சைமன் விமலராஜன் முன்னாள் போராளி . தமயந்தி என்ற பெயரில் அறியப்பட்ட கவிஞன் புகைப்பட கலைஞன். தற்போது நோர்வேயின் ஓலசுண்ட நகரில் வாசித்து வருகிறார். தீவகத்தின் மெலிஞ்சிமுனைக் கிராமத்தைச் சேர்த்த இவர் தனது இளமைக் காலத்திலேயே தேர்ச்சி பெற்ற தென்மோடிக் கூத்துக் கலைஞர். ஆனந்தசீலன், தாவீது கொலியாத், ராஜகுமாரி, புனித செபஸ்தியார், மந்திரிகுமரன் போன்ற கூத்துகளில் இவரின் பாட்டும் நடிப்பும் இவரை ஒரு கவனிக்கத்தக்க கூத்துக்கலைஞனாக வெளிக்காட்டியது.
யுத்தம் காரணமாகவும், சமூக அக்கறையற்ற போக்காலும் அழிவுற்று வரும் இலங்கையின் பராம்பரிய கலைகளில் ஒன்றான தென்மோடிக் கூத்துக் கலைக்கு புத்துயிர்ப்புக் கொடுப்பதுடன், நவீன மயப்படுத்துவதிலும் முன்னிலைச் சக்தியாக செயற்பட்டு வருகிறார் அண்ணாவி சைமன் விமலராஜன்.
சமவுரிமை இயக்கத்தால் ஐப்பசி மாதம் பாரிஸ் நகரில் நடாத்தப்பட்ட இன-மத ஐக்கியத்தை வலியுறுத்தும் அனைத்து இனக்கலைவிழாவில் இவரால் இயற்றப் பெற்ற ஏகலைவன் கூத்து மேடை ஏற்றப்பட்டது.
இதை யொட்டி போராட்டம் பத்திரிகை அவருடன் உரையாடிய சில மணிகளின் தொகுப்பு:
போராட்டம்: உழைக்கும் தமிழ்மக்களின் கலையியல் வாழ்வில் மிக முக்கியமானது கூத்துக் கலை. இதில் பலவகைகள் உண்டு? அவைகளைப் பற்றி.....
சைமன்: இலங்கைத்தீவின் தமிழ்ப் பிரதேசங்களைப் பொறுத்தவரை தென்மோடி, வடமோடி, காத்தான் கூத்து, வட்டக்களரி என இன்னும் பல தொன்மையான கூத்துக்கள் உண்டு. அந்தந்தப் பிரதேசங்களுக்கேயுரிய சிறப்புக்களுடனும், மக்கள் செய்து வந்த தொழில்களின் சிறப்புத் தன்மைகளைப் பிரதிபலிப்பதாகவும் கூத்துக்கள் வெவ்வேறு வடிவங்களில் ஆடப்பட்டு வந்தன. உதாரணத்துக்குச் சொல்வதானால் கரையோர மக்கள் கடற்தொழிலை செய்து வந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் நெய்தல் நிலத்துக்கேயுரிய அம்பாப் பாடல்கள் என்பன தொழில் புரியும் சமயங்களிலும் பாடப் படுவதுண்டு.
அந்தப் பாடல்களைக் கட்டியவர்கள் படித்தவர்களோ, கவிஞர்களோ அல்ல. படிப்பறிவே அற்ற சாதாரண பாமர உழைக்கும் மக்கள். தமது வாழ்நிலைகள் பற்றியும், தொழில் பற்றியும், அலையுடன் போராடும் அவலங்கள் பற்றியும், நாள்முழுதும் அலையாடியும் உலையில் போட எதுவும் கிட்டாது கரை திரும்பும் சோகம் பற்றியும், கிராமத்தலைவர்கள் என்பவர்கள் கரையில் நின்றபடியே மீனவர்களின் உழைப்பைச் சுரண்டும் கொடுமைகள் பற்றியும், தமது காதல் பற்றியும்... இப்படி வாழ்வனுபவங்களை அலைகளின் தாளத்துக்கு இசைத்துப் பாடுவார்கள். இதிலொரு சின்ன உதாரணம் சொல்லலாமென நினைக்கிறேன், அதாவது கடலடியிலும், காற்றிலுமாக வள்லம் வலித்துச் சென்று கரை திரும்பிய ஒரு மீன இளைஞனுக்கு அவனது நெஞ்சு நோவுக்கு அந்த இளைஞனின் முறைப்பெண்ணானவள் மருந்திடுவதாக ஒரு அம்பாப் பாடல்.
"காரைவேர் கரி, நொச்சி, கத்தாளை, கதம்பை வேர், தும்பை, காஞ்சோண்டி வேரும், தேனிலே கொஞ்சம் விட்டுக் குழப்பி, மார்பிலே மருந்திட்டாளே வள்ளி, மார்பிலே மருந்தை இட்டு மயக்காதே போடி...." இப்படி அமைந்த அந்தப் பாடலில் காதலியானவள் தன்னில் எவ்வளவு கரிசனை கொண்டவளாக இருக்கிறாள் என்பதை தொழில் நேரத்தில் சக தோழனுக்குச் சொல்லிப் பெருமைப் படுவது மட்டுமல்ல, அவளைச் செல்லாமகாச் சீண்டுவது உட்பட, உடல்வலிக்கு மக்கள் தாம் சுயமாகவே செய்யும் மூலிகை மருந்து வகைகளையும் சொல்கிறார்கள். இவ்வகைத் தொழிற் பாடல்களையெல்லாம் இந்த உழைக்கும் மக்களுக்கு எந்தக் கற்றறிந்தவரும் ஏட்டிலெழுதி, இசையமைத்துக் கொடுக்கவில்லை.
மக்கள் தங்கள் சுய அனுபவங்களிலிருந்து கட்டிய பாடல்கள். இவற்றின் ஒருமுகப்படுத்தப்பட்ட கலை வடிவங்கள்தான் கூத்துக்கள். இதேபோன்று காட்டிலும், மலையிலும், வயல்களிலும், மரங்களிலும், சுமை சுமக்கும்போதும் என வெவ்வேறு வகை தொழில்களைச் செய்யும் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வனுபவங்களைத் தொழில் நேரங்களில் தனிப் பாடல்களாகவும், ஒருங்கிணைந்த வடிவங்களாக கூத்துக்களாகவும் பாடி வந்துள்ளனர்.
முன்னைய காலங்களில் அரங்கமோ, மேடைகளோ, திரைகளோ அமைப்பதில்லை. சமதரையில் மக்கள் வட்டமாகக் கூடியிருக்க மத்தியில் களரி அமைத்து கூத்துக் கலைஞர்கள் எல்லா திசைகளிலும் சுற்றிச் சுற்றி பாடி ஆடி நடிப்பார்கள்.
மக்களுக்கும் கலைஞர்களுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்தன. கூத்தர்கள் மக்கள்முன் தம்மையும், தமது பாத்திரம் என்ன என்பதையும், பாத்திரத்தின் குணாதிசயங்கள் என்ன என்பதையும் முதலிலேயே சுய அறிமுகஞ் செய்து சொல்லி விடுவார்கள். இதனூடாக பார்வையாளர்களுக்கும், கூத்தர்களுக்குமான நெருக்கத்தை நாம் உணர முடியும்.
இதன் பின்னால் நவீனமாக்கப் பட்ட வடிவம்தான் கொட்டகைக் கூத்துக்கள். உயர்ந்த மேடை அமைத்து, திரைச்சீலைகள் தொங்கவிட்டு, பக்கவாத்தியம், பிற்பாட்டுக்கள் போன்றவற்றை மறைவில் இருத்தி இந்த வடிவங்கள் அறிமுகமாயின.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்றும் மிகத் தொன்மையான வட்டக்களரிக் கூத்துக்கள் ஆடப்பட்டு வருகின்றன. வடமாகாணத்தைப் பொறுத்தவரை தென்மோடிக் கூத்துக்களே பரவலாக உள்ளன. நகரம் சார்ந்த இடங்களில் தென்மோடிக் கூத்துக்களில் கர்நாடக இசைகள் ஓரளவு கலந்துள்ளன என்றாலும், தீவகம் போன்ற இடங்களில் மிகத் தொன்மையான தென்மோடிக் கூத்துக்கள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன்.
போராட்டம்: அடிபடையில் கூத்துக்கலை பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட- உழைக்கும் மக்களில் கலையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதி மக்களே இன்றுவரை அதைக் காப்பாற்றி வந்துள்ளனர். ஆனால், கூத்துகளை பயன்படுத்திப் புகழ் பெற்றோர் ஆதிக்க சமூகத்தவராகவே உள்ளனர். காரணமென்ன ?
சைமன்: இந்தத் திட்டமிட்ட துர்ப்பாக்கியம் காலகாலமாகவேதான் நடந்து வருகின்றன. கலைகளில் மட்டுமல்ல அனைத்து விடையங்களிலும்தான். இது கூத்துக்கலை பற்றிய உரையாடல் என்பதால் அதற்கு மட்டும் சொல்கிறேன்.
ஐம்பது, அறுபதுகளுக்கு முந்தைய காலங்களில் கூத்துக் கலையை ஆதிக்கசாதியினரோ, அதன் வழித்தோன்றல்களான கற்றோர்களோ அல்லது அதிகாரங்களில் இருந்தவர்களோ கூத்துக் கலையை தள்ளி வைத்தே பார்த்து வந்திருக்கிறார்கள். கூத்துக் கலையையும் தமது வாழ்வின் ஓர் அங்கமாக நினைத்து வாழ்ந்துவந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை இந்த ஆதிக்கத்தினர் தங்கள் பொழுதுபோக்கிற்காக அழைத்து கோடிப்புறங்களில் ஆடவைத்துப் பார்ப்பார்கள்.
அறுபதுகளுக்குப் பிந்தைய காலத்தில் வானொலி போன்ற தொடர்பு சாதனங்கள் நகரம்சார் கலைஞர்களை மிக இலகுவாக எட்டியது. அதிலும் இந்த ஊடகங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியோர் நகரம்சார் ஆதிக்கசாதியினரும், அவர்களின் கல்வியாளர்களுமாகவே அதிகமாக இருந்தனர். அதிகாரங்களின் கைகளிலிருந்த தொடர்பு சாதனங்கள், ஆதிக்கசாதியினர் என்ற இன்னொரு அதிகாரக் கூட்டத்தை உயர்த்தி வைப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தானே?! அதேவேளை வானொலி போன்ற தொடர்பு சாதனங்கள் வந்த பின்னாலும், அவற்றைப் பற்றிய கரிசனைகளே இல்லாமல் தமது பாட்டிற்கு கூத்துக்கலையை வளர்த்த அண்ணாவிகளும், கலைஞர்களும் அதற்காகவே காலம் முழுவது வாழ்ந்து அறியப் படாமலேயே செத்தும் போனார்கள்.
தவிர, 70களின் பின் கூத்துக்கலை கல்விசார் நுண்கலையாக கொண்டுவரப் பட்டபின், வியாபாரக்கல்விச் சமூகத்துக்குரிய ஒரு அம்சமாக கூத்துக்கள் இடம் பிடித்து விட்டன என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ கூத்துக்களை வகுப்பறைக் கட்டிடச் சுவர்களுக்குள் கற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது அவர்களுக்கு. சமதரையில் வட்டக்களரி அமைத்து ஆடிய கூத்துக்கள், உயர்ந்த மேடைகளில் அரங்கேற்றப்பட்டு, இப்போ வளாகங்களின் பீடங்களில் வந்து நிற்கிறது. நல்லதுதான். மறுக்கவில்லை. ஆனால் கேள்வியில் கேட்டதுபோல் இங்கும் ஆதிக்கசாதியினரின் கையகப்படுத்தல்கள் இருக்கிறதுதான்.
பரதக் கலையைக் கட்டிக் காத்து வந்ததேவதாசிகள் என்ற முறை ஒழிக்கப்பட்டு, அந்தக் கலையை ஆதிக்கசாதிகளான பார்ப்பனர்கள் கையகப்படுத்தி இன்று அதையொரு வியாபாரப் பொருளாக்கி உலகம் முழுவது பணமீட்டுகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரையும் கூத்துக் கலைக்கு இதுதான் நடக்கப் போகின்றது. பரதக்கலையை தம் கையகப்படுத்தியதில் ஆதிக்கசாதியினரான பார்ப்பனர்களுக்கு இரண்டு இலாபங்கள்.
ஒன்று: சாமிகளின் பெயரால் சாதிகளை வலுவாக வளர்க்கவல்ல மதப் பிரச்சாரங்களையே இதன்வழியாகப் பிரச்சாரிப்பது,
இரண்டு: இந்தியாவிலும், புலம்பெயர் நாடுகளிலும் சமூக அந்தஸ்த்துக்கான கலைப்படிப்பு இதுவெனச் சொல்லி கலைவிற்பனை செய்வது.
மீண்டும் சொல்கிறேன். எங்கள் தொன்மைக்கலையான கூத்துக் கலைக்கும் இந்த அவலம்தான் நடக்கத் தொடங்கியுள்ளது.
போராட்டம்: சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் 50.களின் ஆரம்பத்திலேயே தீவகத்தில் வீரியம் பெற்றது . அப் போரட்டங்களுக்கு கூத்தும் ஒரு காரணமாக இருந்தது. விபரம் கூற முடியுமா ?
சைமன்: இதனை இப்போ யார்தான் பேசப் போகிறார்கள்....? மீண்டும் சொல்கிறேன் நகர் சார்ந்த பிரச்சனைகளைத் தவிர குக்கிராமங்களில் நடக்கும் எந்த நல்லது கெட்டதும் ஊடகத் தொடர்பு சாதனங்களுக்கோ, நகரத்துக் கற்றோர்களுக்கோ, நகர்வாழ் சமூகப் போராளிகளுக்கோ தெரிய வருவதில்லை. அதுபற்றிய அக்கறைகளும் அவர்களுக்கு இருந்ததில்லை. நகரங்களிலிருந்து சிலர் நோகாமல் புரட்சி செய்தார்களே தவிர, குடிக்கத் தண்ணீர்கூட இல்லாத பின் தங்கிய கிராமங்களுக்குப் போய்ப் பணியாற்ற வேண்டுமென்ற தலையெழுத்து அவர்களுக்கு இல்லைத்தானே. சரி விசயத்துக்கு வருகிறேன்.
1950களில் கரம்பொன் என்ற ஊரிலுள்ள செபஸ்தியார் ஆலயத் திருவிழாவின்போது மீன்பிடித் தொழிலாளியான அண்ணாவி அவுறான் என்பவர் தனது கலைஞர்களுடன் கூத்து ஒன்றினை மேடையேற்றினார். அந்தக் கூத்தில் வரும் அரசன் பாத்திரமாகவும் அவர் நடித்திருந்தார். அவர் அரசனாகச் சிம்மாசனத்திலிருக்கும் காட்சியினை அந்த ஆலயத்தின் பெரும்பான்மை ஆதிக்கசாதிகளான கத்தோலிக்க வெள்ளாளர்களால் பொறுக்க முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
"திமிலனுக்குச் சிம்மாசனமோ, எங்கள் எதிரிலேயே" எனக் குழப்பம் விளைவித்து கூத்து இடை நிறுத்தப்படவே, அப்போது அங்கு பங்குக்குரவராக இருந்த பாதிரியார் (அவரும் இந்த ஆதிக்கசாதிக்காரர்தான்) கூத்தை இடை நிறுத்தக்கூடாது, மழை வராமல் போய்விடும் எனவே கூத்தை நடாத்துங்கள் எனக் கட்டளையிட்டார். சிம்மாசனத்துக்குப் பதிலாக உரலில் அமர்ந்திருந்து அரசன் கூத்துப் பாடியும் முடித்தாயிற்று. அதன் நீட்சியாக ஆதிக்கசாதியினருடனான முரண்கள் மீனவ மக்களுக்கு அதிகரித்து 1956ம் வருடம் மிகப் பெரும் சண்டையாகி, அதிலிருந்து பிரிந்து மீனவ மக்கள் தமக்கெனக் கட்டிக் கொண்டதுதான் மெலிஞ்சிமுனை என்ற கிராமம். இது மிகப் பெரும் கதை. மிகச் சுருக்கமாகச் சொல்லியுள்ளேன்.
போராட்டம்: உங்களைக் கவர்ந்த கூத்துக் கலைஞர்கள், அண்ணாவியார்களைப் பற்றி .... அதற்கு முன் "அண்ணாவி" என்பதன் அர்த்தம் என்னவென்பதையும் கூறுங்கள்.
சைமன்: என்னைக் கவர்ந்த பல கலைஞர்கள் பலர் இருக்கின்றார்கள். மெலிஞ்சிமுனை, நாவாந்துறை, தம்பாட்டி, கரையூர், பாஷையூர், மன்னார் என அதிகம்பேர் இருக்கிறார்கள். ஆனாலும் எனது ஆசானாக நான் நினைப்பதெல்லாம் அண்ணாவி கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களைத்தான். எனது தந்தையார் உட்பட பல உறவுகளிடமிருந்து நான் கூத்தை அறிந்திருக்கின்றேன். ஆனால் அண்ணாவி அந்தோனி அவர்களை மிக வியப்போடுதான் இன்றுவரை பார்க்கிறேன். ஏட்டறிவு என்பது அவருக்கு அப்போ ஐந்தோ, ஆறாம் வகுப்புவரை என்றுதான் அறிகிறேன். ஆனால் அவரது பாடல்கள் பல என்னை இப்போதும் ஆச்சரியப்பட வைக்கின்றன. இராகங்களின் மூலைகளில் போய் முட்டிக்கொண்டும், துருத்திக்கொண்டும் நிற்காத மிக நேர்த்தியான சொற்கட்டுக்கள் அமைந்த கவிதைகள் அவருடையன.
தவிர மத்தள, கைத்தாள அண்ணாவிகளை நெறிப்படுத்தும் விதமும், பிற்பாட்டுக் கலைஞர்களைத் தேர்வு செய்வதில் காட்டும் அக்கறையும், கலைஞர்களை அந்தந்தப் பாத்திரங்களுக்கேற்றாற்போல் தேர்வு செய்யும் உத்தியும், கூத்தைச் சொல்லிக்கொடுக்கும் பக்குவமும், பாங்கும், கண்டிப்பும்.... அது அவருக்கே தனித்துவமானது. மேலும் அவர் கூத்துக் கலைஞனாக மட்டுமல்ல, கிராமத்தின் பன்முக ஆளுமை கொண்ட பணியாளனாக வாழ்ந்து மறைந்தவர். அப்படியானவர்களையே அண்ணாவிமார் என்று சொல்வதுதான் சரியானது.
போராட்டம்: கூத்துக்கலைக்கும், தமிழுக்கும் ஒரே வயது என்று அறிஞர் பல கூறுகின்றனர். இந்துக் கடவுள் - ஆதி மூலமான சிவனைக் கூடக் கூத்தன் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வளவு தொன்மையான கலையை நவீன மயப்படுத்தமுடியுமா ? நவீனப் படுத்துவதில் உள்ள சவால்கள் என்ன ?
சைமன்: என்னைப்பொறுத்தவரை இது ஒரு சிரிப்பூட்டக்கூடிய கேள்வி, ஆனால் பொறுப்பாகப் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
கூத்து என்பது மொழி தோன்றுவதற்கு முன்பே தொடங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆதிமனிதர்கள் மிருகங்களுடன் வேட்டையாடி அதைக் கொன்று வென்றபோது வெற்றிக்களிப்பில் ஆனத்தக் கூத்தாடியதுதான் முதற் கூத்து என்பேன் நான். அதன் பரிணாம்தானே கூத்து இல்லையா...?
மொழியைக் கண்டுபிடித்தார்கள், இயற்கை ஒலிகளிலிருந்து இசையைப் பெற்றார்கள், மிருகத்தின் தோல்களிலிருந்து முழங்கும் கருவிகளைக் கட்டினார்கள், இவற்றின் ஒருங்கிணைந்த வடிவம்தானே கூத்து?!
சரி, சிவனோ அல்லது யாரோ ஒரு மூத்த கலைஞன் கூத்துக் கலையை நெறிப்படுத்தி, அதனை மெருகூட்டிச் சிறப்பித்திருக்கலாம். அதற்கான அத்தனை சாத்தியப்பாடுகளும் உண்டு மறுக்கவில்லை. அதேவேளை இந்தப் பிந்தைய மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மதங்களும், மதத்தின் ஆதிமூலவர் எனச் சொல்லப்படும் கடவுளரும்தான் கூத்துக்கும் தலைவன் என மோசடிக் கதைகள் விடுவது இந்த மத ஆதிக்கர்கள் கட்டி விடும் கூத்தாகவே நான் பார்க்கிறேன். வேடிக்கையைப் பாருங்கள், கூத்துக்குத்தலைவன் எனக் கடவுளைச் சொல்லிக்கொண்டு, அந்தக் கடவுளையே எங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் இவர்கள், இடுப்பில் புலித்தோலைக் கட்டி, மனிதச் சாம்பலை உடல் முழுக்கப் பூசி, சுடலையில் அல்லவா கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறார்கள். இதன் உளவியல் என்ன...? கூத்தாடுபவன் இழிவானவன் என்பதுதானே?!
இவ்வளவு தொன்மையான கலையை நவீன மயப்படுத்தமுடியுமா? முடியும். காலத்துக்குக் காலம் கூத்து நவீனமயப் படுத்தப்பட்டுக்கொண்டுதான் வந்திருக்கின்றன. ஆரம்பத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.
கூத்தை நவீனமயப்படுத்துவதில் சவால்கள் என பெரிதாக எதுவுமில்லை. அரங்காற்றுப் பிரதிகளின் பாடுபொருட்களை நாம் மாற்றியாக வேண்டும். மக்களைச் சுடும் பிரச்சனைகளைப் பேச வைக்க வேண்டும். அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்துக்களை அழகியலோடு சொல்ல வேண்டும். கூத்து ஒன்றும் புரட்சி செய்யாது. ஆனால் கூத்து மட்டுமல்ல, கலை இலக்கியம் என்பவை மக்களைப் புரட்சிக்குத் தயார்ப்படுத்த வல்லன என நான் நம்புகிறேன்.
சவால்கள் எனச் சொல்லுமிடத்து ஒன்றை மட்டும்தான் நான் சொல்ல முடியும், அதாவது இன்றுள்ள மக்கள் தொடர்புசாதனங்கள் எனச் சொல்லிக் கொள்பவை முதலாளித்துவ நலன்கள் சார்ந்து இயங்குபவை. அவை மக்களை என்றும் சிந்திக்க விடாதவை. மிக மோசமான பிற்போக்குக் கருத்துக்களையும், கற்பனாவாதக் கட்டுக்கதைகளையும், ஆதிக்கங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதின் சுகங்களையும் மிக நாசூக்காக தொடர்கள் என்ற பெயரில் வீட்டுக்குவீடு புகுந்துகொண்டு பிரச்சாரம் செய்கின்றன. இவை உலகின் அத்தனை தொழில்நுட்ப வசதிகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. இவற்றோடு போட்டிபோட்டு மக்களை எமது கலைப்ப்படைப்புக்களைத் தேடி நகர்த்தி வருவதென்பதுதான் சவால்.
போராட்டம்: இன்று நவதாராள பொருளாதாரம், இனவாதம், இனஒடுக்குமுறை, சாதியஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை எனப் பலதரப்பட்ட தளத்தில் மக்கள் போராட்ட முனைப்புகள் தேசத்தில் முன்னெடுக்கப்படுகிறதே. இம் முனைப்புகளுக்கு ஏற்றாற் போல் மக்கள் சார் கலை இலங்கியங்கள் மறுபடியும் மறு பிரதிப்படுத்தப் பட வேண்டியுள்ளது. இதில் கூத்தை எவ்வாறு மக்கள் போராட்டங்களுக்கு உடந்தையாக உருமாற்றுவது ?
சைமன்: முடியும். இன்றைய தேவையும், பணிகளும் இவைதான் என்பது கூத்துக் கலைஞர்கள் முன்னால் எழுந்து நிற்கின்றது. மக்கள் மத்தியிலிருந்து வளாகச் சுவர்களுக்குள் போய் முடங்கியுள்ள கூத்து மீண்டும் மக்கள் முன் கொண்டுவரப்பட வேண்டும். முன்னைய காலங்களில் கூத்தில் மக்களும் பங்காளிகளாக இருந்தனர். இப்போ அந்த நிலை இல்லை. பாடுபொருட்களைக் காலத்துக்கும், சமூகத்தின் தேவைகளுக்கும் ஏற்றாற்போல் தேர்தெடுக்க வேண்டும். 1950களில் அண்ணாவி அந்தோனியின் பாடல் ஒன்று:
"பிச்சை போடும் அண்ணமாரே....
பெரும் பசியால் வாடுகின்றேன்
அன்னமுண்ணக் கைகளில்லை
ஆடை கட்ட மார்கமில்லை
என்ன செய்வேன் அண்ணமாரே
என் வயிறு வாடுதிப்போ"
இத்தனை காலங்கள் கடந்தும் இந்தப் பாடல் சமகால இலங்கைத் தமிழ் மக்களின் கையறு நிலையைச் சொல்கிறதல்லவா? அது மட்டுமல்ல உலகத்தின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் நிற்கிறதல்லவா? இங்கேதான் மக்களுக்குரிய கலைஞன் என்றால் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது.
மேலும், பாடுபொருள் தவிர வடிவங்கள். பட்டி தொட்டியெல்லாம் புகுந்து வரக்கூடிய வடிவமும் எங்கள் மக்களிடம் இருந்திருக்கின்றன. அதுதான் தெருக்கூத்து. 80களில் போராட்ட காலத்தில் தெருக்கூத்தின் மீள்வருகை கணிசமான பங்களிப்பைச் செய்தன. தமிழகத்தில் நாடக ஆசிரியர் தோழர் பிரளயன் இந்தத் தெருக்கூத்து வடிவத்தை மிக அற்புதமாகப் பயன்படுத்தி வருகின்றார். போராட்டகாலக் கலைவடிவங்கள் பிரமாண்டத்தை விட்டு இலகுபடுத்தப்பட்ட வடிவமாக ஆக்கப்பட வேண்டும். அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் கலாநிதி ஜெயசங்கர் மிகப் பாரிய கூத்து முயற்சிகளைச் செய்து வெற்றிகள் கண்டுள்ளார்.
போராட்டம்: நிறைவாக, சமவுரிமை இயக்கம் ஒடுக்கப்பட்ட அனைத்து இன மக்களின் ஒன்றிணைவுக்கன செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது . உங்கள் கருத்து ?
சைமன்: நல்லது. இவை இன்றெமது தேசத்தைப் பொறுத்தவரை இன்றியமையாத தேவையும்கூட. இது கலை பற்றிய உரையாடல் என்பதால் ஒன்றை முன் வைக்கலாமென நினைக்கிறேன். பன்மொழிக் கலைஞர்களை, பன்முக ஆளுமை கொண்ட முற்போக்குக் கலைஞர்களை ஒன்றிணைத்து, பிரச்சார இயக்கமாக மாற்றும் பணிகளையும் சம உரிமை இயக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். வணக்கம்!
"பிச்சை போடும் அண்ணமாரே....
பெரும் பசியால் வாடுகின்றேன்
அன்னமுண்ணக் கைகளில்லை
ஆடை கட்ட மார்கமில்லை
என்ன செய்வேன் அண்ணமாரே
என் வயிறு வாடுதிப்போ"