july_2007.jpg

தில்லி நகரத்தின் அழகையும், சுற்றுப்புறச் சூழலையும் மெருகூட்டும் பொருட்டு, இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்ற திட்டத்தின்படி, அந்நகரின் வர்த்தக மையமான சாந்தினி சௌக் பகுதியில் ரிக்ஷா மற்றும் தள்ளுவண்டிகள் இயக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நகரின் தெருவோரச் சிற்றுண்டி

 விடுதிகள் சுகாதார கேட்டினைப் பரப்புவதாகக் ""கண்டுபிடித்து'' அவற்றையும் மூடிவிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லியில் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ""சூப்பர் ஸ்டோர்''களைத் திறந்து நடத்துவதற்காக, ஆயிரக்கணக்கான சிறுநடுத்தர கடைகளை இழுத்து மூடிய பிறகு தொடுக்கப்பட்டுள்ள அடுத்த தாக்குதல் இது.

 

மும்பையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறச் சேரியான தாராவியை 9,300 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மகாராஷ்டிர அரசு. இதனால் தாராவியில் வசித்துவரும் 6 இலட்சத்துக்கும் அதிகமான ஏழைநடுத்தர மக்கள்; அங்கு இயங்கிவரும் 5,000 சிறு தொழில்கள்; அத்தொழில்களை நம்பியிருக்கும் 50,000 தொழிலாளர்கள் வேரோடு பிடுங்கியெறியப்படும் அபாயம் எழுந்துள்ளது.

 

இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையும், அற்ப உடைமைகளும் நிர்மூலமாக்கப்படுவதை, அழகு என ரசிப்பது வக்கிரமானதில்லையா? பூச்சிக் கொல்லி மருந்து அதிக அளவில் இருக்கிறது என்பது நிரூபணமான பிறகும் ""கோக்''கைத் தடை செய்ய மறுக்கும் நீதிமன்றம், மக்களின் தெருவோர உணவகங்களைத் தடை செய்வது கேலிக் கூத்தானதில்லையா?

 

சேவைத் தொழிலின் வளர்ச்சி கூலித் தொழிலாளர்களைத் தேவையற்றவர்களாக்கி, நகரங்களில் இருந்து துரத்தியடிக்கிறது. மனுதர்மம் கிராமப்புறங்களை ஊர் என்றும், சேரி என்றும் பிரித்தது என்றால், தனியார்மயம் நகர்ப்புறங்களைப் பணக்காரர்களின் அக்ரஹாரமாக்கி வருகிறது. இந்த ""அழகை'' ஆளும் கும்பல் வளர்ச்சி என்கிறது; நாம், உழைக்கும் மக்களின் மீது தொடுக்கப்படும் போர் என்கிறோம்.