கடவுள் ஆறுநாளில் உலகத்தைப் படைத்து களைச்சுப் போய் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை லீவு எடுத்தார் என்று உலகம் தோன்றிய வரலாற்றை அறிவியல் பூர்வமாக விளக்குகிறது ஒரு சமயம். சுட்ட களிமண்ணால் மனிதன் படைக்கப்பட்டான் என்று மனிதர்களின் மண்டைக்குள் களிமண்ணை போட்டு அடைக்கிறது ஒரு சமயம்.
மோகினி வேடம் போட்ட விஷ்ணுவின் மேல் மோகம் கொண்ட சிவன் காய்ஞ்சமாடு கம்பிலே விழுந்தது போல விஷ்ணுவின் மேலே பாய அய்யப்பன் பிறந்தான் என்று இரு ஆண்களிற்கு குழந்தை பிறந்த பரிசோதனை முயற்சியை பக்தியோடு விளக்குகிறது ஒரு மதம். சிங்கத்திற்கும், மனிதப்பெண்ணிற்கும் பிறந்தவர்களின் வாரிசுகள் தான் சிங்களவர்கள் என்று பெருமிதத்தோடு சொல்கின்றன இலங்கையின் பவுத்த புராணங்கள்.
இந்த பகுத்தறிவிற்கு ஒவ்வாத, பைத்தியக்காரத்தனமான கதைகளை நாம் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். சிரிப்பு வந்தால் அடக்கிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் கொலை செய்வார்கள். இந்தக் கேலிக்கூத்துக்களை சொன்னவர்களை கேலிச்சித்திரம் வரைந்தால் துடிக்க துடிக்க கொல்வார்கள். உலகம் தட்டை என்று தீர்க்கதரிசிகள் சொல்வது பொய், புராணப்புளுகு; உலகம் உருண்டையானது என்று விஞ்ஞானி அறிவியலின் துணை கொண்டு நிறுவினால் மரணதண்டனை விதிப்பார்கள்.
"சார்லி எப்டோ" சஞ்சிகை மீது முஸ்லீம் மதவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதல்கள் மதப்பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். இந்த மூடர்கள் சொல்வது போல் கடவுள் எல்லையற்றவன்; அவனாலேயே இந்த உலகம் படைக்கப்பட்டது என்றால் கேலிச்சித்திரக்காரர்களை படைத்தது கடவுளின் குற்றம் இல்லையா?. இந்த முட்டாள்கள் கேலிச்சித்திரக்காரர்களை படைத்த கடவுளைத் தானே அதற்காக தண்டிக்க வேண்டும். சர்வவல்லமை படைத்த கடவுள் என்று இந்த முட்டாள்களால் சொல்லப்படுபவனை நாலைந்து கோடுகளால் வரையப்பட்ட ஒரு சித்திரம் அவமானப்படுத்துகிறது என்று சொல்வதைப் பார்க்கும் போது ஆனந்தவிகடனில் அரசியல்வாதியைப் பார்த்தால் கள்ளனைப் போல் இருக்கிறது என்று கார்ட்டூன் போட்டதற்காக ஆசிரியரை சிறையில் போட்ட எம்.ஜி.ஆரின் கோமாளித்தனம் தான் நினைவுக்கு வருகிறது.
பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் எழுதிய "மாதொருபாகன்" என்ற நவீனம் இந்து சமயத்தை இழிவு செய்கிறது என்று இந்துமத வெறியர்கள் கூச்சல் போடுகிறார்கள். திருச்செங்கோட்டுக் கோவில் சிவனையும், பெண் பக்தர்களையும் பெருமாள் முருகன் கேவலப்படுத்துகிறார் என்று சொல்லி புத்தகத்தின் பிரதிகளை கோயிலிற்கு முன்னால் எரித்துள்ளார்கள். பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.ஏஸ் ரெளடிகளும் கொங்கு வேளாள சாதி வெறியர்களும் அவரிற்கு கொலைமிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
"எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள் முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான். எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான். அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி" என்று மனமுடைந்து போய் பெருமாள் முருகன் அறிவித்திருக்கிறார்.
தமிழரின் உழைப்பில் கட்டப்பட்ட சிதம்பரம் கோயிலில் தமிழில் தேவாரம் பாடக் கூடாது என்று பார்ப்பன தீட்சித நாய்கள் ஊளையிட்டபோது இவனுகளிற்கு அது தமிழனை அவமானப்படுத்தியதாக தெரியவில்லை. காவல்நாய் தேவாரமும், அவனது அதிரடிப்படையும் மலைவாழ் பெண்களை வன்முறை செய்தபோது இவனுகளிற்கு அந்தப்பெண்களின் அவலம் கண்ணிலே படவில்லை. தென்கொரிய முதலாளி தமிழ்நாட்டில் வைத்து தொழிலாளியை அடித்தபோது இவனுகள் மூச்சே விடவில்லை.
பெருமாள் முருகனிற்கு ஆதரவாக எழுத்தாளர்கள், கலைஞர்கள் நடத்திய ஊர்வலத்தின் போது தமிழ்நாட்டு பொலிஸ் நாய்கள் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை காட்டின. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற கொள்ளைக்கூட்டத்திற்கு வாலாட்டும் இந்த நாய்கள் எழுத்தாளர்களிற்கு முன்னால் பற்களைக் காட்டி உறுமுகிறார்கள். கள்ளச்சாராயக்காரர்கள், கந்துவட்டிக்காரர்கள், சாதிச்சங்க குண்டர்கள் போடும் எலும்புத் துண்டுகளிற்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் இந்த நாய்கள் தமிழிற்கு வளம் சேர்ப்பவர்களை, அறிவு என்னும் ஆயுதம் ஏந்துபவர்களை அதட்டுவதன் மூலம் அடக்கி விடலாம் என்று கனவு காணுகின்றன.
வத்திக்கான், பிலிப்பைன்ஸ், லெபனான் போன்ற நாடுகள் டான் பிரவுண் எழுதிய "டா வின்சி கோட்" என்ற நவீனத்தை தடை செய்தன. ஜேசு கிறீஸ்து, மரியா மக்தலேனா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர்களிற்கு குழந்தை பிறந்தது என்று அவர் வரலாறும் புனைவும் சேர்ந்த கலவையாக எழுதியதற்காக இந்த நாடுகள் புத்தகத்தை தடை செய்தன. கத்தோலிக்க மதவெறியர்கள் புத்தகத்திற்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள்.
மதவாதிகள் தங்களினுடைய முட்டாள்தனங்களை தங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவைகள் வெறும் நம்பிக்கைகளே தவிர எந்த விதமான ஆதாரமும் அற்றவை. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. ஏழை மக்களிற்கு எதிரானவை. அவர்களை மதம் என்னும் மயக்கத்தில் வைத்திருப்பதன் மூலம் அவர்கள் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடாமல் மதவாதிகள் பார்த்துக் கொள்கிறார்கள். பாலஸ்தீனத்தில் குழந்தைகளைக் கூட கொல்லும் இஸ்ரேலிய பிரதம மந்திரி, ஈராக்கின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிப்பதற்காக இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் டேவிட் கமரோன், இன்று கூட பல நாடுகளை காலனித்துவ அடிமைகளாக வைத்திருக்கும் பிரான்சின் பிரான்சுவா கொலன்டே என்று மக்கள் விரோதிகள் கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற இந்த மதவெறியர்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
சாதி வெறியர்களை, சமய பயங்கரவாதிகளை,இனவெறியர்களை,பெண்ணடிமைத்தனம் பேசும் ஆணாதிக்கப் பன்றிகளை ஓட ஓட விரட்டுவோம். சாதி, இனம், மதம், ஆண்-பெண், ஏழை பணக்காரன் என்ற பிரிவினைகள் இல்லாத சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நிலவும் உலகினைப் படைத்திட ஒன்று சேருவோம்.