Language Selection

புதிய ஜனநாயக மா-லெ கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஏழு லயன்கள் மண்ணிற்குள் புதையுண்டுள்ளன. அதனால் சுமார் முந்நூறு பேர் வரை மண்ணிற்குள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

மிகக் கொடூரமான இம் மண்சரிவுக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாரிய உயிரிழப்புக்களுக்கும் அத்தோட்ட நிர்வாகம் மட்டுமன்றி அரசாங்கமும் பதில் கூறியே ஆக வேண்டும். மலையகத் தோட்டத் தொழிலாளர்களை வெறும் உழைக்கும் இயந்திரங்களாக நடாத்தி அவர்கள் உழைப்பை உறிஞ்சிவரும் தோட்ட நிர்வாகங்களும் அதற்குத் துணைநின்றுவரும் அரசாங்கங்களும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேணடியவர்களாவர். மீட்புப் பணியில் கூட அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எந்தளவிற்கு கரிசனையுடன் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது சந்தேகத்திற்கு உரியதாகும். எனவே மனிதநேயமும் மனசாட்சியும் உள்ள அனைத்துத் தரப்பினரும் இச் சம்பவம் இடம்பெறக் காரணமான தோட்ட நிர்வாகத்தையும் அரசாங்கத்தின் அசட்டைத்தனத்தையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பன்முக உதவிகள் புரிய முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ. மகேந்திரனும் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேலும் கொஸ்லாந்த மீரியப்பெத்த மண்சரிவில் லயன்கள் புதையுண்ட சோக சம்பவம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இத்தோட்டத்தில் மண் சரிவு அபாயம் பற்றி 2005, 2011ம் ஆண்டுகளில் கட்டிட அகழ்வாராய்ச்சி நிறுவகம் முன்னெச்சரிக்கை விடுத்துவந்திருக்கின்றது. அதனைத் தோட்ட நிர்வாகம் அலட்சியத்துடன் கவனிக்கவில்லை. அதனை அரசாங்கம் உரிய காலத்தில் கவனத்தில் எடுத்து தோட்ட நிர்வாகத்தை வற்புறுத்தி அவ்விடத்தில் வாழ்ந்த தொழிலாளர்களுக்கு மாற்றிட வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். அவ்வாறு செய்யாது தோட்டத் தொழிலாளர்கள்தானே என்ற கீழ்த்தர எண்ணத்துடனேயே தோட்ட நிர்வாகமும் அரசாங்கமும் இருந்துவந்திருக்கின்றது. அதேவேளை மலையகத்தின் வாக்கு வங்கியினதும் சந்தாப் பணத்தினதும் உரிமையாளர்களான அரசியற் தொழிற் சங்கத் தலைமைகளும் அபாய எச்சரிக்கையை கவனத்திற்கொண்டு வந்து தோட்ட நிர்வாகத்தையும் அரசாங்கத்தையும் கொண்டு மாற்று நடவடிக்கைகளுக்கு வற்புறுத்தியிருக்கலாம். எனவே இவர்கள் இவ் அனர்த்த உயிரிழப்புகளுக்குப் பதில் கூற வேண்டும்.

மேலும் மலையகத்தோட்டத் தொழிலாளர்களுக்குத் தனிக் காணிகளும் அவற்றில் தனித் தனி வீடுகளும் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்படுவதன் அவசியத்தையே மேற்படி மண்சரிவு சோகச் சம்பவம் எடுத்துநிற்கின்றது. எனவே இனிமேலாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி, வீடு வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கம் முன்வருமா, அதனை ஆட்சிகளில் பங்கேற்கும் மலையகத் தலைமைகள் தமது முதற் கோரிக்கையாக முன்வைப்பார்களா என்பதை மக்கள் தமது முதற் கவனத்திற் கொள்ளவேண்டும் என எமது கட்சி இவ்வேளை சுட்டிக்காட்டுகின்றது.

 
-ஊடகங்களுக்கானஅறிக்கை                       

 30.10.2014