைத்துக் கொண்டும் ஆள்மாறாட்டம் செய்தும் மேலைநாடுகளுக்கு ஓடுகிறார்கள். இதற்கான கிரிமினல்தொழில் தரகர்களாக சில சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தகக் கழகத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய விமானத் தாக்குதல்; கனடாவில் சீக்கியத் தீவிரவாதிகள் நடத்திய விமானத் தகர்ப்பு; வெர்ஜினியா பல்தொழில் நுட்பப் பல்கலைக் கழகத் துப்பாக்கிச் சூடு; கொலம்பியா விண் ஓட விபத்து போன்ற சம்பவங்களால் அந்த ஓடுகாலிகள் பலியாகிப் போகும்போது நாம் இவ்வளவு தூரம் அக்கறைப்பட வேண்டிய அவசியமில்லை. இவையெல்லாம் இந்த ஓடுகாலிகளின் அமெரிக்கப் புரவலர்களான ஏகாதிபத்தியவாதிகள் பெற்றெடுத்த செல்லப் பிள்ளைகளின் கைவரிசைகள் தாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வெறிதான் பயங்கரவாதமாகவும் எதிர்பயங்கரவாதமாகவும் உருவெடுத்திருக்கிறது; தன்னல வெறி, தனிமைவாதம் ஆகிய வக்கிரம் கொண்ட அமெரிக்க சமூககல்விபண்பாடுதான், வெர்ஜினியா பல்கலைக்கழகத் துப்பாக்கிச் சூடு நடத்திய தென்கொரியப் பிறப்பு இளைஞனை கொலைவெறியனாக்கியது. அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் வகிக்கும் ஆயுதமுதலாளிகள் ஊட்டி வளர்க்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்தான் அந்த இளைஞனை ஆயுதபாணியாக்கியது; பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இத்தகைய தொடர் படுகொலைகளுக்கு இதுவே காரணம்.