காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளக்காரன். தன் கரங்களால் நாட்டி நீர்ப்பாய்ச்சி பராமரித்து விளைச்சலாக்கும் சாதாரண வெள்ளரிக்காய் பிஞ்சின் மேல்கூட அவனுடைய உழைப்புடனோ அல்லது நிலத்துடனனோ சம்பந்தப்படாத வேற்று நாட்டவன் முழுஅதிகாரத்தையும் கொண்டுள்ளான் என்ற அவலத்தை அச்சொட்டாகச் சொல்கின்ற இந்த சொற்கோவைகளை அந்த உழைப்பாளியின் வேகும் மனதுக்குள் புகுந்து படம் பிடித்துக் காட்டுகின்ற இந்தக் கலைஞன் யார்?
அதுமட்டுமல்லாமல் உழைக்கும் மக்களின் சொந்த மொழி வழக்கிலேயே தோய்ந்தெழுந்து பிறப்பெடுத்த அவ்வுணர்வுகளை அந்தக் கலைஞன் மீண்டும் உழைக்கும் மக்களுக்கே செய்தியாக்கி அழகிய பாடலாக அவர்களுக்கே வழங்குகின்றானே அந்தக் கலைஞன் எப்பேற்பட்டவன்?
இலட்சோப இலட்சம் அடித்தட்டு மக்களுக்கு, கஷ்டப்பட்டு வாழ்க்கையில் போராடும் மக்களுக்கு கலைஞன் கலை வடிக்கிறானா? அவர்களது வாழ்வின் அவலங்களை துன்பங்களைத் துயரங்களை, உழைப்பை வியர்வையை அடிமை நிலையை தனது படைப்பில் வெளிக்கொணர்ந்து அவர்களில் ஒருவனாகிறானா அவனே; தான் மக்களுக்கான கலைஞன்.
மக்களை கேளிக்கைகளுக்குள் அமிழ்த்தி மூழ்கடித்து அவர்களது சிந்தனைகளை அவர்களது உணர்வுகளை திசைதிருப்பும் கலை, மழுங்கடிக்கும் கலை. போதைப்படுத்தும் கலை. பொழுதுபோக்கும் கலை. மக்களை அவர்களது நடப்பு வாழ்விலிருந்து மயக்கும் மருந்து. உழைப்போர்களது பிரச்சனைகளிலிருந்து அவர்களது சிந்தனைகளை திசைதிருப்பி விடுவதில் யாருக்கு நன்மையோ அவர்களுக்காக கலை வடிவங்களை பண்பாடுகளை சிருஷ்டிக்கின்றனரே அந்தக் கலைஞர்கள் மக்களின் அடிமைநிலையைப் பேண விரும்பும் ஒடுக்குவோரின் மேல் கட்டுமானத்தைக் கட்டிக் காப்பவர்கள்.
மக்களை மயக்கி வைத்திருக்கும் மகுடிக் கலைகளை இன்றைய பெரும்பாலான சினிமாக்கள் தொடங்கி தொடர் நாடகங்கள் வரை கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றன.
மேல்நிலை மாந்தரின் கலாச்சாரங்கள் பண்பாடுகளை அலங்கரிப்பதற்கு படைக்கப்படும், பிரமாண்டமான பொருட்செலவிலும், பட்டிதொட்டியெல்லாம் சென்றடையும் தொழில்நுட்டப வீச்சுகளிலும் தயாரிக்கப்படும் கலை இலக்கிய படைப்புக்குள் வீழ்த்தப்படுவது மக்களது மனங்கள் மட்டுமல்ல, அவர்களது உழைப்போடு பின்னிப்பிணைந்த கிராமிய கலை வடிவப் பொக்கிசங்களும் தான்.
உலகமயமாதல் வியாபகத்தில் திறந்த சந்தையானது நுழைய முன்னர் அங்கு ஏற்கனவே இருக்கின்ற உள்ளுர் கலாச்சாரத்தை அழித்து அதற்குப் பதிலாக நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மக்களை தயார்ப்படுத்த சர்வதேச மூலதனத்துக்கு முன்னமேயே உள்ளே நுழைவது, மக்களைப் பதப்படுத்த கையில் எடுக்கப்படுவது கலை இலக்கியங்களின் பாய்ச்சலே. கிராமிய உள்நாட்டுக் கலைவடிவங்களை அகற்றியோ சிதைத்தே அவற்றுக்குப் பதில் கலை கலாச்சாரப் பண்பாட்டுத்தளங்களில் மக்களை இசைவிக்கும் வகையில் முதன் முதலில் கைவைப்பார்கள். தமக்கேதுவான கருத்துக்களையும் பண்பாட்டு மாறுதல்களையும் உட்புகுத்தி கலைகள் படைக்கப்படும். இளையராஜா இசைக்கும் ஏ.ஆர் ரகுமான் இசைக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடே இதுதான். உலக அழகிகள் கீரிடம் இந்திய பெண்களுக்கு வழங்கப்பட்டது ஒன்றும் தற்செயலானதல்ல. சர்வதேச முதலீட்டின் வருகைக்கான கலாச்சார தடைகளைத் தகர்த்து நுகர்வுக் கலாச்சாரத்துக்கு தோரணம் கட்டுவதற்குத் தான்.
வாழ்வில் அல்லல்படும் அடிநிலை மக்களே மயங்கி மாய்ந்து போகுமளவுக்கு அவை எங்கும் சென்றடைவதற்கான பலம் கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் இனக்குழுமத்தின் கிராமத்தின் தொன்மையான கலைவடிவங்கள் காணாமல் போய்விடுகின்றன. நுகர்வினை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை உருவாக்கும் நவீன கலைஇலக்கியங்கள் எங்கும் வீச்சுடன் பரப்பப்படுகின்றன.
இந்த மேன்மக்களது "வாழ்வு இலட்சணங்களை" அவர்களது செழிப்புகளை தம் உழைப்பால் உருவாக்கும் உழைப்பாளிகளோ கடைநிலை மாந்தர்களாக இழிவுக் கலாச்சாரங்களில் உழலுபவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். மக்களாலேயே உருவாக்கபட்டு மக்களது வாழ்வில் பின்னிப்பிணைந்து போய்விட்ட உயிரோட்டமான கலைகள் அவை நடனம் நாடகம் இசை கூத்துக்கள் என எவையாயிருப்பினும் தரக்குறைவானதாக தாழ்த்தப்படுகின்றது. நாடகங்கள் கூத்துக்கள் வில்லுப்பாட்டு நடனம், ஆட்டம் பாட்டம் என மக்களாலேயே சொந்தமாக நிகழ்விக்கப்பட்டு வந்த இந்தக் கலைகள் இருந்த இடத்தினை, இன்று ஆக்கிரமித்து இருக்கும் இணைய வழி சினிமா மற்றும் தொடர் நாடகங்கள் மற்றும் ஊடகங்கள் என்ன பேசுகின்றன? மக்களின் நாளாந்த வாழ்விலிருந்து விலத்தி நின்று இந்த ஊடகங்களின் இலாப நோக்குக்கும் அதனை ஆட்டிப்படைக்கும் மூலதன அதிகார அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கும் ஏற்றவாறு காட்சிகள் கருத்துக்களோடு மக்கள் எண்ணங்களைத் திசைதிருப்பும் சங்கதிகளோடு தாண்டவமாடுகின்றன.
இந்த மண்ணில் எதனையும் செய்யாமல் மாடிகளையும் கோடிகளையும் அநுபவிப்போருக்கு அவர்களது கலாச்சாரத்தை பண்பாட்டை கேளிக்கைக் கலையாமெனப்படைப்பவர்களை எவ்வகைக் கலைஞர் என்பது? இவற்றையே ஓய்வின்றி இடைவிடாது படைக்கும் கலைஞன் எதற்காகப் படைக்கின்றான்? இவன் எந்த வகைப்பட்டவன்?
உழைத்து, ஓய்ந்து, களைப்பிலிருந்து மீளவும், கூட்டுழைப்பில் மகிழவும் சமூகஅநீதிகளைச் சாடவும் கிளர்ச்சி செய்யவும் அழைக்கும் கலைப்படைப்புக்களை, அவர்களது சூழ்நிலைக்கு வெளியில் ஒரு கலைஞன் வாழ் நேர்ந்தாலும் கூட அவர்களது உணர்வுகளோடு ஒன்றி உள்வாங்கி மக்களிடமிருந்தே கற்று மீள மக்களுக்காகவே படைப்பானாயின் அவன்அந்த மக்களுக்கான ஒரு போராளி.
ஏனெனில் அவனது படைப்புக்கள் போராட்டத்தை கிளர்ச்சியைத் தூண்டுவன. இருக்கும் சமுதாய அமைப்பைப் பாதுகாக்க அந்தக் சமூக அமைப்பினை மீறி மக்களை சிந்திக்காவண்ணம் முடக்கி வைக்கும் ஒடுக்குமுறைக்கரங்கள் இந்த மக்கள் கலைஞர்கள் மீது பாய்ந்தேயாகும்.
ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தின் கலையம்சங்கள் அநீதிகளைப் பேசுபவை. தங்களது வாழ்வின் துயரங்களைப் பேசுபவை. மக்கள் கலைவடிவங்களை வரித்துக்கொண்டு அதனை ஆக்ரோசமான எதிர்ப்புக்குரலாக கலைவடிவங்களில் அவற்றை உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் விதைக்கும் கலைஞன் போராடும் மக்களது தோழனாகின்றான். மக்களை மயக்குவது அவனது கலையல்ல. எழுச்சியை மக்களது விழிப்புணர்வை கலைவடிவங்களில் அவன் தாங்கி வருகின்றான் அந்த மக்களின் இயல்பான சொந்த கலை வடிவங்களுடாகவே அவை வெளிப்படுகின்றன. இந்த மக்கள் கலைஞன் தன்னை கலைஞன் என்பதை விட போராளியாகவே வெளிப்படுத்துவான். தனது கலைத்திறமையை அது ஒரு போராட்டக்கருவி என்பதற்கு மேல் அவன் அதற்கு பெறுமதி வழங்குவதில்லை. கலைஞர்கள் கலை கலைக்கானது என்று அவர்கள் கோசமிடமாட்டார்கள். கலை என்றுமே மக்களுக்கானது என்பார்கள். அவர்களது கலைவடிவங்களின் உயரிய நோக்கம் விடுதலை என்பதாகும்.
அன்றைக்கல்ல இன்றைக்கும் "காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்" இன்றைய உலகமயமாக்கல் பொருளாதாரத்துக்குள் அடிமைப்பட்டு தேசச்செல்வங்கள் கொள்ளையிடப்படுவதை இன்றைக்கும் அழகாக எடுத்துச் சொல்கின்றன இந்த வரிகள்.
ஒரு நடிகன் அல்லது கலைஞன் தன்னுடைய கலைத்திறமையை வெறும் நடிப்புக்காக அல்லது கலைக்காக வெறுமனே விற்றுப் பணமாக்குவதற்கும் தனது கலைப்படைப்புகள் சொல்லும் கருத்துக்களோடு ஒன்றியிருக்காத பல கலைஞர்கள் மத்தியில் மக்களுக்காகவே கலை வடித்து அவற்றையே நிஜவாழ்விலும் வரித்துக்கொண்ட மாபெரும் கலைஞன் தன்னுடைய கலைப்படைப்புக்களை பேராடும் கருவியாகவே வெளிப்படுத்திய நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் கேட்கிறார்.
"எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா?
எனக்குச் செவிகொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவு செய்து கேளுங்கள்: ‘துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனிதகுலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக் குலைநடுங்கும் அற்ப மனிதர்களால்தான் துன்பம் வருகிறது. இனி மனிதர்களுக்கு இடையே உள்ள குரோதங்கள் மறைந்து விடும். சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித் தரும் விடுதலை என்றுமே அழியாது!…..
வீரர்களே! அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்! விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம்! வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால் நாம் ஓரணி சேருவோம்! (நன்றி புதிய ஜனநாயகம் ஏப்ரல் 1989)
"Turn of the Lights" என்ற திரைப் படத்தில் அவர் அறைகூவல் மட்டும் விடுக்கவில்லை. அவர் தனது ஊடக நேருரைகளிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தனது முழு வாழ்விலும் மக்களுக்கான ஒரு கலைஞனாக திகழ்கிறார். தமிழ் தென்னிந்திய திரைப்படங்களுக்குள் தலைகளை அடகு வைத்தவர்களுக்கு இது சமர்ப்பணம்.
எங்கள் தேசத்தில் என்றைக்குமே கலை மக்களுக்காகவே என்ற அடி ஆதாரத்தில் நின்று இன மத பேதங்கள் கடந்த மக்களின் சுபீட்சத்தை கலை இலக்கிய களத்தில் நின்று மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் கலைஞர்களின் போராட்டம் வலுப்பெற்றிருக்கவில்லை. இனப்பிளவுக்கு எதிராகவும், இன ஜக்கியத்தையும் கட்டியமைக்கும் கலைஞர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கவில்லை. மாறாக இனவுணர்வுகளுக்கு ஆகாயப்பந்தலில் ஊஞ்சல் கட்டிய கலைகள் பிரசவித்தன. அதில் கலைஞர்களாக குளிர்காய்ந்தவர்கள் மக்களுக்கெனப் படைத்தவர்களின் குரல்வளையை நெரித்து அடக்கினார்கள்.
நிலமைகளை மாற்றுவோம்.
"ஊரான் ஊரான் தோட்டத்திலே ஓருத்தன் வைச்சான் வெள்ளரிக்கா. காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி இனி காகிதம் போடானாம் வெள்ளைக்காரன்."