தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடரும் பேரினவாத ஒடுக்குமுறையினை எதிர்த்து அரசியல் தீர்வை வற்புறுத்தி "மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுப்போம்" எனும் தொனிப் பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி எதிர்வரும் மேதினத்தை முன்னெடுக்க இருக்கிறது.
யாழ் மாவட்டத்தில் வலிகிழக்கு புத்தூரிலும், வன்னி மாவட்டத்தில் வவுனியா நகரிலும் மலையகப் பிராந்தியத்தில் மாத்தளை நகரிலும் மேதின ஆர்ப்பாட்டப் பேரணிகளுடன் கூட்டங்களை நடாத்தவுள்ளது. யாழில் பருத்தித்துறை வீதியின் ஆவரங்கால் சந்தியில் இருந்து மேதினப் பேரணி ஊர்திகளுடன் ஆரம்பித்து புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்து பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெறும். வவுனியாவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாகவுள்ள பிரதான வீதியில் மேதினப் பேரணி ஆரம்பமாகி ஊர்திகளுடன் வவுனியா நகரசபை மண்டபத்தினை வந்தடைந்து பொதுக்கூட்டம் நடைபெறும். மாத்தளை நகரில் கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி பிரதான வீதிகளின் ஊடாக மாத்தளை நகரசபை மண்டபக் கட்டடத்தை வந்தடைந்து கூட்டம் நடைபெறும்.
புத்தூர் மேதினக்கூட்டம் கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா. செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறும் வவுனியாவில் எஸ். டொன் பொஸ்கோ தலைமையிலும், மாத்தளைக் கூட்டம் கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ. மகேந்திரன் தலைமையிலும் நடைபெறும். புத்தூர், வவுனியா மேதினக் கூட்டங்களில் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் பிரதான உரையாற்றுவார். கட்சியின் இளைஞர் அணி, பெண்கள் அணி, தொழிற்சங்க அணி மற்றும் வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகள் உரையாற்றுவார்கள். சந்தோஸ் இசைக்குழுவின் பின்னணி இசையில் புரட்சிகரப் பாடல்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன.
சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்