may_2007.jpg

"நட்டத்தில் விழுந்து கிடந்த இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக மாற்றிச் சாதனை படைத்துள்ளார் லாலு'', ""தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பட்ஜெட் போட்டுள்ளார் ஏழைப்பங்காளர் லாலு'' என்றெல்லாம் பார்ப்பன இந்தியா டுடே முதல்

 சமூகநீதி பேசும் பத்திரிகைகள் வரை இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. இந்திய நிர்வாகவியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) பயிலும் மாணவர்களிடம், இலாபமீட்டும் இரகசியத்தைப் பாடம் நடத்தும் அளவுக்கு அவரது பெருமையும், புகழும் பெருகியுள்ளதாக முதலாளித்துவ மூதறிஞர்கள் பாராட்டுகின்றனர்.

 

1980களில் 7.6 சதவீதமாக இருந்த இரயில்வே துறையின் வளர்ச்சி விகிதம் 1990களில் 6.56 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அடுத்த பத்தாண்டுகளில் குறிப்பிடும் அளவுக்கு வளர்ச்சி இல்லை. இந்நிலையில், இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக லாலுபிரசாத் யாதவ் மாற்றியுள்ளார் என்றால், அவர் கையில் அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்துள்ளதா, என்ன! அதுவும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே அவரால் எப்படி இந்த அதிசயத்தைச் செய்ய முடிந்தது?

 

1990களில் இரயில்வே துறையின் பல முக்கியமான மீட்டர்கேஜ் பாதைகள், அகலப் பாதைகளாக மாற்றப்பட்டன; டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்ட தடங்கள் பெருமளவில் மின்சாரமயமாக்கப்பட்டன; பல தடங்களில் இருவழிப் பாதைகள் போடப்பட்டன; பெரும்பாலான ரயில் நிலையங்களின் ""சிக்னல்கள்'' தானியங்கியாக மாற்றப்பட்டன. இவ்வாறு மிகப் பெரிய இரயில்வே துறையின் அடிக்கட்டுமானங்களை நவீனமயப்படுத்த பல்லாயிரங் கோடிகள் செலவிடப்பட்டதால், அந்த பத்தாண்டுகளில் இரயில்வே துறையின் இலாப விகிதம் குறைந்து போனது.

 

இம்முதலீடுகள் எல்லாம் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக பலன் தரத் தொடங்கியுள்ளன. நாட்டின் இரயில்வே தடங்களில் 70 சதவீதமாக உள்ள அகலப்பாதைகள்தான், இப்போது 95 சதவீத சரக்குப் போக்குவரத்துக்கும், 89 சதவீத பயணிகள் போக்குவரத்துக்கும் பயன்படுகின்றன என்பதிலிருந்தே 1990களில் போடப்பட்ட அகலப்பாதைகளின் பங்களிப்பு புலனாகிறது. கடந்த மூன்றாண்டுகளாக சாலைப் போக்குவரத்துடன் போட்டியிடும் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதில் இரயில்வே துறை வளர்ந்துள்ளது. அகலப் பாதைகள் அமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளதன் விளைவாக, மூலதன அழுத்தம் கொண்ட இரயில்வே துறை இப்போது மெதுவாக வளர்ச்சியடைந்து பலன்தரத் தொடங்கியதும், இதையே லாலுவின் நிர்வாகத் திறன் என்று முதலாளித்துவவாதிகள் உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.

 

நவீனமயப்படுத்தலால் ஏற்பட்ட செலவுகள் குறைந்து, பலன்கள் கிடைப்பது ஒருபுறமிருக்க, இலாபமீட்டும் துறையாக இரயில்வே துறையை மாற்றிய லாலுவின் "திறமை'தான் என்ன? பேருந்துகளிலோ சந்தையிலோ ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். அதையே அரசாங்கம் செய்தால் அது நிர்வாகத் திறமை என்பதுதான் லாலு கண்டுபிடித்துள்ள உத்தி.

 

சாதாரண தொடர் வண்டிகள் (பாசஞ்சர்) அனைத்தும் எவ்வித வசதிகளுமின்றி விரைவு வண்டிகள் (எக்ஸ்பிரஸ்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விரைவு வண்டிக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதேபோல விரைவு வண்டிகள் அதிவிரைவு வண்டிகள் (சூப்பர் ஃபாஸ்ட்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சட்டபூர்வமாகவே கட்டணக் கொள்ளை தொடர்கிறது.

 

புறப்படும் இடத்திலிருந்து அல்லாமல், அருகிலுள்ள ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்தால், அதற்குக் கூடுதல் கட்டணம்; முன்பதிவு செய்யப்படும் படுக்கையில், கீழ்தளப் படுக்கைக்குக் கூடுதல் கட்டணம் என்று அங்கேயும் வழிப்பறி; அவசர அவசியம் கருதி உடனடியாக படுக்கை வசதியுடன் பயணம் செய்வதற்காக சற்று கூடுதல் கட்டணமுறையுடன் இருந்த ""தட்கல்'' திட்டத்தை வரைமுறையின்றி விரிவுபடுத்தி பலமடங்குக் கூடுதல் கட்டணக் கொள்ளை; 90 நாட்களுக்கு முன்னரே இணையதளம் மூலம் எத்தனை பயணச் சீட்டுகளையும் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இணையதள வசதியில்லாதவர்கள் அவசரப் பயணத்திற்காக வேறுவழியின்றி ""தட்கல்'' திட்டத்துக்கு துரத்தப்பட்டு அங்கே கூடுதல் கட்டணத்தைக் கொட்டியழ வேண்டிய நிலை; முன்பதிவு செய்ததை ரத்து செய்தால் இழப்பீடு தொகை இரு மடங்கு உயர்வு என பல வழிகளிலும் நூதனமான வழிப்பறி செய்கிறது இரயில்வே துறை.

 

தொடர்ந்து ஈராண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை என்று கூசாமல் புளுகிக் கொண்டு புதிய உத்திகளுடன் வழிப்பறி செய்து வரும் லாலு, ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்துவிட்டு, செலவுகள் குறைந்து ஆதாயம் பெருகியுள்ளதாகக் கணக்கு காட்டுகிறார். இரயில்வே துறையால் நியமிக்கப்பட்ட பிரகாஷ் டாண்டன் கமிட்டி, ராகேஷ்மோகன் கமிட்டி ஆகியவை பரிந்துரைத்த தொழிலாளர் விரோத, தனியார்மய நடவடிக்கைகளே இப்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

கடைநிலை ஊழியர்களான ""கலாசி'' தொழிலாளர்களில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வேலையிலிருந்து பிடுங்கி எறியப்பட்டுள்ளனர். தண்டவாளங்களில் விரிசலைக் கண்டறிந்து பழுது நீக்குதல், தண்டவாளத்தின் கீழுள்ள ஜல்லி இறுகி விடாமல் சீரமைத்தல் பராமரித்தல், ரயில் பெட்டிகளைத் துப்புரவு செய்தல், ரயில் நிலையங்களைப் பராமரித்தல், ரயில்வே குடியிருப்புகள், உணவகம், முன்பதிவு சேவை, ஆளற்ற லெவல் கிராசிங்குகள், பாலங்களைக் கண்காணித்தல் முதலான இரயில்வே துறையே முன்னர் செய்துவந்த பணிகள் அனைத்தும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தாரை வார்க்கப்பட்டுள்ளன. பணிமனைகளில் 15 சதவீதமும் தற்காலிக ஊழியர்களில் 100 சதவீதமும் ஏற்கெனவே ஆட்குறைப்பு செய்யப்பட்டு விட்டனர். அதிவேக ரயில்கள் சிறிய ஊர்களில் நிற்காது என்று காரணம் காட்டி, பல ரயில் நிலையங்களில் பார்சல் அனுப்பும் பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய ரயில் நிலையங்களில் ஆட்குறைப்பு காரணமாக ஊழியர்கள் மீது கூடுதல் வேலைப்பளு சுமத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கைகளே இரயில்வே துறையின் இலாபத்துக்கு முக்கிய காரணமாகும்.

 

இதுதவிர, ""ஈ டிக்கெட்டிங்'' முறை மூலம் பெட்ரோல் பங்குகள், வங்கிகள் வாயிலாக பயணச் சீட்டு விற்பனையைக் கொண்டுவந்து, ஆட்குறைப்புக்கும் அதன்மூலம் அதிகலாபத்துக்கும் திட்டம் தீட்டி வருகிறார் லாலு. ஏற்கெனவே தனியாருடன் சேர்ந்து 225 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார் லாலு. இந்திய ரயில்வேக்குச் சொந்தமாக நாடெங்குமுள்ள 10,000 ஏக்கர் உபரி நிலங்களைத் தனியாருக்கு விற்று ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டவும், ரயில்வே கட்டிடங்களில் தனியாருடன் இணைந்து தங்கும் விடுதிகள், பேரங்காடிகள், திரையரங்குகளை நிறுவவும் திட்டங்கள் தயாராக உள்ளன. வருவாய் அதிகம் கிடைத்துவரும் முக்கியமான சரக்கு ரயில் நிலையங்களையும் பயணிகள் ரயில் நிலையங்களையும் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களான பம்பார்டியர், ஜெனரல் எலக்டிரிகல்ஸ் ஆகியன இதற்குப் பேரங்களை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே பயணிகள் பெட்டிகளையும் சரக்கு ரயில் பெட்டிகளையும் 15 தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் ரூ. 500 கோடி அளவுக்கு இரயில்வே துறை ஆதாயம் ஈட்டியுள்ளதால், இதை மேலும் விரிவுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இத்தகைய தொழிலாளர் விரோததனியார்மய நடவடிக்கைகளால் விரைவில் 3 லட்சம் ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, வேலையிலிருந்து விரட்டப்படும் அபாயத்தில் உள்ளனர்.

 

விளம்பரங்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால், ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளிலும் விளம்பரங்களை அனுமதித்து வந்தது போய், இப்போது ஒரு ரயிலையே விளம்பரத்துக்காக பெயரிட்டு இயக்குமளவுக்கு தனியார்மயத்தில் மூழ்கி முத்தெடுக்கிறார், லாலு. கொலைகார கோக்கின் பங்காளி நிறுவனமான பெப்சி குளிர்பான கம்பெனியின் ""குர்குரே'' எனும் நொறுக்குத் தீனியை விளம்பரப்படுத்துவதற்காகவே ""குர்குரே எக்ஸ்பிரஸ்'' இயக்கப்படுகிறது. உணவு மற்றும் பிற சேவைகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விட்டதன் மூலம், உபரியாக உள்ள ஊழியர்கள் குறைக்கப்பட்டு ஏறத்தாழ ரூ. 1000 கோடி அளவுக்குச் செலவுகள் குறைந்துள்ளதாகப் பெருமைப்படும் லாலு, இத்திட்டத்தை நாடெங்கும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

 

சமூகநீதி, இடஒதுக்கீடு பேசும் பிற்பட்டோர் நலச் சங்கங்களில் பூஜிக்கப்படும் லாலுவால், ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் அனைவருமே பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஊழியர்களாவர். கடைநிலை ஊழியர்களான இவர்களின் வயிற்றிலடித்துதான், இலாபக் கணக்கு காட்டுகிறார் லாலு. பால்கோ போன்ற அரசுத்துறை நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்த்தது போல் அல்லாமல், படிப்படியாக இரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் புதிய உத்தி; ஒட்டு மொத்தமாக அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்து வீதியில் வீசியெறியும் நரித்தனம்; விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, உள்வட்டப் பேருந்து என்றெல்லாம் பெயரிட்டு கட்டணக் கொள்ளையை நடத்தும் தி.மு.க. அரசை விஞ்சும் சட்டபூர்வ வழிப்பறி இவைதான் இரயில்வே அமைச்சர் லாலுவின் நிர்வாகத் திறன்!

 

இதனால் தான் மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை ""கோமாளி, ஊழல் பெருச்சாளி, கிரிமினல் அரசியல்வாதி, மாட்டுக்கார வேலன்'' என்றெல்லாம் நக்கலடித்து சாடி வந்த பார்ப்பனபனியா பத்திரிகைகளும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் இன்று அவரை ""டாப் டென்'' அமைச்சர்கள் பட்டியலில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.

 

· கவி